Published:Updated:

பிரதமர் பதவிக்குக் குறி... மம்தா - பா.ஜ.க மோதலின் பின்னணி தகவல்கள்!

மேற்கு வங்கத்தில் சமீப காலமாக பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், அது கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டு வங்கியில் ஏற்படும் சரிவால்தானே தவிர, மம்தாவின் வாக்கு வங்கியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுதான் பா.ஜ.க-வுக்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனவேதான் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அவர் மீதான இமேஜைக் காலி செய்யும் யுக்திகளில் ஒன்றாக சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது.

பிரதமர் பதவிக்குக் குறி... மம்தா - பா.ஜ.க மோதலின் பின்னணி தகவல்கள்!
பிரதமர் பதவிக்குக் குறி... மம்தா - பா.ஜ.க மோதலின் பின்னணி தகவல்கள்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில்,  மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட போர்க்கோலம், ஆளும் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான யுத்தத்தின் முதல் அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. மம்தா மற்றும் பா.ஜ.க இடையேயான மோதலுக்குக் காரணம் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குதான் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் பிரதமர் பதவியை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் காய் நகர்த்தல்களே பிரதானமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காகக் கடந்த வியாழக்கிழமை, சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்குச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீஸார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாகப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும் மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவானது.

போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கண்டனக் குரல் எழுப்பிய  மம்தா, அரசியலமைப்புச் சட்டத்தையும் கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக அறிவித்து, கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில், ஞாயிறு  முதல் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரவே பா.ஜ.க தலைவர்கள் சி.பி.ஐ விசாரணையைத் தீவிரப்படுத்தி இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இதை பா.ஜ.க மறுத்துள்ளது.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அதே சமயம் அவரை சி.பி.ஐ கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 

இந்த நிலையில், மம்தா - மத்திய அரசு இடையேயான மோதலுக்கு, பிரதமர் பதவியைக் குறிவைத்து மம்தா மேற்கொள்ளும் காய்நகர்த்தல்களும், அதை மோப்பம் பிடித்துவிட்ட பா.ஜ.க-வின் முறியடிப்பு நடவடிக்கைகளுமே முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மேற்குவங்கத்தில் எப்படியாவது வலுவாகக் காலூன்றிவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருப்பதால்தான் இந்த மோதல், இந்த அளவுக்கு ஆக்ரோஷ நிலையை எட்டியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில், ஒரு கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகம் தீர்மானிப்பது உத்தரப்பிரதேசம்தான். 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து பா.ஜ.க-வுக்கு எதிராக கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென காங்கிரஸைக் கழற்றிவிட்டு அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். இதனால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சி, வாக்காளர்களை ஈர்ப்பதற்காகப் பிரியங்கா வதேராவை அரசியலில் களமிறக்கியுள்ளது. மேலும், மாநிலக் காங்கிரஸாரை உற்சாகப்படுத்தும் விதமாக கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பொறுப்பாளர் பதவியையும் பிரியங்காவுக்கு வழங்கியது. 

இப்படி இந்த 3 கட்சிகளும் வெவ்வேறு விதமாகத் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் முனைப்புடன் இருப்பதால், 2014-ம் ஆண்டில் கிடைத்த மெகா வெற்றியை இந்த முறை பெற முடியாது என்பதை பா.ஜ.க உணர்ந்துள்ளது. அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை பா.ஜ.க அறுவடை செய்திருந்தது. 

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி தன் பங்குக்கு மேற்கு வங்கத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று மீண்டும் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 34 தொகுதிகளில் திரிணாமுல் வென்றது. அதே எண்ணிக்கை அல்லது அதைவிடக் கூடுதலான எண்ணிக்கையிலான தொகுதிகளை இந்த முறையும் பெற்றால், மோடிக்கு மாற்றாக ஒரு வலுவான தலைவராகத் தன்னையும் முன்னிறுத்திக் கொள்ளலாம் என்பதோடு, தேர்தலுக்குப் பின் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் பிரதமர் பதவிக்கான போட்டியாளர்களில் ஒருவராகத் தானும் உருவாகலாம் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது.

