Published:Updated:

`அரசாங்கம் நடத்த எவ்வளவு கஷ்டப்படுறோம் தெரியுமா?' - கோவையில் புலம்பிய எடப்பாடி

`அரசாங்கம் நடத்த எவ்வளவு கஷ்டப்படுறோம் தெரியுமா?' - கோவையில் புலம்பிய எடப்பாடி
`அரசாங்கம் நடத்த எவ்வளவு கஷ்டப்படுறோம் தெரியுமா?' - கோவையில் புலம்பிய எடப்பாடி

 ‘நாங்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு அரசை நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர வேண்டும். 234 சட்டமன்ற தொகுதிகளையும், 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட மாநிலம் இது. இங்கே பல்வேறு பிரச்னைகள் உருவாக்கப்படுகிறது. சில அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக அப்படியான பிரச்னைகளை உருவாக்குகிறார்கள்" என்று கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.’

கோவை மாவட்டம் மோப்பிரிப்பாளையம் மற்றும் கள்ளப்பாளையம் ஆகிய பகுதியில் 375 ஏக்கரில் கொடிசியாவின் தொழில் பூங்காவை அமைக்கிறது கொடிசியா (கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்). 235 தொழிற்சாலைகளை உள்ளடக்கியதாக உருவாகப்போகும் இந்த தொழில் பூங்காவுக்கான தொடக்க விழா இன்று கோவையில் நடந்தது. இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், பெஞ்சமின் மற்றும் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொழில் பூங்காவுக்கான பணிகளைத் துவக்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த மிகப்பெரிய தொழில் நகரம் கோவை. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக கோவையின் தொழில் வளர்ச்சியில் கொடிசியா (கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்) பங்கு மிக முக்கியமானது. புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வகையிலும்  இப்போது 375 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தொழில் பூங்காவைத் துவங்கியிருக்கிறது கொடிசியா. இந்த தொழிற் பூங்கா அமைப்பதற்குப்பட்ட சிரமங்களை இங்கே... கொடிசியா நிர்வாகிகள் சொன்னார்கள். அதேபோலத்தான் நாங்களும் பல்வேறு கஷ்டங்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தொழில் பூங்கா அமைக்கின்றபோதே இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது என்னும்போது ஒரு அரசை நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர வேண்டும்.  234 சட்டமன்ற தொகுதிகளையும், 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட மாநிலம் இது. இங்கே பல்வேறு பிரச்னைகள் உருவாக்கப்படுகிறது. சில அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக அப்படியான பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். 

அண்மையில்கூட மிகப்பெரிய தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தினோம். அதில்  முதலீட்டாளர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அதன் மூலம் 3 லட்சத்து 431 கோடி ரூபாயை 300 நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.  இதையெல்லாம் சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஒரு நாடு வளர்ச்சிபெற வேண்டுமானால் விவசாயமும் தொழிலும் வளர்ச்சி பெற வேண்டும். அனைவருடைய ஒத்துழைப்பும் இருந்தால்தான் அதைச் செய்ய முடியும்"  என்றவர், ``அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சிறு, குறு தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு உதவுவதற்குத் தயாராக இருக்கிறது இந்த அரசு.  தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஏற்கெனவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்து கொண்டிருந்தவர்கள் பிளாஸ்டிக்  பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் உற்பத்தி செய்யக் கடன் உதவி வழங்குவோம்" என்றார். 

தொடர்ந்துபேசிய அவர், ``கோவை  மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ஒரு வருடத்தில் அது முடிந்துவிடும். கோவை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் விரைவில் துவங்கும். கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு மேம்பாலப் பணிகள் தொழில் வளர்ச்சிக்குப் பெரிய உதவியாக இருக்கும். அதேபோல, கோவை மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக ரூ.2,961 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதொழில்களை ஊக்குவிக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். பெரிய தொழில்களை  ஊக்குவிக்கும்போது, சிறு தொழில்கள் தானாக வளரும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் முதல் இடத்தில் தமிழகம்  இருக்கின்றது" என்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்வார் எனச் சொல்லப்பட்ட  நிலையில்,  தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்கள்.