Published:Updated:

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு!
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு!

சாத்தியம் முதல் அசாத்தியங்கள் வரை!

பிரீமியம் ஸ்டோரி

நெடுங்காலமாக மக்கள் பிரதிநிதிகளை ஆண்களே தேர்ந்தெடுத்தனர். ‘பெண்களின் வாக்குரிமை, மனித உரிமை’ என்று பெண்கள் குரல் கொடுக்க 18-ம் நூற்றாண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வாக்குரிமை பெற்றவர்கள் வேட்பாளர்களாகவும் உரிமை பெற்றார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 1921-ல் மதராஸ் மாகாணம்தான், பெண்களுக்கான வாக்குரிமையை அமலுக்குக் கொண்டுவந்தது. அதுவும் சொத்துடைமை உள்ள ஆண், பெண்களுக்கு மட்டுமே. அதற்கடுத்த வருடங்களில்தான், அனைவருக்குமான வாக்குரிமை அமலுக்கு வந்தது. 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெண் பிரதிநிதித்துவம் 11 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. ஆனாலும், சர்வதேச அளவில் பெண் பிரதிநிதித்துவம் 23.4 சதவிகிதம் என்பதுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. மாறியிருக்கிறதா நிலைமை?

1996-ல் தேவகவுடா தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, கட்சிகளின் உள்ஒதுக்கீடு முரண்பாடு களால் இன்னும் நாடாளுமன்றத்தையே கடந்து வரமுடியவில்லை. 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை தனது வாக்குறுதிகளில் ஒன்றாகவே முன்மொழிந்தது பி.ஜே.பி. ‘2019 தேர்தலில் வெற்றிபெற்றால், முதல் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி அளித்திருக்கிறது, காங்கிரஸ். உள்ளாட்சிகளில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழகத்தில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தியது, தி.மு.க. அதையே, 50 சதவிகிதமாக உயர்த்திச் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தது, அ.தி.மு.க. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இத்தனை கட்சிகள் ஆதரித்தாலும், 2014 தேர்தலில் தமிழகத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் நான்கு பேர் மட்டுமே. மொத்தம் உள்ள 543 தொகுதிகளிலிருந்து 66 பெண் பிரதிநிதிகள் மட்டுமே மக்களவையில் இடம்பெற்றனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு!

இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சி மட்டும்தான், தங்கள் கட்சியில் ஆண், பெண் வேட்பாளர்களுக்கு சரிவிகிதமாக தலா 20 தொகுதிகளைப் பங்கீடு செய்து அறிவித்துள்ளது. பெண்கள் இடஒதுக்கீட்டுக்குக் குரல்கொடுத்து வரும் பெரிய கட்சிகளே மேற்கொள்ளாத நடவடிக்கை இது. பெண் தலைமையேற்று நடத்திய அ.தி.மு.க-வில், ஆண்கள் தலையெடுத் திருக்கும் காலம் இது. வரும் நாடாளு மன்றத் தேர்தலில், வேட்பாளர்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது அந்தக் கட்சி?

அ.தி.மு.க-வின் மகளிர் அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜிலா கூறுகையில், ‘‘ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், ஒருவேளை அவர் குறைந்தபட்சம் 30 சதவிகித இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திருப்பார். தற்போது பெண்களுக்கு கடந்த முறையைவிட இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் அதிகமாக ஒதுக்கப்படலாமே தவிர, 30 சதவிகிதம் அளிக்க வாய்ப்பு இல்லை. இத்தனைக்கும் கட்சியின் 60 சதவிகித வாக்குவங்கி பெண்களை நம்பித்தான் இருக்கிறது” என்கிறார் ஆதங்கத்துடன்.

சி.பி.எம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, “தேர்தலின்போது மட்டும் பெண் வேட்பாளர்களைத் தேடாமல், அவர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். வெறுமனே மகளிர் அணியில் மட்டுமல்லாமல், கட்சியின் ஒவ்வொரு செயல்பாடு களிலும் அவர்கள் அங்கமாக இருக்கவேண்டும். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் தொடர்பாக அவர்களைக் களத்தில் அணுகச் செய்யவேண்டும். நாம் தமிழர் கட்சி சரிபாதியாக இடங்களை ஒதுக்கியிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். நாட்டில் 540 சீட்டுகளில் 180 பெண் எம்.பி-க்கள் வரவேண்டும். ஆக, 180 தொகுதிகளும் பெண்களுக்கான தொகுதிகளாக ஆக்கப்பட்டால் தான், இதில் பெண்கள் வர வாய்ப்பிருக்கிறது. பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை சட்டரீதியாகக் கொண்டுவந்தால்தான், 180 பெண் எம்.பி-க்கள் என்கிற 33 சதவிகிதம் நிரந்தரமாக இருக்கும். அரசியல் சாசனம் திருத்தப்படுவது மட்டுமே இதற்கான வழி” என்கிறார்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘33 சதவிகித இடஒதுக்கீட்டை காங்கிரஸ் முழுமனதாக ஆதரிக்கிறது. நாங்கள் ஜெயித்தால் முதல் கையெழுத்தே அதற்குத்தான் என்று கட்சி மேலிடம் கூறிவருகிறது” என்றவரிடம், “தமிழகத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? 33 சதவிகித இடஒதுக்கீடு கணக்கில் கொள்ளப் படுமா?” என்று கேட்டோம். “இடஒதுக்கீடு உண்டு. ஆனால், அதிகபட்சம் எல்லாம் இருக்காது” என்றார். 

தி.மு.க எம்.எல்.ஏ-வான கீதாஜீவன், ‘‘உள்ளாட்சி ஒதுக்கீடுகளும் லோக் சபாவுக்கான ஒதுக்கீடுகளும் வெவ்வேறு வகையானவை. வெற்றி வாய்ப்பைப் பொறுத்துத்தான் வேட்பாளர்களை இறுதிசெய்வார்கள். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இல்லை” என்றார். 

அப்படியே பெண்கள் பிரதிநிதிகளாக அறிவிக்கப்பட்டாலும் பீகாரில் ராப்ரிதேவி, லாலுவின் கைப்பாவையாக வெளிப்படையாகவே தன்னை அறிவித்துக்கொண்டு செயல்பட்டது போன்ற நிலைதான் பெரும்பாலும் இருக்கிறது. எனவே, பெண்கள் சமத்துவம் என்பது எண்களில் அல்ல... எண்ணத்தில்தான் இருக்கிறது!

- ஐஷ்வர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு