Published:Updated:

கருணாநிதி இறந்த நான்காவது நாள்! - திருநாவுக்கரசர் - ரஜினி சந்திப்புப் பின்னணி 

நான்கு மாதங்களுக்கு முன்பு திருமாவளவனும் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். ஆனால், ரஜினியைச் சந்தித்தது குறித்து எந்த இடத்திலும் திருமாவளவன் சொல்லவில்லை. செங்கோட்டையன், ராமமோகன ராவ் ஆகியோரும் ரஜினியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

கருணாநிதி இறந்த நான்காவது நாள்! - திருநாவுக்கரசர் - ரஜினி சந்திப்புப் பின்னணி 
கருணாநிதி இறந்த நான்காவது நாள்! - திருநாவுக்கரசர் - ரஜினி சந்திப்புப் பின்னணி 

மிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது ரஜினி-திருநாவுக்கரசர் சந்திப்பு. `மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காகத்தான் சென்றார் ரஜினி. அரசியல்ரீதியாக அதைப் பயன்படுத்திக்கொண்டார் திருநாவுக்கரசர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசரின் இல்லத்துக்கு இன்று காலை சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இம்மாதம் நடக்கவிருக்கும் தன்னுடைய மகள் சௌந்தர்யா திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காகச் சென்றவரிடம், அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார் திருநாவுக்கரசர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அங்கு வந்துவிட்டார். `இந்தச் சந்திப்பில் நாட்டு நடப்புகள், அரசியல் தொடர்பாகப் பேசினேன்' எனச் செய்தியாளர்களிடம் விளக்கினார் திருநாவுக்கரசர். 

``தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்தவரையில் ரஜினியைப் பற்றி திருநாவுக்கரசர் பேசியதில்லை. இன்றைக்கு இந்தச் சந்திப்பை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுவதற்குக் காரணம், அரசியல் ரீதியாக தன்னை வெளிக்காட்டுவதற்காகத்தான்" என விவரித்த ரஜினிக்கு நெருக்கமான ஆதரவாளர் ஒருவர், ``முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்து நான்கு நாள்களுக்குப் பிறகு போயஸ் கார்டனில் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் திருநாவுக்கரசர். போயஸ் கார்டனில் நடந்த இந்தச் சந்திப்புக்குக் காரணம், ரஜினி மகள் சௌந்தர்யா மணமுடிக்க இருக்கும் விசாகன் குடும்பத்துக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. விசாகனின் தந்தை வணங்காமுடியோடு நட்பில் இருக்கிறார் திருநாவுக்கரசர். எனவே, மணமகன் தரப்பு குறித்து விசாரிப்பதற்காக கார்டனுக்கு அவரை வரச் சொல்லிப் பேசினார் ரஜினி. இந்தத் திருமணத்துக்கு கிளியரன்ஸ் கொடுத்ததில் திருநாவுக்கரசருக்கும் பங்கு உண்டு. அதில் ரஜினிக்கும் ரொம்பவே மகிழ்ச்சி. ஆனால், பதவியில் இருந்த காலம் வரையில் ரஜினியை ஆதரித்து திருநாவுக்கரசர் எதுவும் பேசியதில்லை. இந்தச் சந்திப்பு குறித்தும் அவர் வெளியில் சொல்லவில்லை. காரணம், தன்னுடைய தலைவர் பதவிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதால்தான். 

இதற்கு எடுத்துக்காட்டாக சில சம்பவங்களும் நடந்தன. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், `அரசியல் வாழ்க்கையில் 40 ஆண்டுகள்' என்றொரு விழாவை முன்னெடுத்தார் திருநாவுக்கரசர். இந்தக் கூட்டம் நடந்த காலகட்டத்தில் கண் அறுவை சிகிச்சை செய்து கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார் ஸ்டாலின். மிகுந்த சிரமத்துக்கு இடையிலும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் திருநாவுக்கரசர். ஆனால், ரஜினி பெயரை உச்சரிக்கவில்லை.

இதைக் கவனித்த தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், `ரஜினி பெயரையும் குறிப்பிடுங்கள்' என துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தார். இதன்பிறகே ரஜினிக்கும் நன்றி தெரிவித்தார் திருநாவுக்கரசர். அண்ணா அறிவாலயத்தில் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தபோது, ரஜினியும் அங்கு சென்றிருந்தார். அப்போதே ராகுலிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்திருக்கலாம். இதனால் ஸ்டாலினின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும் என்பதால் மௌனம் காத்தார் திருநாவுக்கரசர். இப்போது தலைவர் பதவி போன பிறகு ரஜினியைச் சந்தித்தது குறித்துப் பேசுகிறார்" என ஆதங்கப்பட்டார். 

இதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர், ``இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், ரஜினியைச் சந்தித்ததை அனைவரும் அறிவார்கள். நான்கு மாதங்களுக்கு முன்பு திருமாவளவனும் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். ஆனால், ரஜினியைச் சந்தித்தது குறித்து எந்த இடத்திலும் திருமாவளவன் சொல்லவில்லை. செங்கோட்டையன், ராமமோகன ராவ் ஆகியோரும் ரஜினியைச் சந்தித்துப் பேசியுள்ளனர். மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயுடு, ப.சிதம்பரம் என அனைவருடனும் நட்பில் இருக்கிறார் ரஜினி. மகள் திருமண அழைப்பிதழை ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் கொடுக்க இருக்கிறார்" என்றார் இயல்பாக.