அரசியல்
சமூகம்
Published:Updated:

முட்டிக்கொண்ட தலைவர்கள், முட்டுக் கொடுத்த அழகிரி!

முட்டிக்கொண்ட தலைவர்கள், முட்டுக் கொடுத்த அழகிரி!
பிரீமியம் ஸ்டோரி
News
முட்டிக்கொண்ட தலைவர்கள், முட்டுக் கொடுத்த அழகிரி!

கன்னியாகுமரியில் தொடங்கிய காங்கிரஸ் களேபரம்...

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்பதைவிட, ‘தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டி’ என்பதுதான்

முட்டிக்கொண்ட தலைவர்கள், முட்டுக் கொடுத்த அழகிரி!

பொருத்தமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டால், ‘இது உட்கட்சி ஜனநாயகம்’ என்பார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த ‘ஜனநாயகம்’ அதிகரிக்கும். இம்முறை கோஷ்டி உரசல் கன்னியாகுமரியில் தொடங்கியிருக்கிறது. இது, எங்கு போய் முடியும் என்றுதான் தெரியவில்லை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13-ம் தேதி வரவிருக்கிறார். அதற்கான இடம் தேர்வு, கூட்ட ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்தனர். அனைவரும் ஒற்றுமையுடன் மேடையேறியதைப் பார்த்தத் தொண்டர்கள்  ‘பரவாயில்லையே...’ என நினைத்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே முட்டல் மோதல் பேச்சுகள் தொடங்கிவிட்டன.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வசந்தகுமார், ஏற்கெனவே தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார். குமரியைப் பூர்வீகமாகக் கொண்டவரும் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளருமான காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரனும் கன்னியாகுமரியைக் குறிவைத்து காய்நகர்த்திவருகிறார். இதுபோல வேட்பாளர் கனவில் இருப்பவர்களும் அந்தக் கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர்.

கூட்டத்தில் பேசிய இளங்கோவன், “கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸுக்குப் பெற்றுத்தர வேண்டும் என்று புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அழகிரியிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதி கிடைக்கவில்லை என்பதற்காக ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத் தொண்டர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்குள் புகுந்து போராட்டம் நடத்திய வரலாறு எல்லாம் உண்டு. இம்முறை அப்படி ஒரு போராட்டத்துக்கு அழகிரி இடம்தரமாட்டார் என நினைக்கிறேன்” என்று அழகிரியை அதிரவைத்தார்.

முட்டிக்கொண்ட தலைவர்கள், முட்டுக் கொடுத்த அழகிரி!

தொடர்ந்து பேசிய இளங்கோவன், “என் ஆசை, இந்தத் தொகுதியில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி அல்லது சோனியா காந்தி போட்டியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர்தான் போட்டியிட வேண்டும். கன்னியாகுமரி காங்கிரஸ் தொண்டர்களின் மனதிலும் அதுதான் இருக்கிறது. உள்ளூர்காரர்களுக்கு சீட் தரவில்லையென்றால் எவ்வளவு ஆத்திரப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். இந்தப் பகுதியில் இருக்கும் நீங்கள் எல்லாம் என்னுடன் அடிக்கடி போனில் பேசுவீர்கள். நானும் பகல் நேரத்தில் உங்களிடம் பேசுவேன். ஆனால், இரவு எட்டரை, ஒன்பது மணிக்கெல்லாம் உங்களுக்கு ‘பாசம்’ அதிகமாகிவிடும். அப்போது மட்டும் பேசுவதற்கு நான் பயப்படுவேன். ‘எவனையாவது வெளியாளைக் கொண்டுவந்து போட்டீங்கன்னா, உங்களைத் தீத்திருவேன் தலைவரே’ என்று பேசுவீர்கள். அழகிரி சிரித்துப் பேசி வேலைவாங்கக் கூடியவர். எல்லா நல்ல மனிதர்களையும் அமரவைத்து வேலைவாங்குவதில் கில்லாடியாக இருக்கும் அழகிரியின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்” என்று சகல திசைகளிலும் தாக்குதல் நடத்திவிட்டே அமர்ந்தார், இளங்கோவன்.

அடுத்ததாக திருநாவுக்கரசர் பேச எழுந்ததும், இளங்கோவன் மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றுவிட்டார். மதியத்துக்கு மேல் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்கள் மீண்டும் மேடையேறினார்கள். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் மைக் பிடித்து சில கருத்துகளைக் கூற முயன்றார். அதற்கு, தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அவர் பேசாமல்  இருக்கையில் அமர்ந்தார்.

“ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி ஆகியோர் ஆளுக்கு இரண்டு தொகுதிகள் வீதம் ஆறு தொகுதிகளிலும் உள்ள தொண்டர்களை அழைத்துவரவேண்டும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தொண்டர்களை அழைத்துவரும் பொறுப்பை வசந்தகுமார் எம்.எல்.ஏ ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார் இளங்கோவன். உடனே மைக் பிடித்த வசந்தகுமார், “திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தொண்டர்களை வரவழைக்கிறேன். அதேசமயம், கடந்த முறை நான் தனியாகத் தேர்தலில் நின்றபோது, இரண்டரை லட்சம் வாக்குகளைத் தந்த குமரி மாவட்டத்திலும் தொண்டர்களைத் திரட்டும் பொறுப்பையும் கவனித்துக்கொள்கிறேன்” என்று சந்தடி சாக்கில் தனக்கு சீட் கேட்டார்.

இவ்வளவுக்கும் நடுவில் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “நம்மைப்பற்றித் தவறான செய்திகள் ஊடகங்களில் வருவதுண்டு. அது இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, இந்த மேடைக்கு அனைத்துத் தலைவர்களும் வந்திருக்கிறோம்” என்றார் கூலாக!

கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும்!

- ஆர்.சிந்து

படம்: ரா.ராம்குமார்