Published:Updated:

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம் 9

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம் 9
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம் 9

கே.கே.மகேஷ்

படங்கள்: 
எஸ்.கிருஷ்ணமூர்த்தி & பா. காளிமுத்து 

   
ழக்குப் போடுவதாலோ, கைது செய்வதாலோ மட்டும் கிரானைட் கொள்ளையைத் தடுத்துவிட முடியாது. கிரானைட் 'கொள்ளை'யை தடுத்து நிறுத்த ஒரே வழி அரசின் 'கொள்கை'கள் மாறுவதுதான்.
   
பல் இல்லாத பாம்பு

இந்திய கனிம வளச் சட்டம் பல் இல்லாத பாம்புக்குச் சமமானது. இதில் அவ்வப்போது சில மாற்றங்களைக் கொண்டு வந்து, மொத்தமாக செத்த பாம்பாக்கிவிட்டார்கள் அரசியல்வாதிகள். ஆற்று மணல் கொள்ளையில் ஆரம்பித்து நிலக்கரி சுரங்க ஊழல் வரைக்கும் பயமின்றி நடப்பதற்கு இந்தச் சட்டமும் ஒரு காரணம். ஓரிடத்தில் அம்மிக்குக் கல் உடைப்பதற்காக கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்றுவிட்டு, அந்த இடத்தில் உடைக்காமல் அருகில் இருக்கும் பாறையில் கல் உடைத்தால் என்ன தண்டனையோ, அதே தண்டனையை ஆயிரம் கோடிக்கு கிரானைட் கல்லை கடத்தியவர்களுக்கும் கொடுக்கும் 'வல்லமை' பெற்றது இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தில் உள்ள இன்னொரு முக்கிய குறைபாடு, ஓரிடத்தில் அளவுக்கு அதிகமாக அல்லது அனுமதி பெறாமல் கல் உடைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அதற்கான தொகையை அபராதமாகச் செலுத்தி சமரசமாகப் போய்விடலாம் என்பதுதான்.

 

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம் 9

இப்படித் தான் மேலூர் வட்டாரத்தையே சீரழித்த பல கிரானைட் குவாரி அதிபர்களுக்கு தடை விதிக்க வேண்டிய கனிம வளத்துறையினர், சமரசமாக அபராதம் விதித்தார்கள். அந்த அபராதத் தொகையைக் கூட ஒருவரும் செலுத்தவில்லை. அதை வசூலிக்க வேண்டிய கனிம வளத்துறை அதிகாரிகள் விரல் சூப்பிக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பது, கடந்த 5 ஆண்டு கால புள்ளிவிவரத்தைப் பார்த்தாலே புரியும்.


அபராதம் செலுத்தாத நிறுவனங்கள்

உதாரணமாக, கடந்த 2006ம் ஆண்டு மேலூர் தாலுகா கீழையூரில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் வெட்டிக் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டு, அந்தக் குவாரியை நடத்திய கோட்டைவீரன் என்பவருக்கு 2 கோடியே 87 லட்சத்து 86 ஆயிரத்து 185 ரூபாய் அபராதம் விதித்தார் கலெக்டர். ஆனால், 7 வருடமாகியும் அவரிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படவில்லை. இதேபோல திருவாதவூர் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் 720 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்த அப்போதைய கலெக்டர், 2 கோடியே 84 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அதே திருவாதவூர் கிராமத்தில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட பன்னீர் முகமது என்பவருக்கும் 2 கோடியே 84 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் இதுவரையில் அபராதத்தைச் செலுத்தவில்லை.

 

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம் 9

இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் 8 நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு தெரியுமா? 20 கோடியே 25 லட்சத்து 34 ஆயிரத்து 185 ரூபாய். ஆனால் வசூலான தொகையோ பூஜ்ஜியம்தான். இதற்கு கனிம வளத்துறையினர் சொல்லும் காரணம், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதே. (இதுவே அவர்களது சொந்தக்காசாக இருந்தால் இந்தப் பதிலைச் சொல்வார்களா?)

1600 கோடி ஊழல் நடந்துள்ள மேலூர் வட்டாரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 8 தான். இதுதவிர சுமார் 20 குவாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்கள் அதிகாரிகள். மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை. இடையில் என்ன நடந்திருக்கும் என்பதை விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குப் புரிந்திருக்கும்.

