Published:Updated:

``தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உன்னை ஒழிச்சுக் கட்டுறேன்!’’ - கரூர் ஊராட்சி சபையில் மிரட்டிய ஒ.செ

`` `தி.மு.க ஆட்சிக்கு வரட்டும். உன்னை ஒழிச்சுக் கட்டுறேன்’னு பார்க்கிற இடத்துல எல்லாம் என்னை மிரட்டுறார். மாவட்டச் பொறுப்பாளர் செந்தில்பாலாஜிதான் இவரை தட்டிக் கேட்கணும்’’ என்றார்.

``தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உன்னை ஒழிச்சுக் கட்டுறேன்!’’ - கரூர் ஊராட்சி சபையில் மிரட்டிய ஒ.செ
``தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உன்னை ஒழிச்சுக் கட்டுறேன்!’’ - கரூர் ஊராட்சி சபையில் மிரட்டிய ஒ.செ

`மக்களிடம் செல்வோம்; மக்களிடம் சொல்வோம்; மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற கோஷங்களோடு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் கட்சி சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருவதுடன் கட்சியினரையும் நடத்தச் சொல்லி வருகிறார். இந்த முயற்சி மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட ஒருவர் தாக்கப்பட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள வாழ்வார்மங்கலத்தைச் சேர்ந்தவர் பிச்சை. கடவூர் தி.மு.க ஒன்றியச் செயலாளரான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் பாதை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமசாமிக்கும் இடையேதான் பனிப்போர் மூண்டிருக்கிறது. இதுகுறித்து ராமசாமியிடமே கேட்டோம்.

``எங்க ஊரைச் சேர்ந்தவர்தான் பிச்சை. எங்க ஊர்ல ரெண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். கடைசியாக ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தது அவர்தான். ஆனா, அவர் தன்னைப் பொருளாதாரரீதியாக வளர்த்துக்கவே பொறுப்பில் இருந்தார். ஊர் வளர்ச்சிக்காகச் சிறு துரும்பையும் அவர் கிள்ளிப் போடலை. சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குனு எதையுமே ஊருக்குச் சரியா செய்யலை. அதேநேரத்துல, அவரை யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கவும் விடாம, எல்லாரையும் அடக்கி வச்சுருந்தார். ஆனா, பொது விஷயத்துல ஆர்வமா இருந்த எனக்கு, ஒரு வருஷத்துக்கு முன்பு மக்கள் பாதை அமைப்புல கடவூர் ஒன்றியப் பொறுப்பாளர் பதவி கிடைச்சுச்சு. அதன் மூலமா ஊருக்கு அடிப்படை வசதி கேட்டும், ஊருக்குள்ள டாஸ்மாக் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவிச்சும் நாலைந்து முறை மக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் பண்ணினேன். அப்போவெல்லாம் அங்கு வந்த பிச்சை, 'உனக்கு இது வேண்டாத வேலை. ஊருல என்னை மீறி நீ எதுவும் பண்ண முடியாது'னு பேசினார்.

ஒரு போராட்டத்தின்போது போலீஸுகிட்ட, `இவனைத் தூக்கி உள்ளே வச்சு முட்டிக்கு முட்டி தட்டுங்க சார். நிலைமை சரியாயிடும்'னு சொன்னார். மக்கள், `நல்லது பண்ண நினைக்குற ராமசாமிகிட்ட ஏன்பா பிரச்னை பண்ற'னு சொல்லவும், அங்கிருந்து போனார். ஊருல தன்னால் ஏற்பட்ட அவமானத்தை வெளியில் தெரியவிடாமல் தடுக்கவும், நான் பெரிய ஆளாக ஆகிடக் கூடாதுங்கிற பயத்துலயும் அப்படிப் பண்ணினார். இதற்கிடையில், எங்க ஊருல 10 ஏக்கர் பரப்பளவில் வெள்ளக்குளம் ஏரி இருக்கு. அதுல, மூன்றரை ஏக்கரை பிச்சையின் மாமனாரும் தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான துரைராஜின் உறவினரும் ஆக்கிரமித்து வச்சுருந்தாங்க. ஏரியோட கரைகளெல்லாம் உடைஞ்சு, பல வருஷமா ஏரியில தண்ணீர் தேங்கலை. இதனால, ஊரோட நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்துக்குப் போய்ட்டு. அதனால, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி வாங்கி, சில மாதங்களுக்கு முன்பு எங்க அமைப்பு செலவுல ஒரு லட்சம் செலவு பண்ணி, ஏரியைத் தூர் வாரினோம். கரைகளைப் பலப்படுத்தி 2,500 பனைவிதைகளை விதைச்சோம். ஆனா, `தன் மாமனார் ஆக்கிரமித்த இடம் பழையபடி ஏரியாக மாறிடுமே'னு பி.டி.ஓ-வை உசுப்பிவிட்டு எங்க வேலையைத் தடுத்துட்டார். அதோட, என்னை முடக்குவதற்காக என்மேலயும், என் மனைவி மேலயும் பொய் கேஸ் கொடுக்க வச்சார். இது ஒருபுறமிருக்க, சில தினங்களுக்கு முன்பு கிளைச் செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த எங்க ஊர் ஊராட்சி சபைக் கூட்டத்துல பிச்சையும் துரைராஜும் கலந்துகிட்டாங்க. மக்கள்கிட்ட கேள்வி கேட்க சொன்னாங்க. உடனே நான் எழுந்தேன். ஆனா, `என்கிட்ட மைக்கைத் தர வேண்டாம்'னு பிச்சை சொன்னார்.

