Published:Updated:

''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

தகதகக்கும் தமிழருவி மணியன்

##~##

மிழக அரசியல் வெளியில் தமிழருவி மணியனால் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி இருக்கிறது. 'மாற்று அரசியல்’ எனும் மேடையில் வேறுபட்ட அரசியல் தலைவர்கள் சிலரை ஒருசேர நிறுத்தி நெடிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார்! 

தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்’ கடந்த 7-ம் தேதியன்று தனது இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம். மேடையில்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்து மணியன் அமர்த்த, மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ப்ளஸ் ஆச்சரியங்கள். ''இது காந்தியச் சிந்தனைகளை விளக்குவதற்கான மேடை மட்டும் அல்ல. இது ஒரு போராட்டக் களம். நம்மை ஆள வேண்டியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல ஜனநாயகம். அவர்கள் தவறிழைக்கும்போது அதை எதிர்த்துப் போராடுவதும்தான் ஜனநாயகம்...'' என்று ஒரு பொறியைப் பற்றவைத்துவிட்டு அமர்ந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

'இன உணர்வாளர்’ என்ற முறையில் இந்தக் கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டு இருந்தார் இயக்கு நர் தங்கர்பச்சான். ''தயவுசெஞ்சு என்னோட பேச்சுக்கு யாரும் கை தட்டாதீங்க. கை தட்டி, விசிலடிச்சே நாசமாப் போயிட்டிருக்கோம் நாம...'' என்று ஆவேசப்பட்டவர், ''இந்த மேடையில் அச்சப்படாமல் பேசலாம். காரணம், இங்கு அமர்ந்திருப்பவர்கள் நேர்மையானவர்களே தவிர, அரசியல் பிழைப்புவாதிகள் அல்ல. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இதுதான். ஓட்டுப் போடுற மக்கள் பிச்சைக்கார மனநிலையில் இருப்பதுதான் அரசியலைப் பிழைப்புக்குப் பயன்படுத்தும் பேர் வழிகளுக்கு வசதியாகிவிட்டது. கொடுக்கின்ற இலவசத்தை வாங்கி இனி அவன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள். அதன் பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும்'' என்றார் குரல் உயர்த்தி.

மைக்கைப் பற்றிய தமிழருவி மணியன் ரௌத் திரமும், ஆதங்கமும் ஒரு சேர வீசிய பேச்சு தமிழக அரசியல் மேடைகளுக்கு விதிவிலக்கு.

''இந்த நிகழ்ச்சியை 'மூன்றாவது அணி’ அமைப் புக்கான வேலை என்று சிலர் மிகத்தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். இல்லை... இது, 'மாற்று அரசியல்’ அமைவுக்கான தளம். மேடையில் இருக்கும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் கருணாநிதிக்குப் பின்னும், ஜெயலலிதாவுக்குப்  பின்னும் மறைந்தே அரசியலை நடத்துவது? தேர்தல் முடியும் வரை உங்களைப் பயன்படுத்திவிட்டு, பிறகு தூக்கி எறியப்படும் நிலை எத்தனை நாளைக்கு வேண்டும்? எங்களுக்குத் தேவை ஊழலின் நிழல் படாத அரசியல். நேர்மையான அரசியலைத் தேடி நான் அறிவாலயமா செல்ல முடியும்?  போயஸ் தோட்டம்தான் செல்ல முடியுமா?. ஊழலைப் பொதுப்புத்தி ஆக்கிவிட்டார் கருணாநிதி. அரசு அதிகாரிகளை சசிகலா கூட்டம் ஆட்டுவித்தபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, பொதுப்பணத்தை அந்த மன்னார்குடி குடும்பம் வாரிச் சுருட்டியபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, எப்போது ஆத்திரப்பட்டார்? பெங்களூருவில் இருந்தபடி தனக்கு எதிராக அவர்கள் சதியாலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும்தானே? இந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பொதுநலனை எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை. அதனால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பொது நலனுக்காக உருகும் நீங்கள் கைகோக்க வேண்டும். நீங்கள் மாற்று அரசியலைக் காண்பித்தால், மக்கள் உங்களை விரும்புவார்கள். அதில் எனக்குத் தெரிந்த மாற்று வழி, வைகோ முதல்வர் ஆவதுதான். அதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்தை உருவாக்க நாங்கள் தயார். மற்றபடி உங்கள் விருப்பம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

எதிர்பார்ப்புகளுக்கிடையில் தன் உரையைத் துவங்கிய வைகோ, ''தமிழகம் கட்டுக்கடங்காத பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளை யில் இப்படி ஒரு தளத்தில் கூடியிருக்கிறோம். தமிழருவி... நீங்கள் உங்கள் விருப்பத்தை வெளியிட் டிருக்கிறீர்கள். தியாக இயக்கமாம் ம.தி.மு.க. தேர்தல் அரசியலில் இயங்குவதுதான். நாங்கள் சில காலகட்டங்களில் சிலரோடு கூட்டணி வைத்திருந் தோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் என்றுமே தமிழர்நலன் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்ததும் இல்லை, சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது பொறுத்துக்கொண்டதும் இல்லை. அதனால் பதவி, அதிகாரம் இதை எல்லாம் நாங்கள் என்றுமே எதிர்பார்த்ததும் இல்லை. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள். விஷச் சூழலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கனன்றுகொண்டேதான் இருக்கிறது. எரிமலை, அறிவித்துவிட்டு வெடிப்பது இல்லை, புயல் சொல்லிக்கொண்டு அடிப்பது இல்லை. அது போல் மக்கள் புரட்சி வரும்... கூடவே மாற்றமும் வரும்'' என்று ஒரு புள்ளி வைத்தார்.

விடை தெரியாத கேள்வியோடு கூட்டம் விடைபெற்றது!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்