Published:Updated:

பலன் பெறுமா பா.ம.க?

பலன் பெறுமா பா.ம.க?
பிரீமியம் ஸ்டோரி
பலன் பெறுமா பா.ம.க?

தேர்தல் 2019 - இந்த வாரம்: பா.ம.க.

பலன் பெறுமா பா.ம.க?

தேர்தல் 2019 - இந்த வாரம்: பா.ம.க.

Published:Updated:
பலன் பெறுமா பா.ம.க?
பிரீமியம் ஸ்டோரி
பலன் பெறுமா பா.ம.க?
பலன் பெறுமா பா.ம.க?

பெரம்பலூரைத் தாண்டினால் பா.ம.க-வுக்குச் செல்வாக்கில்லை. ஆனாலும்கூட வட மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டுமானால் பா.ம.க-வுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டிய நிலைக்கு முக்கியக் கட்சிகளை வைத்திருந்தது பா.ம.க.  முதன்முறையாக 1989 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த பா.ம.க., 33 தொகுதிகளில் போட்டியிட்டு 15.61 லட்சம் வாக்குகளைப் பெற்றது. 5.82 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் கட்சிகளைத் திரும்பிப்பார்க்க வைத்தது.

நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் நடந்த 1991 தேர்தலில், சட்டசபைக்கு 14 லட்சம் வாக்குகளையும் நாடாளுமன்றத்துக்கு 12 லட்சம் வாக்குகளையும் பெற்றது பா.ம.க. ராஜீவ் காந்தி மரண அனுதாப அலை வீசிய சூறாவளியில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., பண்ருட்டித் தொகுதியில் மட்டும் ஜெயித்து முதன்முறையாகச் சட்டசபைக்குள் நுழைந்தது. பெரிய கட்சியான தி.மு.க-வே ஒரு இடத்தில்தான் வென்றது.

பலன் பெறுமா பா.ம.க?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா ஆட்சிக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த சூழலில், 1996-ல் தி.மு.க-வின் ஏழு கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகித்திருந்தது பா.ம.க. ‘`15 சட்டசபைத் தொகுதிகளும் 5 நாடாளுமன்ற இடங்களையும் ஒதுக்குவோம்’’ என்றார் கருணாநிதி. ‘`எங்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டாம்’’ எனப் பிகு பண்ணினார் ராமதாஸ். காங்கிரஸிலிருந்து பிரிந்த த.மா.கா-வோடு தி.மு.க கூட்டணி போட்டதால் பா.ம.க-வுக்குக் கதவு சாத்தப்பட்டது. புதிதாக உருவாகியிருந்த ம.தி.மு.க-வோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முயன்றது பா.ம.க. கூட்டணிக்குத் தலைமை யார் என்கிற பஞ்சாயத்தில் அங்கிருந்தும் விலகி, திவாரி காங்கிரஸுடன் கைகோத்தது. நான்கு எம்.எல்.ஏ-கள் சட்டசபைக்குள் நுழைந்தார்கள். பா.ம.க-வுக்கும் நான்கு இடம். அ.தி.மு.க-வுக்கும் நான்கு இடம்தான்.

1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இரண்டு வாசல்களைத் திறந்து வைத்துக் கொண்டு, தி.மு.க, அ.தி.மு.க  இரண்டு கட்சிகளிடமும் பேரம் பேசி, அரசியல் வியாபாரத்தை முதன்முதலில் தொடங்கினார். 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்து வீட்டில் முடங்கிக்கிடந்த ஜெயலலிதா, 1998 எம்.பி. தேர்தலில் கூட்டணி அமைக்க முயன்றபோது அதில் இணைந்தது பா.ம.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்று, வாஜ்பாய் அமைச்சரவையிலும் இடம் பிடித்தது.

13 மாதங்களில் வாஜ்பாய் ஆட்சியை ஜெயலலிதா ஒரு ஓட்டில் கவிழ்க்க... அறிவாலயத்துக்குத் தாவினார் ராமதாஸ். பா.ம.க-வுக்கும் வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸுக்கும் சேர்த்து எட்டுத் தொகுதிகளைக் கொடுத்த கருணாநிதி, அதை இருவரும் பிரித்துக்கொள்ளச் சொன்னார். ராமதாஸோ ஒரு தொகுதியை மட்டும் வாழப்பாடிக்கு ஒதுக்க... அவர் எதிர்ப்பு தெரிவித்து ஒதுங்கினார். ‘நல்லதாப்போச்சே’ என அந்த ஒன்றையும் தனதாக்கிக்கொண்டார். ஐந்து இடங்களில் வென்று, வழக்கம்போலவே மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தது.

அடுத்த தேர்தலிலேயே ராமதாஸ், ஜெயலலிதாவிடம் சீட்டு கேட்டுப் போய் நின்றார். 2001 சட்டசபைத் தேர்தல் நேரத்தில் வாஜ்பாய் அமைச்சரவையில் தி.மு.க., பா.ம.க கட்சிகள் அங்கம் வகித்தன. பா.ம.க-வைச் சேர்ந்த என்.டி.சண்முகம் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பொன்னுசாமி பெட்ரோலியத் துறை அமைச்சராகவும் இருந்தார்கள். திடீரென்று ஒருநாள், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அதிரடியாக அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தது பா.ம.க.