தனியார் மயகொள்கை

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம் 9

இந்த கொள்ளையை முழுமையாகத் தடுக்க முடியாதா? என்று யோசிப்பதற்குமுன், முதலில் தமிழ்நாடு கனிம வள நிறுவனத்தின் (டாமின்) வரலாற்றைத் தெரிந்து கொள்வோம். கனிம வளங்களைக் கண்டுபிடிப்பது, அவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்வது போன்ற நோக்கங்களுக்காகத்தான் இந்த நிறுவனமே தொடங்கப்பட்டது. அரசு நிலங்களில் மட்டுமின்றி தனியார் பட்டா நிலங்களில் இருக்கும் கிரானைட் கற்களும் அரசுக்குச் சொந்தம் என்றொரு விதி இருந்தது. இதனால், ஆரம்பத்தில் இந்த நிறுவனம் தமிழக அரசுக்கு கனிசமான அளவு வருமானத்தை வாரி வழங்கியது.

2003 ஆம் ஆண்டில் மத்திய அரசு, தனது கனிம வளக் கொள்கையை தனியாருக்குச் சாதகமாக மாற்றியமைத்தது. இதைப் பார்த்து நாக்கில் எச்சில் ஊறிய டாமின் அதிகாரிகள், அந்த நிறுவனத்துக்கு சமாதி கட்டும் முயற்சியில் இறங்கினார்கள். 2003 வரைக்கும் நிறைய ஊழியர்களுடன், லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்த டாமினை பலகீனப்படுத்தினார்கள் அதிகாரிகள். புதிய ஊழியர்களை நியமிப்பதில்லை, குவாரிக்குத் தேவையான இயந்திரங்களை புதிதாக வாங்குவதில்லை, ஏற்கெனவே இருக்கிற இயந்திரங்களையும் பராமரிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வகுத்துக் கொண்டு செயல்பட்டார்கள் அதிகாரிகள்.

கோடீஸ்வரர் ஆன தனியார்கள்

##~~##
கடைசியில் அவர்கள் எதிர்பார்த்தது போலவே டாமின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தது. 'இனிமேல் குவாரிப்பணிகளை டாமின் நிறுவனத்தால் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நிறைய நஷ்டம் ஏற்படும்' என்று சொன்னார்கள் அதிகாரிகள். அதன்படி, டாமினால் செய்ய முடியாத பணிகளை தனியாரிடம் கொடுத்து செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதாவது, குவாரி டாமினுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அதில் இயந்திரங்கள், ஊழியர்களைப் பயன்படுத்தி கற்களை எடுப்பது தனியாரிடம் (ரைசிங் ஏஜென்ஸி) ஒப்படைக்கப்பட்டது. அதேபோல, ரைசிங் கம் சேல்ஸ் என்றொரு ஒப்பந்தத்தைப் போட்டு, கற்களை எடுத்து விற்பனை செய்யும் அதிகாரத்தையும் தனியாருக்கே வழங்கினார்கள்.
இதுதவிர, டாமினால் செய்யவே முடியாது என்று சில குவாரிகளை திட்டமிட்டு தனியாரிடம் முழுமையாகத் தாரை வார்த்தார்கள். அதேபோல, கனிம வளத்துறையின் அனுமதி பெற்று தங்களது சொந்த பட்டா நிலங்களில் யார் வேண்டுமானாலும் குவாரி நடத்தலாம் என்றும் அறிவித்தார்கள். ஆக, நஷ்டம் என்று இப்படி அரசால் கைவிடப்பட்ட குவாரிகள்தான் இன்று பி.ஆர்.பி., செல்வராஜ் போன்ற பல நூறு கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறது. அரசு அதிகாரிகள் பலர் அவர்களிடம் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரர் ஆகிவிட்டார்கள் என்றால், கொள்ளை போன கிரானைட்டின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?
கொள்கை மாற வேண்டும்
கனிம வளக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ்நாடு கனிம நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.விஜயன். "டாமின் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சதியால் நஷ்டத்தில் இயங்கிய டாமின் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய நிர்வாகச் செலவுகளுக்கே பணம் இல்லாமல் தள்ளாடும் நிலைக்குப் போய்விட்டது. அரசின் கொள்கைகளை மாற்றக் கோரி, நாங்கள் போராட்டம் நடத்தினோம். பயனில்லை. இந்தச் சூழலில்தான், கலெக்டர் சகாயத்தின் கடிதம் வெளியாகி, கிரானைட் குவாரிகள் மீதான நடவடிக்கை தீவிரமடைந்தது. இதுபற்றி எங்களுடைய மார்க்சிஸ்ட் கட்சி, சட்டசபையில் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதன் பிறகு, அரசின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது டாமின் குவாரிகளில் தனியாருக்கு ரைசிங் ஏஜென்ஸி, ரைசிங் கம் சேல்ஸ் ஏஜென்ஸி போன்ற ஒப்பந்தங்களை வழங்கும் முறை நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் நீதிமன்ற தடை உத்தரவை பெற்று, தொடர்ந்து தனியார்களே குவாரிகளை நடத்தினாலும் கூட, அதை அரசு தரப்பில் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள். குவாரிப் பணி செய்வது, கற்களை வெட்டுவது, தரம் பிரிப்பது, அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பாலீஸ் போட்டு விற்பனைக்கு அனுப்புவது வரை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சில இடங்களில் கேமிரா வைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் லாரி உள்ளிட்ட வாகனங்கள் குவாரிக்கு வருவதும் தடுக்கப்பட்டுள்ளது.
 
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம் 9

இதனால் கடந்த 6 மாதத்தில் 11500 கன மீட்டர் கிரானைட் கற்களை எடுத்துள்ளது டாமின் நிறுவனம். இதன் முலம் 120 கோடி ருபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டோத ஒரு முழு வருடத்தில் டாமினுக்குக் கிடைத்த வருமானம் வெறும் 105 கோடி தான். இப்போது வெறும் 4 குவாரிகளில் இருந்து மட்டும் இவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்றால், தமிழகம் முழுவதும் இருக்கிற நூற்றுக்கணக்கான டாமின், தனியார் குவாரிகள் அனைத்தையும் அரசே எடுத்து நடத்தினால் எத்தனை லட்சம் கோடி வருமானம் அரசுக்குக் கிடைக்கும்?

எனவே, தமிழக அரசு தனியார் மயகொள்கையை முற்றிலுமாக நீக்கிவிட்டு, இனிமேல் அனைத்து குவாரிகளையும் அரசே நடத்தும் முடிவை துணிச்சலாக எடுக்க வேண்டும். போதுமான ஊழியர்களை நியமனம் செய்து, தேவையான நவீன இயந்திரங்களை வாங்கி டாமின் நிறுவனம் செயல்பட ஆரம்பித்தால், டாஸ்மாக்கை விட பல மடங்கு வருமானத்தை அரசு ஈட்ட முடியும். விவசாய நிலம் பறிப்பு, கண்மாய் ஆக்கிரமிப்பு, சுற்றுச் சூழல் சீர்கேடு போன்ற எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் நியாயமான வகையில் அரசால் மட்டுமே கிரானைட் தொழிலை நடத்த முடியும்.

எங்களுக்குத் தெரிந்த வரையில், இந்த முடிவை எடுப்பதற்குத்தான் அரசும் விரும்புகிறது என்றே தோன்றுகிறது.அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், ருசி கண்ட பூனை போல திரியும் சில அதிகாரிகளும், முன்னாள் அதிகாரிகளும் அரசை மறுபடியும் தவறான பாதைக்கு நடத்திச் செல்லத் திட்டமிடுகிறார்கள். தனியார் இருந்தால்தான் தாங்கள் கொள்ளையடிக்க முடியும் என்பதால், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் சூழ்ச்சியில் சிக்காமல், டாமின் நிறுவத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பி.ஆர்.பி. உருவாவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதையும், அரசின் பெயர் கெடுவதையும் யாராலும் தடுக்க முடியாது" என்கிறார் விஜயன்.
   
உண்மைதான். மக்களின் எண்ண ஓட்டத்திற்கு மாறாக, மீண்டும் தனியார் வசம் குவாரிகள் ஒப்படைக்கப்படும் என்ற முடிவை அரசு எடுத்தால், "பேரம் படிந்துவிட்டது; நாடகம் முடிந்துவிட்டது" என்று பாமரர்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள். எனவே, அரசின் கொள்கை மாறும் என்று நம்புவோமாக...

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம் 8 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க


(தொடர் நிறைவடைந்தது)

நாளை...பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள்! - புதிய தொடர்