Published:Updated:

`இது என்ன புதுப் பழக்கம்?' - பா.ம.க கூட்டணிகுறித்து பொங்கிய ஓ.பி.எஸ்

`இது என்ன புதுப் பழக்கம்?' - பா.ம.க கூட்டணிகுறித்து பொங்கிய ஓ.பி.எஸ்
`இது என்ன புதுப் பழக்கம்?' - பா.ம.க கூட்டணிகுறித்து பொங்கிய ஓ.பி.எஸ்

"கார் மேகம் உள்ளவரை, கடல் உள்ளவரை, தமிழ் உள்ளவரை அ.தி.மு.க., தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை!"  இப்படி அறிவித்தவர் வேறு யாருமல்ல, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தான். இன்று மேகத்தையும், தமிழையும் கடலுக்குள் அமுக்கிவிட்டு,  அ.தி.மு.க கூட்டணிக்கு ராமதாஸ் ஓ.கே. சொல்லிவிட்டதாக ராயப்பேட்டை தலைமைக்கழகம் குதூகலிக்கிறது.

கடந்த வாரம், ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில், அ.தி.மு.க-வுடனான கூட்டணிகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் அருள், முதல்வரின் நம்பிக்கைக்குரிய சேலம் இளங்கோவன் ஆகியோர்தான் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருதரப்பு பேச்சுவார்த்தைகுறித்து அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகளிடம் கேட்டோம். "பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற மூன்று பேரும், கட்சிக்கொடி இல்லாத காரில் தைலாபுரம் சென்றனர். வந்தவர்களை ராமதாஸ் நன்றாகவே உபசரித்துள்ளார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதுபோலவே, எட்டு தொகுதிகளை பா.ம.க கேட்டது. தே.மு.தி.க, சரத்குமார், கொங்கு ஈஸ்வரன் என்று பலருக்கும் இடமளிக்கவேண்டியதிருப்பதால், எட்டு தொகுதியை தர முடியாது என்று அ.தி.மு.க தரப்பில் வாதிடப்பட்டது. 

ஆறு தொகுதியும், ஒரு மாநிலங்களவை எம்.பி-யும் தருமாறு ராமதாஸ் கேட்டுள்ளார். நான்கு தொகுதியும், ஒரு மாநிலங்களவை         எம்.பி-யும் தருவதற்கு சம்மதிப்பதாக அ.தி.மு.க தரப்பு கூறியுள்ளது. இழுபறியாகவே சென்ற பேச்சுவார்த்தை, இறுதியில் சுமுகமாக முடிவுற்றது. பா.ம.க கேட்ட 6+1 தொகுதிகளைக் கொடுக்க அ.தி.மு.க சம்மதித்துள்ளது. கூட்டணி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றனர். இந்தக் கூட்டணிக்கு அன்புமணி சற்றும் விரும்பவில்லையாம். அவரை ராமதாஸ் தான் சமாதானப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ம.க-வுடன் தளவாய் சுந்தரம் அணி பேச்சுவார்த்தை நடத்தச் சென்றது முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதாம். விஷயம் கேள்விப்பட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உஷ்ணமாகிவிட்டாராம். இதைவிட அவரை டென்ஷன் ஆக்கிய மற்றொரு விவகாரமும் இருக்கிறது. பேச்சுவார்த்தைக்குச் சென்ற அ.தி.மு.க குழு, தேர்தல் செலவுக்கு ஒரு பெரும் தொகையைத் தருவதாக உத்தரவாதம் அளித்ததோடு, முன்பணமும் கொடுத்துவிட்டு வந்துள்ளார்களாம்.  "அம்மா இருந்த வரைக்கும், அவங்கதானே நம்மைத் தேடி பேச்சுவார்த்தைக்கு வருவாங்க. இது என்ன புதுப் பழக்கம்? அப்பறம் யாரைக் கேட்டு பணம் தர்றதா ஒத்துக்கிட்டீங்க? அமைச்சர்கள் எல்லாம் கொடுத்துடுவாங்களா? நீங்கதானே பேச்சுவார்த்தை நடத்துனீங்க, நீங்களே அந்த தொகையைக் கொடுத்துடுங்க" என்று தளவாய் சுந்தரத்திடமும், சேலம் இளங்கோவனிடமும் பொரிந்து தள்ளியுள்ளார்.

பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்டபடி, விரும்பும் 10 தொகுதிகளின் பட்டியலை பா.ம.க அளிக்க வேண்டும். அதிலிருந்து நான்கு தொகுதிகளை அ.தி.மு.க தலைமை தேர்வுசெய்யும். மற்ற இரண்டு தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்து அளிப்பார். கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தாகும்போது, ஒரு மாநிலங்கலவை எம்.பி பற்றிய ஷரத்துகள் இடம்பெறாது. வாய்மொழி உத்தரவாதம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாம்.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு இணையாக, ஒரு மெகா கூட்டணியை கட்டமைக்கும் முயற்சியில் முதல் வெற்றியாக மாம்பழத்தை பறித்துள்ளது இரட்டை இலை. அன்புமணியை தமிழகம் முழுவதும் ஸ்டாலினுக்கு எதிராக பிரச்சாரத்தில் இறக்க அ.தி.மு.க தரப்பு உத்தேசித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறலாம்.