Published:Updated:

''நமக்குக் குழி பறிப்பவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்!''

திருமா முன் சீறிய சிறுத்தைகள்!

##~##

சைமொழி, குற்றச்சாட்டு, சண்டை, சமாதானம் என்று பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்தது விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்.

 திருச்சியில் கடந்த 6-ம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரான விடுதலைச் செழியன், ''தலைவரே, கட்சியைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் கும்பல் உங்களைச் சுற்றி இருக்கிறது. கட்சிக்காக வாங்கப்பட்ட இடத்தில்கூட, இதுபோன்ற நபர்களால் வில்லங்கம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நபர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் களை எடுங்கள்'' என்று பற்றவைத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடுத்துப் பேசிய வளர்செழியன், ''நமக்குக் குழி பறிப்பவர்கள் வெளியே எங்கேயும் இல்லை... இங்கேயேதான் இருக்கிறார்கள். நான், தேர்தல் பணிக்குழுவில் இடம் பெறுவதற்கே கையூட்டு கொடுத்தேன்'' என்று ஓர் அணுகுண்டை வீசிவிட்டுப் உட்கார்ந்தார்.

''நமக்குக் குழி பறிப்பவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்!''

மாநிலத் துணைச் செயலாளரான உஞ்சை அரசன்,  கட்சியின் பொதுச் செயலாளரான சிந்தனைச் செல்வனிடம், ''உட்கட்சி விவகாரங்கள் பற்றிப் பேச யாரையும் அனுமதிக்கக் கூடாது'' என்றார்.

''உட்கட்சி விவகாரங்களை பேசச் சொல்லி யாரையும் நான் தூண்டவில்லை. அவர்களாகப் பேசும்போது நான் என்ன செய்ய முடியும்?'' என்று சீறலாகப் பதில் சொன்னார் சிந்தனை செல்வன். இருவரையும் சமாதானப்படுத்திய திருமாவளவன், ''கட்சியின் அரசியல் பணி, செயல்பாடு பற்றி மட்டும் பேசுங்கள். உட்கட்சி விவகாரங்களையும் தனிநபர் வசைபாடுகளையும் தவிர்த்து விடுங்கள்'' என்று வேண்டுகோள் வைத்தார். ஆனாலும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தங்கள் புகார்களைத் தயக்கம் இல்லாமல் கொட்டித் தீர்த்தார்கள். ''திருமாவளவன் தன்னைச் சுற்றியுள்ள புல்லுருவிகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்தவில்லை என்றால், கட்சியை வளர்ப்பது கடினம்'' என்று பலரும் எச்சரித்துவிட்டே போனார்கள்.

''நமக்குக் குழி பறிப்பவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்!''

பொதுக்குழுவில் பேசிய ஒரே ஒரு பெண் ஜான்சி. ''பெண்ணுரிமை பற்றிப் பேசும் நமது கட்சியில், மேடை ஏறி கருத்துச் சொல்வதற்கே ஒரு பெண்ணாகிய நான் மணிக்கணக்கில் போராட வேண்டியிருந்தது. கட்சியின் அனைத்து விவகாரங்களிலும் முதலில் நீங்கள் பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். தேர்தல் பணிக் குழு என்கிற பொன்னாடையைப் போர்த்தி எங்களை ஏமாற்றாதீர்கள்'' என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

கட்சிக்கு நிதி சேர்ப்பது, புதிய தொலைக்காட்சி தொடங்குவது போன்ற ஆலோசனைகள் நடந்தன.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பேசும்போது, ''தலைவர் பிறந்த நாளான ஆகஸ்ட் 17-ம் தேதி புதிய தொலைக்காட்சி அலைவரிசையைத் துவங்குவதற்காக நாம் குறைந்தது 20 கோடி ரூபாய் நிதி தரவேண்டும். பண்டிகை தினங்களில் மது விற்பனை 100 கோடிக்கு மேல் நடைபெறுகிறது. இந்தப் பணத்தில் மிகப் பெரும்பாலான தொகை, நம் சமூகத்தவர்களுடையது. மதுவுக்காக இவ்வளவு செலவு செய்யும் நம் மக்களிடம் சென்று பேசி, நிதி திரட்டினால் 20 கோடி என்பது ஒரு விஷயமே அல்ல'' என்றார்.

''நமக்குக் குழி பறிப்பவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்!''

நிறைவாகப் பேசிய திருமாவளவன், ''கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் 10,000 ரூபாய் நிதி வழங்கினால், 30 கோடி ரூபாய் நிதி திரட்டி ஒரு ஊடகக் குழுமத்தை நாம் உருவாக்கலாம். 'ஊடகம் இல்லாத கட்சி’ என்னைப் பொறுத்தவரை ஆயுதம் இல்லாத போர் வீரனுக்குச் சமம். ஊடக பலம் இல்லாதவர்களைப் பொது மக்களும் புறக்கணிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது கட்சிக்கு ஆபத்தான நிலையை உண்டாக்கிவிடும்'' என்று எச்சரித்தவர்... ''பொதுக் குழு மேடையில் ஒருவர் பேசும்போது பலர் கூச்சல் போடுகிறீர்கள். சிலர் தாவிக் குதித்து மேடை ஏறி வந்து இடையூறு செய்கிறீர்கள். மேடைக்குப் பின்னால் கும்பலாக அணிவகுத்து நிற்கிறீர்கள். வேறு எந்தக் கட்சியின் நிகழ்ச்சியிலாவது இப்படி நடைபெறுவதைப் பார்த்து இருக்கிறீர்களா?! எனக்குப் பாதுகாவலர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர், மக்களிடம் இருந்து என்னைப் பிரிக்கின்றனர். இனியாவது ஒழுங்கைக் கடைபிடியுங்கள்'' என்று அறிவுறுத்தினார்.

வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுக்குழு கூடி கட்சியின் தலைவர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளைத் தேர்வு செய்வது வழக்கம். திருச்சியில் அப்படி ஒரு நிகழ்வு இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த தொண்டர்கள் ஏமாந்துபோயினர். மாநில நிர்வாகிகள் தேர்வு பிப்ரவரி மாத இறுதிக்குள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

திருமாவளவன் மேடையில் இருந்த​போது, 'கட்சிப் பொறுப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் நியமன முறையில் நிர்வாகிகள் அறிவிப்பதுதான் ஜனநாயக​மா?’ என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் பலமாக ஒலித்தது. அடுத்த கணம் அந்த மனிதர் அரங்கை விட்டு அப்புறப்படுத்தப்பட்டாலும், அந்தக் கேள்வி மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது!

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்