Published:Updated:

`பா.ஜ.க அல்லாத பிரமாண்ட அணி!’ - எடப்பாடி விருப்பத்துக்குத் தடை போட்ட பன்னீர்

இன்றைய கூட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால்தான், `பா.ஜ.க உடன் கூட்டணி முடிவாகிவிட்டது’ என்ற தொனியில் பன்னீர்செல்வம் தரப்பினரும் தமிழக பா.ஜ.க-வினரும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

`பா.ஜ.க அல்லாத பிரமாண்ட அணி!’ - எடப்பாடி விருப்பத்துக்குத் தடை போட்ட பன்னீர்
`பா.ஜ.க அல்லாத பிரமாண்ட அணி!’ - எடப்பாடி விருப்பத்துக்குத் தடை போட்ட பன்னீர்

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க கூட்டணியில் இணைவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. `பொதுக்கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். பா.ஜ.க கூட்டணியை அவர் விரும்பவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது அண்ணா தி.மு.க. இதற்காக தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து விருப்பமனு பெறும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியலை சரிபார்க்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். `அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி' என்ற தகவல் பரவிவரும் வேளையில், ``இன்று நடக்கவிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் புயல் வீசும்’’ என்கிறார் அ.தி.முக முன்னணி நிர்வாகி ஒருவர். இதுதொடர்பாக, மேலும் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

``பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 4 அமைச்சர்கள்தான் தீவிரம் காட்டி வருகின்றனர். `தேசியக் கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறோம். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் பரம ரகசியம். கூட்டணிகள் முடிவாகும்போது முடிச்சுகள் அவிழ்க்கப்படும்’ என்றார் ஓ.பி.எஸ். அவரது கருத்துக்குப் பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `தேசியக் கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டும் அல்ல’ என்றார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரையும், ` இதுவரையில் அ.தி.மு.க யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. ஜெயலலிதா வழியில் கூட்டணி அமைப்போம்’ என்றார். கூட்டணி தொடர்பாக, இரு வேறுபட்ட மோதல்கள் இருப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தில்தான் எடப்பாடி பழனிசாமியும் உறுதியாக இருக்கிறார். `பா.ஜ.க தலைவர்களின் நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன’ என ஆதங்கப்பட்டவர், 

``நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அல்லாத ஓர் அணியைக் கட்டமைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த அணிக்குள் பா.ம.க, தே.மு.தி.க, த.மா.கா, புதிய தமிழகம், ஜான் பாண்டியன் கட்சி ஆகியவற்றை இணைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்ள நினைக்கிறார். இந்த முடிவை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டால் நல்லது என்ற மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், சிட்டிங் எம்.பி-க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என யாருக்குமே பா.ஜ.க கூட்டணியில் உடன்பாடில்லை. பொதுக்கருத்தின் அடிப்படையில் இதைத்தான் அனைவரும் சொல்வார்கள்.

இதற்கு மாறாக, அனைவரும் விரும்பினால் பா.ஜ.க கூட்டணியை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக்கொள்வார். இன்றைய கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பலாம் என்பதால்தான், `பா.ஜ.க உடன் கூட்டணி முடிவாகிவிட்டது’ என்ற தொனியில் பன்னீர்செல்வம் தரப்பினரும் தமிழக பா.ஜ.க-வினரும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பொதுக் கருத்தை உருவாக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதில் பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். இதற்காக நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வேலைகளும் நடந்து வருகின்றன’’ என்றார் விரிவாக. 

இன்று நடக்கவிருக்கும் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. கொடநாடு விவகாரம் தொடர்பான வீடியோ வெளிவருவதற்கு முதல்நாள் அவர் பேசும்போது, `தமிழ்நாட்டு மக்களின் நலன்களை விரும்புகிறவர்களோடுதான் கூட்டணி வைப்போம். தமிழக மக்களைப் புறக்கணிப்பவர்களோடு சேர மாட்டோம். கஜா புயல் நிவாரண நிதியைப் பெறுவதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது’ என மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

கொடநாடு வீடியோ விவகாரம் வெளியானதால், அவர் அமைதியாகிவிட்டார். பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைந்தால், கட்சிக்குள் பன்னீர்செல்வம் கை உயர்ந்துவிட்டது என்று அர்த்தம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க-வைக் கழட்டிவிட்டுவிடலாம் எனவும் எடப்பாடி ஆதரவாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இவையெல்லாம் சாத்தியமாகுமா எனத் தெரியவில்லை. கூட்டணி யுத்தத்தில் எடப்பாடி வெல்வாரா என்பதுதான் கட்சிக்காரர்கள் மத்தியில் உள்ள மிக முக்கியமான கேள்வி" என்றார் நிதானமாக.