Published:Updated:

`ஜெயிக்கப் போவது துரைமுருகனா...ஆ.ராசாவா?' - ராமதாஸுக்காக அறிவாலயத்தில் மோதல்

`ராமதாஸுக்கு 5.5 சதவிகிதம் வாக்குவங்கி இருக்கிறது. அவர் நம்மோடு இருந்தால் வடமாவட்டங்களில் நல்ல வெற்றியைப் பெற்றுவிடலாம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், இப்படியொரு முயற்சி நடப்பதை பொன்முடியும் ஆ.ராசாவும் விரும்பவில்லை.

`ஜெயிக்கப் போவது துரைமுருகனா...ஆ.ராசாவா?' - ராமதாஸுக்காக அறிவாலயத்தில் மோதல்
`ஜெயிக்கப் போவது துரைமுருகனா...ஆ.ராசாவா?' - ராமதாஸுக்காக அறிவாலயத்தில் மோதல்

பா.ம.க-வைக் கூட்டணிக்குள் சேர்ப்பது தொடர்பாக தி.மு.க-வுக்குள் மோதல் வெடித்துள்ளது. `துரைமுருகனும் ஜெகத்ரட்சகனும் ராமதாஸ் மீது பாசத்தில் உள்ளனர். ஆனால், ஆ.ராசா உட்பட வடக்கு மண்டல மா.செ-க்கள் பலரும் ராமதாஸ் வருவதை விரும்பவில்லை. இதை ஸ்டாலினிடமும் தெளிவுபடுத்திவிட்டனர்' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. `தமிழகத்தில் வலுவான அணியைக் கட்டமைக்க வேண்டும்' என்ற முனைப்பில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் செயல்பட்டு வருகின்றன. தி.மு.க அணியில் காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. அ.தி.மு.க-வோடு பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், வடசென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத் திறப்பு விழாவுக்கு வந்த அன்புமணி ராமதாஸ், `கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது' எனத் தெரிவித்தார். அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவது போன்ற தோற்றத்தை அன்புமணியின் பேட்டி வெளிக்காட்டியது. இதுதொடர்பாக, பா.ம.க-வின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, `அ.தி.மு.க, தி.மு.க மட்டும் அல்ல, தினகரன் வந்தாலும் அவர்களுடன் பேசுவோம். எங்களுடைய வலிமையைக் காட்டக் கூடிய தேர்தலாக இதைப் பார்க்கிறோம்' என விளக்கம் அளித்தனர். 

இந்தச் சூழ்நிலையில், பா.ம.க கூட்டணி தொடர்பாக தி.மு.க-வுக்குள் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி தி.மு.க தலைமையிடம் பேசிய வடக்கு மாவட்டங்களின் செயலாளர்கள் சிலர், `நமது கூட்டணிக்குள் பா.ம.க-வை சேர்த்துக்கொள்ள வேண்டாம். தற்போது அ.தி.மு.க பிளவுபட்டுள்ள சூழலில் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிரான மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். இதன் காரணமாக, வடமாவட்டங்களில் நாம் எளிதாக வெற்றி பெறுவோம்.

ஜெயலலிதா இல்லாத சூழலில், வடக்கு மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அ.தி.மு.க வாக்குகளை தினகரன் பிரிப்பார். அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி அமைந்தாலும் சேலம், தருமபுரி ஆகிய 2 தொகுதிகளைத் தவிர, வேறு எங்கும் நமக்குப் பிரச்னைகள் இல்லை. அவர்களைக் கண்டு நாம் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. பா.ம.க, வி.சி.க இல்லாமலேயே 2016 தேர்தலில் நல்ல வெற்றியைப் பெற்றோம். நமது கூட்டணியில் சாதிக் கட்சிகள் இல்லாமல் இருப்பதே நல்லது. ஒருவேளை இவர்கள் தி.மு.க-வோடு சேர்ந்து வெற்றி பெற்றாலும், நாளை நம்மைப் பயன்படுத்தி மத்திய அமைச்சர் ஆவதற்கும் முயற்சி செய்வார்கள். அட்டவணை சமூக மக்கள் மத்தியில் பா.ம.க-வுக்குக் கடுமையான எதிர்ப்பு உள்ளது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்' என விவரித்துள்ளனர். 

அறிவாலயத்தில் நடக்கும் மோதல் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``பொருளாளர் துரைமுருகனும் ஜெகத் ரட்சகனும்தான் பா.ம.க-வோடு கூட்டணி வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். இதைப் பற்றி ஸ்டாலினிடம் பேசிய இவர்கள் இருவரும், `ராமதாஸுக்கு 5.5 சதவிகிதம் வாக்குவங்கி இருக்கிறது. அவர் நம்மோடு இருந்தால் வடமாவட்டங்களில் நல்ல வெற்றியைப் பெற்றுவிடலாம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், இப்படியொரு முயற்சி நடப்பதை பொன்முடியும் ஆ.ராசாவும் விரும்பவில்லை. ஸ்டாலினுக்கும் பா.ம.க-வைச் சேர்த்துக் கொள்வதில் உடன்பாடில்லை. துரைமுருகன், தன்னுடைய மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்படியொரு முயற்சியை எடுக்கிறார்.

`பா.ம.க இருந்தால் இந்த வெற்றி சாத்தியமாகும். டி.ஆர்.பாலு மகன் ராஜா போல தன்னுடைய மகனையும் அரசியலில் நிலைநிறுத்திவிடலாம்' எனக் கணக்கு போடுகிறார். அவரது முயற்சிக்குத் தடை போடும் சில மா.செக்கள், `வடக்கு மாவட்டங்களில் பா.ம.க வெற்றி பெறக் கூடிய தொகுதிகளை மட்டுமே நம்மிடம் கேட்பார்கள். மற்ற மண்டலங்களில் பா.ம.க-வுக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை. சீட்டுகளைப் பெறுவதிலும் முரண்டு பிடிப்பார்கள். அவர்களை நம்மோடு சேர்த்துக் கொண்டு எதற்காக ஒரு சான்ஸ் எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இந்த விஷயத்தில் ஸ்டாலின் எந்த முடிவுக்கும் வரவில்லை. சீனியர்களின் நெருக்குதலால் கடும் கோபத்தில் அவர் இருக்கிறார்" என்றவர், 

``தி.மு.க-வோடு கூட்டணி குறித்துப் பேசுவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம், அ.தி.மு.க-விடம் பேரம் பேசும் தன்மையை பா.ம.க அதிகப்படுத்திக் கொள்வதாக தி.மு.க தலைமை நினைக்கிறது. `பா.ம.க-வை நம்மோடு சேர்த்துக் கொண்டால் சுயமரியாதைக்கே இழுக்கு' என நேரிடையாக விமர்சித்தார் ஆ.ராசா. இதற்கு மேலும் அவர்களை அணிக்குள் சேர்த்துக் கொண்டால், தி.மு.க-வின் சுயமரியாதைக்குத்தான் இழுக்கு எனக் கட்சி நிர்வாகிகளும் பேசத் தொடங்கிவிட்டனர். இந்த மோதலில் வெற்றி பெறப் போவது துரைமுருகனா... ஆ.ராசாவா என அறிவாலயத்தில் விவாதமே நடந்து வருகிறது" என்றார் நிதானமாக.