அரசியல்
சமூகம்
Published:Updated:

அ.தி.மு.க வாக்குவங்கி சரிந்துவிட்டது - நல்லகண்ணு அதிரடி

அ.தி.மு.க வாக்குவங்கி சரிந்துவிட்டது - நல்லகண்ணு அதிரடி
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க வாக்குவங்கி சரிந்துவிட்டது - நல்லகண்ணு அதிரடி

அ.தி.மு.க வாக்குவங்கி சரிந்துவிட்டது - நல்லகண்ணு அதிரடி

மிழகத்தில் பெரிய கட்சிகளான அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் தங்கள் தலைமையின்கீழ்

அ.தி.மு.க வாக்குவங்கி சரிந்துவிட்டது - நல்லகண்ணு அதிரடி

கூட்டணிகளை அமைத்து, தேர்தலுக்குத் தயாராகிவிட்டன. நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கும் சூழலில், தி.மு.க தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
 
“அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்படுத்தி னீர்கள். இப்போது தி.மு.க-வுடன் சேர்ந்துவிட்டீர்களே?’’

“தற்போதைய அரசியல் சூழல் வேறானது. மத்தியில் பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. அதற்கு, கருத்தியல்ரீதியில் பலம்வாய்ந்த கூட்டணி தேவை. அப்படிப்பட்ட ஓர் அணியைத் தான், தி.மு.க தலைமையில் அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணி, காலத்தின் தேவை.  பி.ஜே.பி-யை வீழ்த்தக்கூடிய பலமுள்ள அணி இது.”

“ஜெயலலிதா, ‘மோடியா, இந்த லேடியா?’ என்று துணிச்சலாகக் கேட்டவர். ஆனால், மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டுமென்று அ.தி.மு.க இப்போது தீவிரமாக இயங்குகிறதே?”

“தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள, இதைத் தவிர இவர்களுக்கு வேறு வழி இல்லை. மத்தியில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்று பி.ஜே.பி நினைக்கிறது. அ.தி.மு.க-வோ, மத்திய பி.ஜே.பி-யின் தயவு இருந்தால்தான் தமது அரசைத் தக்கவைக்க முடியும் என்று நினைக்கிறது. எனவே, பி.ஜே.பி-யை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். அது ஒரு கொள்கையற்ற கூட்டணி.”

“வாக்குவங்கி அடிப்படையில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி, பலம் வாய்ந்த கூட்டணி என்று சொல்கிறார்களே?”

“ஜெயலலிதா இருந்த காலத்தில், அ.தி.மு.க-வுக்கு அந்த வாக்குவங்கி இருந்தது. இப்போது, அந்தக் கட்சியின் வாக்குவங்கி சரிந்துவிட்டது. அது, இன்றைக்கு பலம் இழந்துள்ளது. ஜெயலலிதா போன்ற ஆளுமையும் இப்போது அங்கு இல்லை.” 

அ.தி.மு.க வாக்குவங்கி சரிந்துவிட்டது - நல்லகண்ணு அதிரடி

“பணமதிப்பு நீக்கம், முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு, முத்தலாக் தடைச் சட்டம், புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி போன்ற மத்திய பி.ஜே.பி அரசின் நடவடிக்கைகள் அவர்களுக்கு பலமா, பலவீனமா?”

“பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பாதிப்பு இப்போதுவரை இருக்கிறது. தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது. கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் எந்தக் கோரிக்கைக்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மத்திய பி.ஜே.பி அரசுமீது விவசாயிகளும் தொழிலாளர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பி.ஜே.பி தோல்வியைத் தழுவியதற்கு இவைதான் முக்கியக் காரணம். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பி.ஜே.பி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே, இந்த நடவடிக்கைகளால் அவர்களுக்கு பாதகம்தான் ஏற்படும்.”

“சின்னம் ஒதுக்குதல், தேர்தல் தேதி அறிவித்தல் உட்பட தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் தரப்புக்குச் சாதகமாக இருப்பதாக விமர்சனம் எழுகிறதே?”

“உண்மைதான். ஆளுங்கட்சி சொல்வது போலதான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தி.மு.க-வைத் திட்டமிட்டுத் தோற்கடிக்க ஆளுங்கட்சி முயற்சி மேற்கொண்டது. அதற்கு, ஆணையமும் உடந்தையாக இருந்தது. ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.”

“ஏழு பேர் விடுதலை தொடர்பாக அ.தி.மு.க அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க அந்த அளவுக்குப் பேசக்கூட இல்லையே?”

“இயக்கரீதியாக, இந்த விஷயத்தில் தி.மு.க அதிகமாகச் செயல்பட்டுள்ளது. ஆனால், ஏழு பேர் விடுதலை தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட பிறகும், இவ்வளவு காலம் இந்த விவகாரம் கிடப்பிலேயே இருக்கிறது. இதில் மேலும் அழுத்தம் கொடுப்பதற்கு அ.தி.மு.க முனைப்புக்காட்டவில்லையே.”

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மணல் கொள்ளைக்கு எதிராகவும் போராடிவந்த சமூகசெயற்பாட்டாளர் முகிலனைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?”

“முகிலன் காணாமல்போனது குறித்து முதல்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘சாதாரண மனிதர்களின் வீட்டு விவகாரத்தில் எல்லாம் அரசு தலையிட முடியாது’ என்று அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார். அதிலிருந்தே இந்தப் பிரச்னையில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. ஆனால்,  முகிலனுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.”

“அடுத்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலையில் மட்டும் இத்தகையப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடுமா? ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குக் கையெழுத்துப் போட்டதே ஸ்டாலின்தானே?”

“யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் கொண்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு எதிரானதாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் நிச்சயம் போராடுவார்கள்.’’

- ஐஷ்வர்யா

படம்: வீ.நாகமணி