ஜெயலலிதா கொடுத்த 27 சீட்டுகளும் புதுச்சேரியில் இரண்டரை ஆண்டு ஆட்சிப் பங்கும்தான் மத்திய மந்திரி பதவிகளையே பா.ம.க துறக்கக் காரணம். தமிழகத்தில் 20 தொகுதிகளில் வென்றபோதும் புதுச்சேரியில் மண்ணைக் கவ்வியது. மத்தியில் இரண்டு அமைச்சர்களை இழந்த நிலையில் மகன் அன்புமணிக்காக ராஜ்யசபா சீட்டை ஜெயலலிதாவிடம் கேட்டார் ராமதாஸ். ‘அதைக் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, நம்மை உதறிவிட்டு வாஜ்பாய் அமைச்சரவையில் போய் மீண்டும் ஒட்டிக்கொள்வார்’ எனச் சரியாகக் கணித்த ஜெயலலிதா, ராஜ்யசபா சீட் தரவில்லை.

பலன் பெறுமா பா.ம.க?

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து உடனே விலகினார். “தன்மானத்தை இழந்துவிட்டு, அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்’’ என ஒரே போடு போட்டார். சண்முகத்துக்கு உணவு பதப்படுத்தல் துறையையும், ஏ.கே.மூர்த்திக்கு ரயில்வே துறையையும் வாங்கிக்கொண்டு வந்தார் ராமதாஸ். ஒரு கூட்டணியில் இடம்பெற்று மந்திரிசபையில் தொடர்ந்துகொண்டிருந்தபோதே அதை உதறிவிட்டு எதிரணியில் போய் 20 எம்.எல்.ஏ-களை ஜெயித்துவிட்டு, மீண்டும் அதே மத்திய மந்திரிசபையில் அமர்வது எல்லாம் அரசியலில் யாருமே கடைப்பிடிக்காத யுக்தி. அரசியல் அரிச்சுவடியின் புதிய அத்தியாயங்களை எழுதினார் ராமதாஸ்.

‘`கருணாநிதிக்கு வயதாகிவிட்டது. ஓய்வு எடுங்கள்’’ என 2001 சட்டசபைத் தேர்தலில் கிண்டல் அடித்த ராமதாஸ், 2004 எம்.பி தேர்தலில் அந்த வயதான கருணாநிதி கொடுத்த 6 சீட்டுகளை வாங்கிக்கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்தார். 6 தொகுதிகளிலும் பா.ம.க வென்றது. இந்த முறை மகனை மந்திரி அரியணையில் அமர வைத்தார் ராமதாஸ். அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆனார். 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் மட்டுமே வென்றது பா.ம.க. எதிர்பார்த்த அளவுக்குப் பா.ம.க வெற்றியைக் குவிக்க முடியாமல்போனதற்கு காரணம் விஜயகாந்தின் அரசியல் வரவு.  வன்னியர் கோட்டையான விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றியும் பெற்றார்.  

2006 சட்டசபைத் தேர்தலிலிருந்தே கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க-வுக்குக்கூட தொகுதிப் பங்கீடு முடிவடையாத நிலையில், 2009 எம்.பி தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் கடைசி நேரத்தில் அதிரடியாக நுழைந்து 7 தொகுதிகளை பா.ம.க வாங்கியது. ப்ளஸ் ராஜ்யசபா சீட் ஒன்றும். தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறும் பா.ம.க மீது கடும் கடுப்பில் இருந்த தி.மு.க., 7 தொகுதிகளிலும் பா.ம.க-வைத் தோற்கடித்தது. அடுத்த இரண்டே ஆண்டுகளில் அதே தி.மு.க-விடம் சரணடைந்தார் ராமதாஸ். பேரன் சுகந்தன் திருமண விழாவுக்குப் பத்திரிகை அளிக்கப் போன இடத்தில், கூட்டணிக்கும் சம்பந்தம் பேசிவிட்டு வந்ததெல்லாம் ராமதாஸுக்கு மட்டுமே கைகூடும். ஒவ்வொரு தேர்தலிலும் திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்த ராமதாஸ், 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு ‘`இனி அ.தி.மு.க., தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கமாட்டோம்’’ என்றார். 2014 எம்.பி. தேர்தலில், பரம எதிரியான தே.மு.தி.க கூட்டணியில் இணைந்தது பா.ம.க. 8 தொகுதியில் போட்டியிட்டு தர்மபுரியில் மட்டுமே வென்றது. 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. வாக்கு சதவிகிதம் 3.26 ஆகச் சரிந்தது.

பலன் பெறுமா பா.ம.க?

‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற முழக்கத்தோடு முதல்வர் வேட்பாளராக அன்புமணியை முன்னிறுத்தி 2016 சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது பா.ம.க. மாற்றத்துக்குப் பதிலாக ஏமாற்றத்தையே தந்தது தேர்தல் முடிவு. 2011-க்குப்பின் ‘திராவிடக் கட்சிகளை ஒழித்தே தீருவோம்’ என்று முழங்கிய ராமதாஸ், இப்போது அ.தி.மு.க கூட்டணியில்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எடப்பாடி அடிக்கல் நாட்டியபோது, ‘`ஊழலில்  திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியைத் தமிழகத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம்’’ எனக் கண்டித்த ராமதாஸ் இப்போது அதே அ.தி.மு.க அணியில். ‘`மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது’’ என்றார். அந்த பினாமிகளோடு இப்போது சேர்ந்திருக்கும் பா.ம.க-வின் பாவங்களை எங்கே கழுவுவார்கள்?

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, படம்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism