Published:Updated:

திருப்பூரில் மோடி... தீவிர ஆலோசனையில் பி.ஜே.பி.!

எந்தெந்த மாநிலங்களுக்கெல்லாம் பிரசாரம் செல்கிறாரோ, அப்போதெல்லாம் அந்தந்த பகுதிகளின் பாரம்பர்ய உடைகளை அணிந்துகொள்ள ஆர்வம் காட்டிவருகிறார். அதேபோல திருப்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் மோடி தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி - சட்டை அணிந்து கொண்டுதான் மேடையேறப்போகிறார் என்ற தகவலும் உலா வருகிறது.

திருப்பூரில் மோடி... தீவிர ஆலோசனையில் பி.ஜே.பி.!
திருப்பூரில் மோடி... தீவிர ஆலோசனையில் பி.ஜே.பி.!

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் தேர்தல் கூட்டணிக் கணக்குகளை ஆராயத் தொடங்கிவிட்டார்கள். ஆளும் கட்சியான பி.ஜே.பி-யும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறது. இத்தனை வருடங்களாகக் கடல் கடந்து பயணித்துக்கொண்டிருந்த பிரதமர் மோடியும் இப்போது இந்திய மாநிலங்களை நோக்கிய பிரசாரப் பயணங்களுக்குத் துள்ளிக் குதித்துக் கிளம்பிவிட்டார். 

கடந்த ஜனவரி 27-ம் தேதி தென் தமிழகப் பகுதியான மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர், தற்போது பிப்ரவரி 10 -ம் தேதி கொங்கு மண்டலப் பகுதியான திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். 10 நாள்கள் இடைவெளியில் மீண்டும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு மோடி வருகை தருவது பி.ஜே.பி-யினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் பல்வேறு அரசியல் கட்சிகள், பெரியார் இயக்கங்கள் திருப்பூரில் மும்முரமாகத் தயாராகிக்கொண்டு இருக்கின்றன.

பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள வாஜ்பாய் திடலில் மோடி உரையாற்றுகிறார். அதற்கு முன்பாக மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்துகொள்கிறார். இரண்டு நிகழ்வுகளுக்கும் சேர்த்து ஒரே மைதானத்தின் வெவ்வேறு பகுதிகளில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலப் பி.ஜே.பி நிர்வாகிகள் முதல் மேலிடப் பொறுப்பாளர்கள் வரை பலரும் நேரில் வந்து மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்ட வண்ணம் இருக்கிறார்கள். அத்துடன் நிகழ்ச்சி குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனைக் கூட்டமும் நடத்திவருகிறார்கள்.

மோடியின் திருப்பூர் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் குறித்து பி.ஜே.பி-யின் சில முக்கிய நிர்வாகிகளுடன் பேசினோம். ``தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இந்து அமைப்புகள் மிகவும் பலமாக இருக்கின்றன. அதனாலேயே இப்பகுதிகளில் எப்போதுமே பி.ஜே.பி-க்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக, மத்தியில் பி.ஜே.பி-யின் ஆட்சி அமைந்ததும், தமிழகத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் திருப்பூர், கோவைப் பகுதி மக்களுக்கே அதிகளவு மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்கச் செய்திருக்கிறோம். இப்பகுதி தொழில்துறை சார்ந்த முக்கிய அமைப்புகளிலும் எங்களது ஆதரவாளர்களே ஆளுமை செலுத்திவருகிறார்கள். இப்படிச் சகலவிதத்திலும் எப்போதுமே பி.ஜே.பி-க்கு பாசிட்டிவான பகுதியாக விளங்கும் கொங்கு மண்டலத்தில் ஜி.எஸ்.டி பிரச்னை மட்டுமே பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. அதனால், இங்கு இருக்கிற செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் தற்போது எங்களுக்கு உள்ளது.

எப்படியும் நாங்கள் அ.தி.மு.க-வுடன் அணி சேரும் வாய்ப்புகள்தான் அதிகம். எனவே, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவும் எங்களோடு இணையும் பட்சத்தில், மோடிஜியின் இந்த வருகை பி.ஜே.பி-யின் பலத்தை மற்ற கட்சிகளுக்குக் காட்டத்தான் போகிறது. ஏற்கெனவே, எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொங்குமண்டலத்தின் பெருந்துறைப் பகுதிக்குத்தான் கொண்டுவர முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால், இறுதியில் மதுரையைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். இப்போதும் நாங்கள் கவலைப்படவில்லை. மோடியின் திருப்பூர் வருகையின்போது நீங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இப்பகுதி சார்ந்து பிரமாண்ட அறிவிப்புகள் வெளியாகும் எனத் தலைமையில் இருந்து தெரிவித்திருக்கிறார்கள். இனி எங்களது ஆர்வமெல்லாம் அந்த அறிவிப்புகள் குறித்துத்தான்’’ என்றார்கள். 

இவைவெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மோடி எந்தெந்த மாநிலங்களுக்கெல்லாம் பிரசாரம் செல்கிறாரோ, அப்போதெல்லாம் அந்தந்த பகுதிகளின் பாரம்பர்ய உடைகளை அணிந்துகொள்ள ஆர்வம் காட்டிவருகிறார். அதேபோல திருப்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் மோடி தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி - சட்டை அணிந்து கொண்டுதான் மேடையேறப்போகிறார் என்ற தகவலும் உலா வருகிறது. இதுபற்றி பி.ஜே.பி கோட்டப் பொறுப்பாளர் பாயின்ட் மணியிடம் பேசினோம், ``மோடிஜி வெள்ளை வேட்டி சட்டை அணிந்துகொண்டு வர வேண்டும் என்ற எங்களது விருப்பத்தைத் தலைமைக்குச் சொல்லியிருக்கிறோம். அதேபோல பொதுக்கூட்டத்துக்கு திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மொத்தம் 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து மட்டும் பி.ஜே.பி-யினர் வந்தால் போதும் என்றும் உறுதியாகச் சொல்லியிருக்கிறோம். ஓர் ஊரில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து ஆட்களைத் திரட்டிக் கூட்டி வர நாங்கள் ஒன்றும் முன்புபோல் கிடையாது. பிஜே.பி வளர்ச்சியடைந்த கட்சி" என்று முடித்துக்கொண்டார்.

திருப்பூரில் நடைபெறும் பி.ஜே.பி பொதுக்கூட்டத்தின்போதே, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் தனியாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்படக் கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொள்ளப் போகிறார்கள். அன்றைய தினம் நெருப்பெரிச்சல் மற்றும் பலவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. அத்துடன் அடுத்தகட்ட அரசியல் கணக்கும் தீர்மானிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.