Published:Updated:

"பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்னவாகும்?" - கி.வீரமணி

"பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்னவாகும்?" - கி.வீரமணி
"பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்னவாகும்?" - கி.வீரமணி

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் இயங்கும் இந்திய அரசியல் சாசன அமைப்பில் (Constitution club of India) சமூக நீதிக்கான கருத்தரங்கம் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற்றது. 

'இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சவால்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுப்பாராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினார்கள்.

வரவேற்புரையாற்றிய வழக்கறிஞர் சுப்பாராவ், சமூக நீதிக் கொள்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இடஒதுக்கீடு குறித்தும் அவர் விரிவாகப் பேசியதால், கருத்தரங்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ``உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பதால், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகள் பி.ஜே.பி-க்கு எதிராகத் திரும்பிவிடும். மீதமிருக்கும் பொதுப்பிரிவினரின் வாக்குகளைக் கவரும் வகையில், இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது’’ என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சமூக சீர்திருத்தவாதி ஐயன்காளி, மேனாள் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் ஆகியோர் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். ``சமூகநீதிக் கொள்கையால் ஒரு தலித், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடியும். ஆனால், அவர் அமைச்சரவைச் செயலாளராக முடியுமா?’’ என்று வினவினார். மேலும், ``என்னைப் பொறுத்தவரை, பாரத மாதா யார் என்றால், வயலில் அறுப்பறுக்கிற, மலைகளில் பழங்குடியாக உழைக்கிற, வங்கிகளிலும் அலுவலகங்களிலும் அன்றாடம் பணிக்குச் செல்கிற பெண்கள்தான் பாரதமாதா” என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ``பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், பஞ்சமர்கள் எனும் வர்ணாசிரம நிலையை உருவாக்கிய மனுஸ்மிருதி காலங்காலமாக இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பின்பற்றி வந்துள்ளது. இந்த ஐவருக்கும் பின்னரே பெண்களின் நிலை இருந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இவர்களுக்கான சமூகநீதியை இடஒதுக்கீட்டின் வழியே நிலைநாட்ட முடியும்.

ஆனால், எவ்வித முறையான அடித்தளமும் இன்றி, எந்தக் குழுவின் அறிக்கையுமின்றி, எந்தக் கணக்கெடுப்பும் இன்றி, பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்திருப்பது எவ்விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? ஆண்டு வருவாய் 8 லட்சம் இருப்பவர்களை, எப்படிப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக வரையறுக்க முடியும்? இதுவரை இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள், இன்று பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை வரவேற்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், வறுமையில் வாடுகிற உயர்குடிப் பிறந்தவர்கள் யாரேனும் ஒருவர் 100 நாள் வேலைத் திட்டத்துக்குச் சென்று பார்த்திருக்கிறீர்களா?’’ என்று கேள்வியெழுப்பினார். மேலும் பாரத மாதா குறித்து, டி.ராஜா தெரிவித்த கருத்தை வீரமணி வழிமொழிந்தார். சமூக நீதிக்கு எதிராக ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்டம் உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டமும், நீதிமன்றத்தால் தடைசெய்யப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்து தன் உரையை நிறைவு செய்தார்.

10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.