Published:Updated:

`கட்சிகளைப் புறக்கணியுங்கள்; ஓட்டுப் போடாதீர்கள்!- ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தில் கௌதமன் பேச்சு 

`கட்சிகளைப் புறக்கணியுங்கள்; ஓட்டுப் போடாதீர்கள்!- ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தில் கௌதமன் பேச்சு 
`கட்சிகளைப் புறக்கணியுங்கள்; ஓட்டுப் போடாதீர்கள்!- ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தில் கௌதமன் பேச்சு 

``நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக்கட்சிகளையும் புறக்கணியுங்கள். யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள்" என்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் கெளதமன் கூறினார். 

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 474 சதுர கிலோமீட்டர் வரை ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்கலாம் என்று மத்திய அரசு டெண்டர் விட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசலில் கிராம மக்கள் மற்றும் விவசாயச் சங்கத்தினர் 12 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆதரவு தெரிவிப்பதற்காக இன்று காலை திரைப்பட இயக்குநர் கௌதமன், திருக்காரவாசல் காத்திருப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஹைட்ரோ கார்பன் எடுக்கலாம் என்று அதிகாரவர்க்கம் டெண்டர் விட்டுள்ளது. ஆனால் எங்கள் மண்ணை, எங்கள் வளத்தை, எங்கள் மக்களை கேட்காமல் எங்கள் மக்களுடைய அனுமதியைப் பெறாமல் எப்படி இந்த டெண்டர் விடப்பட்டது. இந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது" என்று மத்திய அரசை கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய கெளதமன், ``நாங்கள் முன்னாடி ஓட்டுப்போட்டுக் கோட்டைக்கு அனுப்பிய அதிகாரவர்க்கத்தோடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஹைட்ரோ கார்பன் உட்பட அனைத்துத் திட்டத்துக்கும் அடியோடு தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசுக்குத் தெரிந்துதான் டெண்டர் விடப்பட்டதா, இல்லையா என்று உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் மக்களுக்கு வெளிப்படையாகக் கூறவேண்டும்.

இது எங்களுடைய வாழ்விடம். எங்கள் வாழ்வை அழித்து எங்களை வளத்தைக் கொள்ளையடித்து இந்த நாடு வல்லரசாக வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். எங்கள் வாழ்க்கையை அழிக்கின்ற எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை நாங்கள் போராடி எதிர்கொள்வோம். இந்த டெண்டரை வேதாந்த நிறுவனத்துக்கோ இல்லை, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கோ மார்ச் மாதத்துக்குள் முடித்துக் கொடுப்பதாக முடிவு செய்திருக்கலாம். ஆனால் எங்கள் அனுமதி இல்லாமல், மக்கள் அனுமதி இல்லாமல் எங்க ஊருக்குள்ள எவர் வந்தாலும் நாங்கள் எமனாக நினைத்து அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு எங்கள் உயிரே போனாலும் அதை எதிர்த்து தடுத்து நிறுத்தக்கூடிய செயல்திட்டத்துடன் களம் இறங்குவோம். அந்த வலியை அந்த உறுதியை அந்தப் பெரும் கோபத்தை அதிகாரவர்க்கத்தினர் புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது.

எங்கள் மக்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மக்களுக்கு இந்தத் திட்டம் வரவே வராது. எங்கள் மக்களோட ஒப்பந்தம் போடுங்க. எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒப்பந்தம் போடுங்க. அப்படி இல்லாது போனால்  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக்கட்சிகளையும் புறக்கணியுங்கள். எவருக்கும் ஓட்டுப் போடாதீர்கள். ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களை இந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சிகளும் எங்கள் மக்களோடு ஒப்பந்தம் போட்டால் மட்டுமே நாங்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவோம்.

இனியாவது தமிழினம் விழிப்படைந்தால் இந்தத் தமிழர் நிலமும் தமிழினமும் நிலைக்கும். இல்லையென்றால் இப்படி ஓர் இனம்  இருந்தது என்று ஏதோ ஓர் இனம் நம்முடைய வரலாற்றைப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கிவிடும். அதனால் தமிழினம் தேவை என்றால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைவிட ஆயிரம் மடங்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். உயிர் கொடுத்துப் போராட இளையதலைமுறை நிக்குது" என ஆவேசத்துடன் கூறி முடித்தார்.