நான் வலுக்கட்டாயமாக மைக்கை வாங்க முயற்சி செய்தேன். 'உன்னை யாரு இங்க கூப்புட்டது'னு கெட்ட வார்த்தைகளால என்னைத் திட்டினார் பிச்சை. உடனே, கந்தன்ங்கிறவர், 'அவரைப் பேச விடுங்க'னு சொன்னார். அவரை, கெட்ட வார்த்தைகளால் திட்டிய பிச்சையும் துரைராஜும் இன்னும் சிலரைத் தூண்டிவிட்டு, அவரை அடிச்சு துவைக்க வச்சுட்டார். நான் விடாப்பிடியா மைக்கை வாங்கி, 'நீங்க ஊருக்காக எதையும் செய்யலை. ஏரியை ஆக்ரமிச்சீங்க. அதை, தூர் வாருனா என்னைத் தடுக்குறீங்க. என்மேல பொய் கேஸ் போடுறீங்க. ஊர்ல அடிப்படைத் தேவைகளுக்காகப் போராட்டம் பண்ணினா, 'இவனைக் கைது பண்ணுங்க'னு போலீஸை வச்சு மிரட்டுறீங்க. இது நியாயமா? ஏன், இப்படிப் பண்றீங்க? மக்கள் முன்னாடி சொல்லுங்க'னு சொன்னேன். உடனே பிச்சை, காதுல கேட்க முடியாத அளவுக்கு மோசமான கெட்ட வார்த்தைகளால பேசினார். 'நீ யாருடா இத கேட்க'னு என்னைக் கேட்டு மிரட்டினார் . 'நான் ஊரோட பிரஜை. அதோட, தி.மு.க தொண்ட'னு சொன்னேன். உடனே பாய்ந்து வந்த துரைராஜ், என்னைக் கீழே தள்ளிவிட்டார். தி.மு.க-வைச் சேர்ந்தவங்க என்னை அடிக்க வந்தாங்க. நான் அங்கிருந்து வந்துட்டேன். 'தி.மு.க ஆட்சிக்கு வரட்டும். உன்னை ஒழிச்சுக் கட்டுறேn'னு பார்க்கிற இடத்துல எல்லாம் என்னை மிரட்டுறார். மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிதான் இவரை தட்டிக் கேட்கணும்’’ என்றார் வேதனையோடு.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு கடவூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் பிச்சையிடம் பேசினோம். ``அவர், சொல்றதெல்லாம் பொய். அவர் ஒரு சரியான பிராடு. அவர், ஓர் ஆளே கிடையாது. அவருக்குச் சரிசமமா நின்னு பேசினா, என் மரியாதை போயிடும்னுதான் நான் ஒதுங்கிப் போறேன். ஆனா, அவர் வம்படியா மறுபடியும் மறுபடியும் என்னை வம்புக்கு இழுக்கிறார். அவர், போராட்டம் பண்ணியபோது, நான் அங்க போனதே இல்லை. உண்மையில், அவர் ஊருக்கு நல்லது பண்ண நினைச்சா, நான் அதை எப்படித் தடுப்பேன்? இவ்வளவு பேசுறவர், ஊர்ல ரோடு சரியில்லை. போட வேண்டியதுதானே? லைட் இல்லை. எரியவைக்க வேண்டியதானே? சுயலாபத்துக்காக என்னை வம்பிழுத்து, அதுல அவர் பெரிய ஆளாகப் பார்க்கிறார். வெள்ளக்குளம் ஏரியை என் மாமனார் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார் என்பது அபாண்டமான பொய். உண்மையில், அந்த ஏரியின் மொத்த பரப்பளவே மூன்றரை ஏக்கர்தான். பத்து ஏக்கரெல்லாம் இல்லை. அதுக்கு என்கிட்ட ரெக்கார்டு இருக்கு. அந்த ஏரியைத் தூர் வாரி, பனை விதையை விதைச்சதா சொல்லி இருக்காரே... வந்து பாருங்க, ஒரு பனைவிதைகூட முளைக்கலை. அவர் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க’’ என்றார்.