Published:Updated:

23 லட்சம் ஓட்டுகளைக் குறிவைக்கும் அ.தி.மு.க! - பா.ம.க-வுக்கு கம்பளமா, வலைவிரிப்பா?

23 லட்சம் ஓட்டுகளைக் குறிவைக்கும் அ.தி.மு.க! - பா.ம.க-வுக்கு கம்பளமா, வலைவிரிப்பா?
23 லட்சம் ஓட்டுகளைக் குறிவைக்கும் அ.தி.மு.க! - பா.ம.க-வுக்கு கம்பளமா, வலைவிரிப்பா?

''பா.ம.க, பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறாது'' என திருமாவளவன் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ''அ.தி.மு.க கூட்டணிக்கு பா.ம.க வருக'' என அமைச்சர் ஜெயக்குமார் அறிவிக்கிறார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணையும் என்கிற பேச்சுகள் எழுந்த நிலையில், ''கூட்டணிகுறித்து அ.தி.மு.க,  தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது'' என இரண்டு நாள்களுக்கு முன்பு, அன்புமணி பேட்டி அளித்தார். அடுத்த நாள், நிழல் நிதிநிலை அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டபோது, ''கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அது ரகசியம்'' எனச் சொன்னார். 

அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர ராமதாஸும் தி.மு.க-வோடு கூட்டுவைக்க அன்புமணியும் விரும்புவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் கூட்டணி தொடர்பாகப் பிரச்னைகள் இருப்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில்தான், இன்று மீடியாவிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், ''பா.ம.க., பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறாது'' எனச் சொன்னார். தி.மு.க-வோடு பா.ம.க. மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால்தான், இந்த அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டதாகச் சொல்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம்பெறக் கூடாது என்பது திருமாவளவனின் விருப்பம். அதே விருப்பம்தான், அ.தி.மு.க-வுக்கும். தி.மு.க கூட்டணியில் பா.ம.க பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பதை அறிந்து கொண்ட நிலையில், திருமாவளவனும் இப்படி கருத்து சொன்ன நிலையில், ''அ.தி.மு.க கூட்டணிக்கு பா.ம.க வருக'' என சிவப்புப் கம்பளம் விரிக்கிறது அ.தி.மு.க.

“தமிழகத்தில், இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. பா.ம.க தனித்தே போட்டியிடும்’' என தொடர்ந்து ராமதாஸ் சொல்லிவந்த நிலையில், இப்போது திராவிடக் கட்சிகளிடம் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டது பா.ம.க. 'யாருடனும் கூட்டணி இல்லை'' என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கியது. 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்கிற பிரசாரம் பலனை அளிக்கவில்லை. ஒரு தொகுதியில்கூட பா.ம.க ஜெயிக்கவில்லை. அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தாக நான்காவது கட்சியான பா.ம.க-வுக்குதான் அதிக வாக்குகள் கிடைத்தன. 5.03 சதவிகித வாக்குகளை அள்ளியது பா.ம.க. வாக்கு சதவிகிதத்தில் தேமு.தி.க-வை முந்தியது பா.ம.க. 

5 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியை அகற்றி, தி.மு.க ஆட்சியில் அமரும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க-வே ஆட்சியைப் பிடித்தது. இதற்குக் காரணம், பா.ம.க-வும் மக்கள் நல கூட்டணியும்தான். இதன் விளைவாகத்தான், ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெறுகிற வாய்ப்பு ஏற்பட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலில், 23 லட்சம் வாக்குகள் பா.ம.க-வுக்கு கிடைத்தது. பா.ம.க கூட்டணிக்கு வந்தால், வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றலாம் என கணக்குப்போடுகிறது அ.தி.மு.க. கடைசியாக, 2009 நாடாளுமன்றத் தேர்தலில்தான் பா.ம.க-வோடு கூட்டணி வைத்தது அ.தி.மு.க.