Published:Updated:

`நாளை, மோடியும் அமலாக்கத் துறையால் விசாரிக்கப்படலாம்!' - காங்கிரஸ் பதிலடி

`நாளை, மோடியும் அமலாக்கத் துறையால் விசாரிக்கப்படலாம்!' - காங்கிரஸ் பதிலடி
`நாளை, மோடியும் அமலாக்கத் துறையால் விசாரிக்கப்படலாம்!' - காங்கிரஸ் பதிலடி

``திருமணம் ஆன பின்பும்கூட, பிரதமர் மோடியிடம் அவரது மனைவியுடனான புகைப்படம் இல்லையே'' என்று, தங்கள் மீதான போஸ்டர் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

சோனியா, ராகுலைத் தொடர்ந்து, அரசியலில் களம் காண்கிறார்  பிரியங்கா காந்தி. சமீபத்தில் அவரை கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்து, அறிவிப்பை வெளியிட்டார் ராகுல். பிரியங்காவின் இந்த அரசியல் பிரவேசத்தை காங்கிரஸார் கொண்டாடினார். இதன் ஒருபகுதியாக, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா இணைந்திருக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை பா.ஜ.க-வினர் சர்ச்சைக்குள்ளாக்கினர். பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் சம்பிட், ``நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கிய ராகுலின் புகைப்படமும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய ராபர்ட் வதேராவின் புகைப்படமும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ளது என விமர்சித்தார்.

மேலும், காங்கிரஸின் குடும்ப அரசியல் இது என்றும், ஊழல்வாதிக்கு போஸ்டரா என்பன உள்ளிட்ட விமர்சனங்களைப் பா.ஜ.க-வினர் முன்வைத்தனர். அவர்களின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளார் சஞ்சய் சிங், ``பிரதமர் மோடிக்கு இது துரதிஷ்டவசமான விஷயம். திருமணம் முடிந்தும், அவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் எந்த போஸ்டரிலும், பேனரிலும் இடம்பெறவில்லை. பா.ஜ.க-வினர் விமர்சிக்கும் போஸ்டரில், ராபர்ட் வதேராவும், பிரியங்காவும் கணவன்-மனைவியாக இருக்கின்றனர். அவர்களது உறவு நீடித்து நிலைத்திருக்கும் என நான் நம்புகிறேன். அவர்களது பெயர்களைப் பல்வேறு சர்ச்சைகளிலும் பா.ஜ.க தொடர்புபடுத்திவருகிறது. ஆனால், எதையும் நிரூபிக்க முடியாத சூழலிலேயே பா.ஜ.க இருக்கிறது. இன்று ராபர்ட் வதேரா அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டால், நாளை மோடியும் அமலாக்கத் துறையால் விசாரிக்கப்படலாம்'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.