Published:Updated:

`உங்களுடன் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்!' - ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் மெசேஜ்

மதச்சார்பற்ற அணியோடுதான் கூட்டணி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தக் கூட்டணிக்குத் தலைமை ஸ்டாலின்தானே தவிர, காங்கிரஸ் அல்ல.

`உங்களுடன் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்!' - ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் மெசேஜ்
`உங்களுடன் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்!' - ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் மெசேஜ்

தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு அக்கட்சியின் தொண்டர்கள் காத்து நிற்கின்றனர். `அ.தி.மு.கவுடன் கூட்டணிப் பேச்சு எனத் தகவல் பரப்புகின்றனர். நாங்கள் ஸ்டாலின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்' என்கின்றனர் த.மா.கா வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் தங்களைத் தயார்படுத்தி வருகிறது. தி.மு.க அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்துள்ளன. பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளோடு அ.தி.மு.க தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், `தினகரன் எடுக்கப் போகும் முடிவு என்ன. தமிழ் மாநில காங்கிரஸ் யாரோடு அணி சேரும்?' என்பதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அதேநேரம், அ.தி.மு.கவோடு த.மா.கா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது என்ற ரீதியில் தகவல் வெளியாகியிருக்கிறது. 

த.மா.காவின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், பா.ஜ.க இல்லாத அணியில்தான் த.மா.கா அங்கம் வகிக்கும். தி.மு.க அணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கும் முடிவில் இருக்கிறோம். எங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்தத் தேர்தல் என்பது ராகுல்காந்தி முன்னிறுத்தி நடக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் ஸ்டாலினை முன்னிறுத்தப் போகும் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்றத் தேர்தலை மிக முக்கியமானதாக தி.மு.க பார்க்கிறது. அப்போது, இந்த அணி வலுவாக இருக்க வேண்டும். 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி சேர்ந்ததால்தான் ஆட்சிக்கு வர முடியவில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் படுதோல்வியைச் சந்தித்தனர். இதை தி.மு.கவும் உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்களின் செல்வாக்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்திருக்கிறது. தற்போதுள்ள இந்தக் கூட்டணியை இன்னும் பலப்படுத்துவதற்கு தி.மு.க விரும்புகிறது. எந்தக் கட்சியுடனும் தி.மு.க தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவில்லை. 

தேர்தல் கூட்டணி முடிவு தொடர்பாக, ஜி.கே.வாசனிடம் பேசிய போது, `தி.மு.க-வுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்' என்றார். துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் கொண்ட குழுவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களிடமும், `உங்களுடன் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். பா.ஜ.க-வை வீழ்த்துவதுதான் எங்கள் முடிவு' எனத் தெளிவுபடுத்திவிட்டோம். மதச்சார்பற்ற அணியோடுதான் கூட்டணி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தக் கூட்டணிக்குத் தலைமை ஸ்டாலின்தானே தவிர, காங்கிரஸ் அல்ல. எங்களைச் சேர்த்துக் கொள்வது குறித்து ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்" என்றார் இயல்பாக.