மம்தாவின் இந்தத் திட்டத்தை நன்கு உணர்ந்துள்ள பா.ஜ.க-வும் அது நடந்துவிடக் கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளது. கூடவே, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெறும் 2 இடங்களுக்குப் பதிலாக இந்தமுறை இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கைப்பற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க கருதுகிறது. 2009 தேர்தலில் 6 சதவிகித வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க, 2014 தேர்தலில் 16 சதவிகித வாக்குகளைப் பெற்ற நிலையில், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. அதேசமயம் அந்தத் தேர்தலின்போது ரத்த ஆறு ஓடியது என்று சொல்லும் அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின. 52 பா.ஜ.க-வினர் கொல்லப்பட்டனர். 

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சியினர், தாக்குதல் நடத்துவது, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றுவது காலங்காலமாக நடந்து வருகிறது. 1972-ம் ஆண்டு அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சித் தொடங்கி வைத்த இந்த அத்தியாயத்தை, அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய நிலையில், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் அதையே தொடருகின்றனர்.  

இத்தகைய சூழலில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பது பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மிகக் கடினமான ஒன்று. இருந்தாலும், எப்படியும் இந்தமுறை திரிணாமுல் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற செய்துவிடக் கூடாது எனப் பா.ஜ.க தலைவர் அமித்ஷா தீவிரமாக உள்ளார். அதன் ஒரு பகுதியாகவே சாம, தான, பேத, தண்டம் என அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி மம்தாவுக்கும் அவரது கட்சிக்கும் குடைச்சல் கொடுக்கும் வேலைகளை பா.ஜ.க-வும் மத்திய அரசும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

மேற்கு வங்கத்தில் சமீப காலமாக பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், அது கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டு வங்கியில் ஏற்படும் சரிவால்தானே தவிர, மம்தாவின் வாக்கு வங்கியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுதான் பா.ஜ.க-வுக்குக் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனவேதான் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அவர் மீதான இமேஜைக் காலி செய்யும் யுக்திகளில் ஒன்றாக சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. 

இந்த நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரிக்க வந்த சி.பி.ஐ அதிகாரிகளையே கைது செய்து, மம்தா இப்படி ஒரு அதிரடியை அரங்கேற்றுவார் என்று பா.ஜ.க-வோ அல்லது அதன் கட்சித் தலைவர் அமித் ஷாவோ, பிரதமர் நரேந்திர மோடியோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், மம்தாவுக்கு இதுபோன்ற நிர்வாக ரீதியிலான குடைச்சல்களை ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டே, மறுபுறம் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க முன்னணி தலைவர்களை வரிசையாகக் களமிறக்கி பேரணி, பொதுக்கூட்டம் என நடத்தி அரசியல் ரீதியாகவும் குடைச்சல் கொடுக்கும் வேலைகளையும் அமித் ஷா தீவிரப்படுத்தியுள்ளார். ஆனால், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு, பா.ஜ.க தலைவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கும் மைதானத்துக்கு அனுமதி மறுப்பு என மம்தாவும் பதிலடி கொடுத்து வருகிறார்.   

இரு தினங்களுக்கு முன்னர், மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வரத் திட்டமிட்டார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். அவருக்கு மேற்கு வங்க அரசு அனுமதி தரமறுத்துவிட்டது. இதையடுத்து யோகி, மொபைல் மூலம் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், முர்ஷிதாபாத் நகரில் ஷாநவாஸ் ஹூசைன் தடுக்கப்பட்டதாகவும் பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் மம்தாவின் தர்ணா, அவருக்கு ஆதரவாக அவரது கட்சியினர் நடத்தும் போராட்டங்கள், பா.ஜ.க-வினரின் பதிலடி போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் என மேற்கு வங்க மாநிலத்தில் இப்போதே சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அளவுக்கு நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. இப்பொழுதே இந்த அளவுக்கு மோதல் என்றால், தேர்தல் நெருக்கத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பதைபதைப்பில் உள்ளனர் மேற்கு வங்க மக்கள்!