Published:Updated:

உதயநிதி ஸ்டாலின்... ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்... அடுத்த செட் வாரிசுகள் ரெடி!

அரசியல் கட்சி என்பது இன்றைய சூழ்நிலையில் நிறுவனம் போலாகிவிட்ட சூழலில், தங்கள் வாரிசுகளை அரசியலில் கொண்டுவருவதையே அதன் நிறுவனர்கள் விரும்புகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்... ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்... அடுத்த செட் வாரிசுகள் ரெடி!
உதயநிதி ஸ்டாலின்... ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்... அடுத்த செட் வாரிசுகள் ரெடி!

ரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் (வாரிசு) ரவீந்திரநாத் குமார் விருப்ப மனு வாங்கியிருக்கிறார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியிலும் இவர் போட்டியிடலாம் என்றும், அதற்கு அவர் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.

அ.தி.மு.க-வில் அடிமட்டத் தொண்டனாக இருந்து படிப்படியாகக் கட்சியில் பொறுப்புக்கு வந்தவர் ரவீந்திரநாத் என்று சொன்னாலும், அவர் வலுவான பின்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றபோது, தி.மு.க-வை `கம்பெனி’ என்று விமர்சித்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்  முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, இப்போது ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தின் அரசியல் பிரவேசம் குறித்து என்ன கருத்தைக் கேடயமாகத் திரித்துக்கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை.

இன்னொருபுறம், தி.மு.க-வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உதயநிதியின் அரசியல் பங்களிப்பு இருந்துவருகிறது. அந்த அடிப்படையில், `வாரிசு அரசியல்' என்பது தமிழகத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என யூகிக்கும் அதே சூழலில், இதுபோன்று வாரிசுகள் அரசியலுக்கு வருவது, தமிழகத்தில் மட்டுமன்றி இந்திய அளவில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. 

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனருமான ஃபரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக், கர்நாடக மாநிலத்தில் தேவேகவுடாவின் மகன் ஹெச்.டி.குமாரசாமி என அந்தப் பட்டியல் நீள்கிறது. அடிப்படையில் ஒரு ஜனநாயக நாடான இந்தியா, வெளியுலகிலும் அதுபோன்றே பிரகடனப்படுத்துகிறது. ஆனால், வாரிசு அரசியல் பரவியிருக்கும் எல்லா நிலையையும் நாம் கவனிப்போம் எனில், யார் வேண்டுமென்றாலும் ஆட்சி புரியலாம் என்கிற ஜனநாயகத்தன்மையில் இருந்து இந்த நாடு, முற்றிலும் விலகிக்கொண்டிருப்பதற்கான சித்திரத்தை நம்மால் காண முடியும். 

அரசியல் கட்சி என்பது ஒரு நிறுவனம் போலாகிவிட்ட சூழலில், அதன் நிறுவனர்கள் தங்களின் வாரிசுகளை அரசியலுக்கு அடுத்தடுத்து கொண்டுவருகிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. தங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை, உடைமைகளை, மக்கள் செல்வாக்கை இன்னொருவருக்கு மாற்றுவதற்கு ஏற்படும் தயக்கத்தின் காரணமாகவே வாரிசு அரசியல் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

``எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் என்னுடைய வாரிசு’’ என்றார் தந்தை பெரியார். தன்னுடைய அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழகத்தில் இவர்களுக்குப் பின்னால் வந்த தலைவர்கள்தான், வாரிசு அரசியலை உருவாக்கிச் சென்றார்கள் எனலாம். 

வாரிசு அரசியலைப் பொறுத்தவரை, அடிப்படையில் இரண்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். முதலாவதாக ஊழல் அதிகரிப்பதற்கும் அடுத்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் பணமும் அதிகாரமும் குவிவதற்கும் வாரிசு அரசியல் வழிவகுக்கிறது.

பணம், ஆட்சி அதிகாரம், தங்கள் குடும்பத்தினர் தொடர்புடைய முறைகேடுகளை நியாயப்படுத்துவதுடன், தங்களுக்கு அளவுக்கு அதிகமாக, சட்டவிரோதமாகக் கிடைக்கும் பணத்தைப் பாதுகாக்க, வாரிசு அரசியலில் ஈடுபடுவோர் பினாமிகளை உருவாக்குவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் போலி ஆவணங்களை உருவாக்கி, அரசியல் கட்டமைப்பையே ஊழல் மயமாக்கும் சூழல் ஏற்படுகிறது. 
அதன் காரணமாக நாட்டு மக்கள் மீது அக்கறையில்லாத, மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாத மேல்தட்டுத் தலைவர்கள் உருவாவதும் வாரிசு அரசியலால்தான். 

மிகச் சிறந்த அரசியல் தலைவர் என்பவர், தான் வாழ்கின்ற சூழலில் இருந்து, தன் வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வரும்போதுதான் மக்களுக்கான தலைவராக உருவாக முடியும். மக்களின் பிரச்னைகளைச் சட்டம் இயற்றக்கூடிய சபைகளில் பேசி, அவற்றைச் செயல்படுத்தக்கூடிய தலைவர்களாக உருவெடுக்க முடியும்.

அப்படி உருவான தலைவர்கள்தான் இன்றும் மக்கள் மனங்களிலும் வரலாற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட ஓர் அரசியல் தலைவரின் குடும்பத்தில் பிறந்துவிட்டதாலேயே, ஒருவர் அரசியலுக்குத் தகுதியானவராக இருந்துவிட முடியாது. வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் இன்றைய தலைவர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நம் கருத்து...