Published:Updated:

`எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி?’ - 7 இடங்களை உறுதி செய்த ஸ்டாலின் 

தி.மு.க அணியில் 12 இடங்கள் வரையில் கிடைக்கும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், 6 சீட்டுகளை ஒதுக்கும் முடிவில் இருக்கிறது தி.மு.க. அதுவும், ராகுல் கேட்டுக்கொண்டால் பாண்டிச்சேரியோடு சேர்த்து 7 இடங்கள் வரையில் ஒதுக்கப்படலாம்.

`எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி?’ - 7 இடங்களை உறுதி செய்த ஸ்டாலின் 
`எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி?’ - 7 இடங்களை உறுதி செய்த ஸ்டாலின் 

தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருக்கின்றன. `12 இடங்கள் வரையில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. பாண்டிச்சேரியுடன் சேர்த்து 7 இடங்களை ஒதுக்குவதற்கு முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குச் செல்வாக்கான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது வழக்கம். கூட்டணிக்குத் தலைமை என்ற அடிப்படையில், பிரதான கட்சிகளே அந்த இடங்களை ஒதுக்கலாமா... வேண்டாமா என முடிவு செய்யும். தற்போது தி.மு.க அணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க, ஐ.எம்.யு.எல், ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இதில், மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். உதயசூரியன் சின்னத்திலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட உள்ளது. ம.தி.மு.க-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

`ஸ்டாலினோடு நான் இணக்கமாகச் சென்றுகொண்டிருக்கிறேன். நமக்கு உரிய சீட்டுகளை தி.மு.க ஒதுக்கும்' எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலேயே நம்பிக்கை தெரிவித்தார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், ராகுல்காந்தியை முன்னிறுத்தி நடக்கும் தேர்தல் என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவார்கள் என்ற விவாதம், சத்தியமூர்த்தி பவனில் அரங்கேறத் தொடங்கியுள்ளது. 

``சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தோம். இப்போது வரையில் இந்தக் கூட்டணியில் எந்தவித சலசலப்பும் ஏற்படவில்லை. எங்களின் வலிமைக்கு ஏற்ப சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்தாலும், `எத்தனை இடங்களைக் கொடுக்க வேண்டும் என்பதை ஸ்டாலினே முடிவு செய்வார். தமிழ்நாட்டில் ஓர் இடத்தில்கூட பா.ஜ.க வெற்றிபெறக் கூடாது' எனக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார் ராகுல்காந்தி’’ என விவரித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 

``தி.மு.க அணியில் 12 இடங்கள் வரையில் கிடைக்கும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், 6 சீட்டுகளை ஒதுக்கும் முடிவில் இருக்கிறது தி.மு.க. அதுவும், ராகுல் கேட்டுக் கொண்டால் பாண்டிச்சேரியோடு சேர்த்து 7 இடங்கள் வரையில் ஒதுக்கப்படலாம். சீட்டுகளை ஒதுக்குவது பெரிதல்ல, அதில், எத்தனை இடங்களில் காங்கிரஸ் ஜெயிக்கப்போகிறது என்பதுதான் தி.மு.க-வினர் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. `தமிழ்நாட்டில் 6 இடங்கள்தான், அதற்கு மேல் ஒதுக்க முடியாது' என உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். அவர்களுக்கான தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுவிட்டன. கன்னியாகுமரி, தென்காசி (தனி), சிவகங்கை, சேலம், காஞ்சிபுரம், கடலூர், ஆரணி, பாண்டிச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் செல்வாக்கானவற்றை எடுத்துக்கொள்ளலாம் என தி.மு.க கூறிவிட்டது. இந்தத் தொகுதிகளில் கடைசி நேரத்தில் சில மாறுதல்கள் ஏற்படலாம். தேர்தலில் யாருக்கு சீட் என்பதில் சத்தியமூர்த்தி பவனில் பெரும் மோதலே வெடிக்க இருக்கிறது’’ என்றார் நிதானமாக.