Published:Updated:

"இருவரும் காதலித்தார்கள்... கடமையை நிறைவேற்றினேன்!'' - விஜயதரணி

"இருவரும் காதலித்தார்கள்... கடமையை நிறைவேற்றினேன்!'' -  விஜயதரணி
"இருவரும் காதலித்தார்கள்... கடமையை நிறைவேற்றினேன்!'' - விஜயதரணி

``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் ஒரே குடும்பத்தினர்போல ஒன்றாக வந்தார்கள். மேலும், என் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுச் சென்றது கூடுதல் மகிழ்ச்சி."

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதரணியின் மகள் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மகளின் திருமண நிகழ்வு குறித்துப் பேசுகிறார் விஜயதரணி.

``என் மகள் டாக்டர் அபிராமி கென்னடி, சென்னையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி முதலாம் ஆண்டு படிக்கிறாள். முன்பு வேறு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தாள். அங்கு என் மகளின் சீனியர்தான், மாப்பிள்ளை டாக்டர் தீபக் ராஜதுரை. அவர் தற்போது பணியில் இருப்பதுடன், மேற்படிப்பும் படித்துக்கொண்டிருக்கிறார். இருவரும் காதலித்தார்கள். பெற்றோர் கடமை பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பதுதானே. இருவீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் முடிவானது. நல்ல காரியத்தைத் தள்ளிப்போட வேண்டாமே என்பதால், உடனடியாகத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டோம். 

என் வீட்டில் நடக்கும் முதல் விசேஷம். அதனால், அனைத்துக் கட்சியினர், சினிமா பிலபலங்கள் மற்றும் பல துறை பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தேன். என் வழக்கமான அரசியல், வழக்கறிஞர் பணிகளுக்கு இடையே, இரவு பகலா திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினேன். அதேபோல மாப்பிள்ளை வீட்டாரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சர்ச்சில் கல்யாணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினோம். அழைப்பிதழ் கொடுக்கும்போதே, பல அரசியல் தலைவர்களும் நிச்சயம் வருவதாகக் கூறினார்கள். ஆனாலும், கடைசி நேரத்தில் வேறு முக்கிய வேலைகளால் சிலர் வராமல் இருக்கவும் வாய்ப்பிருக்கும் என நினைத்தேன். ஆனால், அப்படி நடக்கலை’’ என்னும் விஜயதரணி, வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை விவரிக்கிறார்.

``வரவேற்பு நிகழ்ச்சிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக வந்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது உணவு தயாராகவில்லை என்பதால், அவர் சாப்பிடாமல் சென்றார். பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் ஒரே குடும்பத்தினர்போல ஒன்றாக வந்தார்கள். மேலும், என் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுச் சென்றது கூடுதல் மகிழ்ச்சி. மேலும், திருமாவளவன், வீரமணி ஐயா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, வசந்தகுமார் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், என் சீனியர் நளினி சிதம்பரம், பல நீதிபதிகள் உட்பட சினிமா மற்றும் பல துறைப் பிரபலங்களும் வருகை தந்தார்கள். இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வருகை தந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் உட்பட சிலர், அழகிய தமிழ் நடையில் நல்ல வார்த்தைகளைக் கூறி மணமக்களை ஆசீர்வாதம் செய்தது நன்றாக இருந்தது. 

என் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய ஐயா குமரி அனந்தன், வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆகியோர் என் மகள் திருமணத்திலும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். என் அரசியல் ஆசான் திண்டிவனம் ராமமூர்த்தியின் வருகை மற்றும் வாழ்த்தைப் பெருமையாக நினைக்கிறேன். இப்படிப் பல பெரியவர்களின் ஆசீர்வாதம் மணமக்களுக்குக் கிடைத்ததில் இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சி. அரசியல் தளத்தில் பல மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். ஆனால், வந்தவர்கள் அனைவரின் அன்பும் அரசியலுக்கு அப்பாற்பட்ட குடும்ப விழா போன்றது. எந்தச் சிக்கலும் இல்லாமல், திருமணம் நல்ல முறையில் நடந்ததில் இருவீட்டாருக்கும் மகிழ்ச்சி. 

எங்கள் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி மேடம் மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தேன். டெல்லியில் ராகுல்காந்தி, மணமக்களை நேரில் வாழ்த்தினார். இருவராலும் சென்னையில் நடந்த திருமணத்துக்கு வரமுடியவில்லை. ஆனாலும், அவர்களின் வாழ்த்து மடலை, வரவேற்புப் பேனராக காட்சிப்படுத்தியிருந்தோம்’’ என்கிறார்.

மகள் திருமண புகைப்படங்களில் உடல் எடையை குறைத்திருப்பது போல் தெரிகிறதே என்றால்... ``இளமைக்காலத்தில் ஒல்லியாகத்தான் இருந்தேன். திருமணத்துக்குப் பிறகு, உடல் பருமனாகிட்டேன். அத்தோற்றத்தை மாற்ற நினைத்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபாட்டுடன், உடல் பருமனை குறைத்தேன். பலனாக, தற்போது என் தோற்றம் மாறியிருக்கிறது. இப்போது ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் உணர்கிறேன். என் பணிகளில் தற்போது கூடுதல் ஆர்வத்துடன் கவனம் செலுத்த முடிகிறது. மற்றபடி என் உடல் எடைக்குறைப்பில் வேறு எந்தக் காரணமும் இல்லை’’ என்கிறார் விஜயதரணி.

அடுத்த கட்டுரைக்கு