Published:Updated:

`சொத்துக்காக டார்ச்சர் செய்கிறார்!’ - எடப்பாடி பழனிசாமி மைத்துனர் மீது பகீர் புகார்

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனக் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரிப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`சொத்துக்காக டார்ச்சர் செய்கிறார்!’ - எடப்பாடி பழனிசாமி மைத்துனர் மீது பகீர் புகார்
`சொத்துக்காக டார்ச்சர் செய்கிறார்!’ - எடப்பாடி பழனிசாமி மைத்துனர் மீது பகீர் புகார்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஸ்ரீ பி.எஸ்.ஜி கல்லூரி குழுமம், ஸ்ரீ சண்முகம் பஸ் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ், சங்ககிரி ஸ்பின்டெக்ஸ் ஸ்பின்னிங் மில்ஸ் எனப் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர் மணி. பாரம்பர்யமிக்க இவர் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வெங்கடேஷ் நில அபகரிப்புச் செய்ய முயல்வதாகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இது குறித்து குழுமங்களின் தலைவர் மணியிடம் பேசினோம். ``1998-ம் வருடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவின் உறவினர் மோகனிடம் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கொங்கணாபுரம் பிரிவு ரோட்டின் ஓரமாக சுமார் 2.5 ஏக்கர் நிலம் வாங்கி அதை எங்க அண்ணன் சண்முகம் பெயரில் சுத்த கிரயம் செய்திருந்தோம். அந்த நிலம் 20 வருடமாக எங்கள் பராமரிப்பில் இருந்து வருகிறது. 5 மாதத்துக்கு முன்பு எங்க கல்லூரிக்கு வந்த முதல்வரின் மைத்துனர் வெங்கடேஷ் அந்த நிலத்தைக் கொடுக்கும்படி கேட்டார். எங்களுக்குச் தேவைப்படுவதால் கொடுக்க முடியாது'ன்னு சொல்லிட்டோம்.

அதன் பிறகு 3 மாதம் கழித்து 19.12.2018-ம் தேதி சங்ககிரி டி.எஸ்.பி அசோக்குமார் எங்கள் மீது மோகன் நில மோசடி புகார்  கொடுத்திருப்பதாகக் கூறி ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார். உறவினரின் மரணத்தில் இருந்ததால் போகவில்லை. உடனே வடிவேல்குமார் என்பவரை நானும் அண்ணனும் மிரட்டியதாக எங்கள் மீது பொய்யாக சி.எஸ்.ஆர் போட்டார். உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் விண்ணப்பித்துவிட்டு டி.எஸ்.பி-யைப் பார்த்தோம். செல்போனை வெளியில் வச்சுட்டு வரச் சொன்னவர், ''மோகனிடம் வாங்கிய நிலத்தைக் திருப்பி கொடுத்திருங்க. இல்லை'ன்னா இதுபோல பல கேஸ் போட்டு குண்டாஸ்ல குடும்பத்தையே உள்ளே தள்ளிடுவேன்'' என்று மிரட்டினார். இறுதியாக ``உங்க நிலத்தை முதல்வர் மைத்துனர் வெங்கடேஷ் வாங்க விரும்புகிறார். பிரச்னை பண்ணாமல் கொடுத்திடுங்க’’ என்றார். 

வீட்டில் வந்து எல்லோரும் கலந்து பேசினோம். முதல்வர் குடும்பத்தை எதிர்க்க முடியாது, என்பதால் நிலத்தைக் கொடுக்க முடிவு செய்து டி.எஸ்.பி-யிடம் அந்த இடத்தின் மார்க்கெட் விலை 10 கோடி போகிறது. 7 கோடி கொடுத்தால் கொடுப்பதாகக் கூறினோம். ``விலையெல்லாம் நீ சொல்லக் கூடாது. 25 லட்சம் வாங்கிட்டு, கேட்கிற இடத்துல கையெழுத்துப் போட்டுட்டுப் போகணும்’’ என்று மிரட்டினார். மீண்டும் உயர் நீதிமன்றத்தில் காவல்துறை துன்புறுத்துவதாக வழக்கு போட்டோம். எங்கள் மீது எஃப்.ஐ.ஆர் இல்லாததால் அந்த வழக்கு தள்ளுபடி ஆனது. பிறகு, ராமசாமி என்பவரிடம் 22 வருடத்துக்கு முன்பு ஒரு நிலம் வாங்கி இருந்தோம். அவரை மிரட்டி வாங்கியதாக என் மீது, அண்ணன் சண்முகம், அவரின் மகன் கார்த்திகேயன், தங்கை பர்வதம் என நான்கு பேர் மீது எஃப்.ஐ.ஆர் போட்டு வீட்டில் நோட்டீஸ் ஒட்டினார்கள்.

அதற்கு உயர் நீதிமன்றத்தில் தற்காலிக தடை வாங்கிய பிறகும், கைது செய்வதற்கு இரவு பகலாகத் தேடி வருகிறார்கள். சங்ககிரி டி.எஸ்.பி எங்களிடம் பேச தொடங்கியதிலிருந்து எஸ்.ஐ ஆண்டனி மைக்கேல் தலைமையில் 4 போலீஸார் தினந்தோறும், வீடு, அலுவலகம், கல்லூரிக்கு வந்து எங்களை ஒருமையில் பேசி டார்ச்சர் செய்தார்கள். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதனால் நாங்கள் இரண்டு குடும்பமும் பிரிந்து சங்ககிரியைவிட்டு வெளியேறி 60 நாள்களாகச் சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், நிறுவனங்களைக் கண்காணிக்க முடியாமல் தவிக்கிறோம்.

இதற்கிடையில் எங்க சொத்துகளில் இருந்த சுற்றுச் சுவர்களை இடித்துவிட்டார்கள். எங்க கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவுக்கு வந்த பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தரைக் கலந்துகொள்ளக் கூடாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். சென்னையில் முதல்வரைச் சந்தித்து தகவல் சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லை. நிலத்தை மட்டும் அவர்கள் அபகரிக்க நினைக்கவில்லை. கல்லூரி மற்றும் 7 பஸ்ஸையும் எழுதிக் கொடுக்கச் சொல்லித் துரத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் இருக்கிறோம்'' என்றார்.

இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷிடம் கேட்டதற்கு, ``எனக்கு அவுங்க நிலத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. நான் உண்டு. என் வேலையுண்டு'ன்னு இருக்கிறேன். எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. வெளியில் யாரை விசாரித்துப் பார்த்தாலும் என்னைப் பற்றி நல்ல முறையில்தான் சொல்லுவார்கள்’’ என்றார்.

சங்ககிரி டி.எஸ்.பி அசோக்குமார், ``அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் தவறான தகவல்கள் கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு நேரில் வாங்கப் பேசலாம்’’ என்றார்.