அரசியல்
சமூகம்
Published:Updated:

தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எதிரிக்கு எதிரி நண்பன்!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா எம்.பி., அ.தி.மு.க-வில் நீண்டகாலமாக உறுப்பினராக இருப்பவர். அ.தி.மு.க-வில் பலர் பிரிந்துசென்றபோதிலும், இன்றுவரை அ.தி.மு.க-வில் நீடித்திருப்பவர். எனினும், மாவட்டத்தில் முதல்முறை எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகவும் ஆன மணிகண்டனுக்கும் அன்வர்ராஜாவுக்கும் தொடர்ச்சியாக மோதல்கள் நீடித்தன. பொதுக்கூட்டத்திலேயே ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டுக்கொண்டார்கள். இப்போது மீண்டும் போட்டியிட அன்வர்ராஜா வாய்ப்புக் கேட்டுள்ளார். அமைச்சர் மணிகண்டனும் தன் தந்தை முருகேசனுக்கு சீட் கேட்டுள்ளார். இருவரின் மோதலையே காரணம் காட்டி, இன்னொருபுறம் ராஜகண்ணப்பனும் ராமநாதபுரம் தொகுதியைக் குறிவைத்தார். இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் இப்போது அன்வர்ராஜாவும் மணிகண்டனும் கைகோத்துள்ளனர். அவசர அவசரமாக சென்னைக்குச் சென்று அமைச்சர் மணிகண்டனைச் சந்தித்து சால்வை அணிவித்துள்ளார் அன்வர்ராஜா. இவர்களை நம்பி ஒருவருக்கு ஒருவர் எதிர் அரசியல் செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்களாம்.

தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

மாறிய கூட்டணிகள், சங்கடத்தில் நிர்வாகிகள்!

புதுச்சேரியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், காரைக்கால் வடக்குத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட ஓமலிங்கத்தை வீழ்த்தி, என்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்த திருமுருகன் வெற்றிபெற்றார். இப்போது, அ.தி.மு.க கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் இருப்பதால், இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை. இதேபோல, கடந்த தேர்தலில் காரைக்கால் தெற்குத் தொகுதி பிரசாரத்தில், ‘பி.ஜே.பி போன்ற மதவாத அமைப்புகளுடன் ஒருபோதும் சேரமாட்டேன்’ என்று சொன்னவர், அ.தி.மு.க எம்.எல்.ஏ அசனா. இப்போது அவரே, பி.ஜே.பி நிர்வாகிகளுடன் இணைந்து ஓட்டு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நெடுங்காடு - கோட்டுச்சேரி தொகுதி என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சந்திர பிரியங்கா, கடந்த  முறை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வின் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து மக்களைச் சந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறார். திருநள்ளாறு தொகுதியில் கடந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸின் சிவாவின் தோல்விக்குக் காரணமே பா.ம.க மாவட்டச் செயலாளர் தேவமணிதான். இப்போது கூட்டணியில் இருவரும் ஒருங்கிணைந்து வாக்கு சேகரிக்க வேண்டும். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! இதில் எந்தச் சங்கடமும் இல்லாதவர், டி.ஆர்.பட்டணம் தொகுதி தி.மு.க வேட்பாளரான கீதா ஆனந்ததன்தான்.

தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

“மோடியின் பார்ட்னர் எடப்பாடி!”

குட்டிக் கதைகளுக்குப் பெயர்பெற்ற அ.தி.மு.க அரசை, அதே குட்டிக் கதையால் சாடியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, “பேருந்தில் ஒரு தொழிலாளி செல்லும்போது, அவரது பாக்கெட்டில் இருந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு நபர் பிக்பாக்கெட்  அடித்துவிடுகிறார். எனவே, அந்தத் தொழிலாளியால் காசு கொடுத்து டிக்கெட் எடுக்க முடியவில்லை. ‘என் வீடு அருகில்தான் உள்ளது. நீங்களும் உடன் வாருங்கள். காசு கொடுத்துவிடுகிறேன்’ என்று நடத்துநரிடம் அந்தத் தொழிலாளி சொல்கிறார். ஆனால், அதை நடத்துநர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், பேருந்தில் இருந்த ஒரு நபர் அந்தத் தொழிலாளிக்கு டிக்கெட் எடுத்துத் தருகிறார். அந்த நபரின் மனிதநேயத்தைக் கண்டு பேருந்தில் இருந்த அனைவரும் நெகிழ்ந்தனர். ‘இவரைப் போன்ற நபர்களால்தான் நாட்டில் மழை பெய்கிறது. இவர் கலியுக நாயகன்’ என்றெல்லாம் பாராட்டுகின்றனர். கடைசியில் பார்த்தால், அந்தத் தொழிலாளியிடம் இருந்து, எந்த நபர் பிக் பாக்கெட் அடித்தாரோ... அவரேதான் டிக்கெட் எடுத்துக்கொடுத்துள்ளார். அந்த நபர் எப்படி, பத்தாயிரம் ரூபாயைத் திருடி, ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துத் தந்தாரோ... அப்படித்தான் மோடியும் மக்களிடம் பிக்பாக்கெட் அடித்துவிட்டு, அதில் சிறிய தொகையை மக்களுக்கே வழங்கிவருகிறார். தமிழகத்தில் மோடி பிக்பாக்கெட் அடிக்க எடப்பாடி பழனிசாமிதான் பார்ட்னர்” என்றார் அவர்.

தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஒதுங்கும் அ.தி.மு.க எம்.பி-க்கள்!

தினகரன் ஆதரவாளராக இருந்த வேலூர் எம்.பி செங்குட்டுவன், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதில்லையாம். கடந்த மாதம் 26-ம் தேதி, வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. ‘‘அரசு நிகழ்ச்சிகளுக்கு எம்.பி செங்குட்டுவனை முறையாக அழைப்பதில்லை. வழக்கறிஞராக இருந்தவரை எம்.பி-யாக்கி அழகுபார்த்தது அம்மாதான். ஆனால், இங்கு நடக்கும் கூத்துகளைப் பார்த்து அரசியலிலிருந்தே அவர் ஒதுங்கிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்’’ என்று சொல்கிறார்கள் செங்குட்டுவனின் ஆதரவாளர்கள். அரக்கோணம் எம்.பி-யான கோ.ஹரியும், அ.தி.மு.க தலைமைமீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். கட்சி நிகழ்ச்சி என்றால், அழைக்காவிட்டா லும் ஓடிவந்து விடுவார் ஹரி. இப்போது அவருக்கு சீட் கிடைக்காது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் கூறி வருவதால்தான் ஒதுங்கிப்போகிறாராம்.

தேர்தல் 2019 - எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

மோடிக்காக நடந்த யாகம்!

நாகை மாவட்டத்தில் சீர்காழி அருகே குன்னம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செம்பவளத் தாயார் சமேத பூமியேஸ்வரர் கோயிலில் பி.ஜே.பி சார்பில் மார்ச் 9-ம் தேதி  கருப்பு.முருகானந்தன் தலைமையில் யாகம் நடத்தப்பட்டது. “அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்தோடும் வாழவும், மோடி மீண்டும் பிரதமராகி, இந்தியாவை வழிநடத்தவுமே இந்தச் சிறப்பு யாகம்” என்கிறார்கள் பி.ஜே.பி-யினர்!

அணி மாறும் சீனியர்கள்!

அ.தி.மு.க-வின் கோட்டையாக இருக்கும் கோவையில் அ.ம.மு.க-வை வலுப்படுத்த நினைத்திருந்தார் தினகரன். ஆனால், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக அ.ம.மு.க-விலிருக்கும் கோவை சீனியர் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள்வரை அடுத்தடுத்து அ.தி.மு.க-வுக்குத் தாவிவருகின்றனர். செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து, அ.ம.மு.க கோவை மாநகர மாவட்டச் செயலாளர் சின்னதுரை, முன்னாள் அமைச்சர் தாமோதரன் ஆகியோரும் தினகரனுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு, மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர். இதில், தாமோதரனுக்கு அ.ம.மு.க-வில் மாவட்டச் செயலாளராகக்கூட ஆக முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. “சீனியர்கள் யாரையும் தினகரன் கண்டுகொள்வதேயில்லை. எனவே, அவர்மீதான நம்பிக்கை போய்விட்டது” என்பதே இப்படித் தாவியவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.  இப்போது, கோவையில் சேலஞ்சர் துரையைத் தவிரச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறு யாரும் அ.ம.மு.க-வில் இல்லை!

ம.தி.மு.க-வுக்கு எதிராக காங்கிரஸ் வாட்ஸ்அப்!

தி.மு.க கூட்டணியில் ஈரோடு தொகுதியை காங்கிரஸ், ம.தி.மு.க இரு தரப்பிலும் கேட்டுவருகின்றனர். இந்நிலையில் ம.தி.மு.க-வை கடுமையாகச்சாடி வாட்ஸ் அப் தகவல் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர் ஈரோடு காங்கிரஸ் நிர்வாகிகள். ‘‘காங்கிரஸ் தனித்து நின்றால்கூட வெற்றிபெறும் அளவுக்கு ஈரோட்டில் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். ஆனால், ம.தி.மு.க-வின் கணேசமூர்த்தி 2009-2014 காலகட்டத்தில் எம்.பி-யாக இருந்தபோது, பழனி - சாம்ராஜ்நகர் ரயில் திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறித் தடுத்து விட்டார். கடந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு, இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்தான் அழித்தன என்ற பிரசாரத்தை ம.தி.மு.க முன்னெடுத்தது. இன்று தி.மு.க கூட்டணியில் சேர்ந்துகொண்டு இவர்கள் ஈரோடு தொகுதியைக் கேட்பது நியாயமில்லை. ஈரோடு தொகுதியை ம.தி.மு.க-வுக்குக் கொடுத்தால் காங்கிரஸ்காரர்கள் யாரும் வேலை செய்யமாட்டார்கள்’’ என்று எச்சரிக்கை விடுக்கிறது அந்த வாட்ஸ் அப் தகவல்.

 - இரா.மோகன், இரா.குருபிரசாத், எம்.ராகவன், நவீன் இளங்கோவன், கோ.லோகேஸ்வரன்

படங்கள்: தி.விஜய், பா.பிரசன்னா