Published:Updated:

மிஸ்டர் கழுகு: திவாகரனைச் சுற்றி...

மிஸ்டர் கழுகு: திவாகரனைச் சுற்றி...

##~##

''தமிழகத்து நீரா ராடியாக்கள் யார் யார் என்று பட்டியல் ரெடி ஆகி​விட்டது. அதுபற்றி, கடைசியாகச் சொல்கிறேன்!'' _ வந்து இறங்கியதுமே சஸ்பென்ஸ் வைத்தார் கழுகார்! அடுத்த மேட்டருக்குத் தாவினார்.   

''சசிகலா நீக்கத்தைத் தொடர்ந்து மேலும் சில சுத்தப்படுத்தும் காரியங்கள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. மன்னார்குடி திவாகரனுக்கு, தமிழகத்து முக்கிய நிகழ்வுகளை சில உயர் அதிகாரிகள் தினமும் சொல்லி வந்தார்களாம். 'டெய்லி சிச்சுவேஷன் ரிப்போர்ட்’ (டி.எஸ்.ஆர்) என்று சொல்வார்கள். முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.. ஆகியோருக்குத்தான் இந்த டி.எஸ்.ஆர். சொல்லப்படுவது வழக்கம். அந்தப் பட்டியலில் திவாகரன் பெயரும் ரகசியமாக இடம்பெற்று இருந்ததாம். இதைக் கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மேலிடத்தில் அழைத்து, செமபரேடு நடந்ததாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு: திவாகரனைச் சுற்றி...

சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வரும் தனியார் பேருந்து ஒன்றில் சில பார்சல்கள் அடிக்கடி வந்ததாகத் தகவல். அந்தப் பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களிடம் ரகசிய விசாரணை நடக்கிறது. அவர்கள் சொல்லும் தகவல்களை வைத்து சில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள். திவாகரனின் முக்கிய விசுவாசியான ஓ.எஸ்.மணியனை கட்சியைவிட்டு நீக்கினார் ஜெயலலிதா. அதோடு விடவில்லை. மன்னார்குடியின் புறநகர் பகுதியில் பிளாட் போட்டு புதிய நகர் ஒன்றை உருவாக்க ஏற்பாடு செய்து வந்தாராம் திவாகரன். ஜனவரி 8-ம் தேதி அன்று வருவாய்த் துறையின் உயர் அதிகாரிகள் நேரில் வந்து அந்த ஏரியாவை இன்ச் பை இன்ச் அளந்தார்களாம். விதிமீறல் இருப்பதாக வந்த புகாரை அடுத்துத்தான் இந்த நடவடிக்கையாம். அதிகாரிகளின் ரிப்போர்ட்டை ஆட்சி மேலிடத்துக்கு உடனே அனுப்பிவைத்து, அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார்கள்.''

''பொதுவாகவே, நடவடிக்கைகள் திவாகரனைச் சுற்றியே நடப்பது போல் தெரிகிறதே?''

''திவாகரனுக்குச் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த சேவியர் தன்ராஜை அங்கே இருந்து முன்னர் மாற்றினார்கள். அவரை மீண்டும் அதே மாவட்டத்துக்கு நியமித்து இருக்கிறார்கள். பாஸ்கரன் என்கிற போலீஸ் அதிகாரியை மண்டபத்துக்குத் தூக்கி அடித்தார்கள். அவருக்கும் தற்போது மன்னார்குடியில் போஸ்டிங் போடப்பட்டுவிட்டது. இருவரும் கம்பீரமாக நடமாடி வருகிறார்களாம்.''

''திவாகரன் இப்போது எங்கே இருக்கிறார்?''

''புத்தாண்டு தினத்தன்று சிங்கப்பூர் போவதாக முன்கூட்டியே சொல்லி இருந்தாராம். அதனால், நெருக்கமானவர்கள்கூட அவர் வீட்டுக்குப் போகவில்லை. ஆனால், எங்கேயும் கிளம்பாமல் வீட்டிலேயேதான் சார் இருந்தாராம்.''

''சசிகலா தரப்பு ரியாக்ஷன்?''

''என்ன சொல்வது? பலருக்கும் உயிர் பயம் வந்துவிட்டது. 'ஆளும் கட்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தி விடுவார்களோ?’ என்ற பீதியில் இருக்கிறார்கள். அதனால்தான், வெளியில் தலைகாட்டுவது இல்லை. மன்னார்குடி அருகே உள்ள ஊரைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி போயஸ் கார்டனில் பணியில் இருந்தார். அவரை மாற்றிவிட்டார்கள். அவரின் மாமனாருக்கும் திவாகரனுக்கும் சிவில் விவகாரத்தில் ஏதோ மனத்தாங்கல் இருந்ததாம். பாதிக்கப்பட்ட அவர், திவாகரன் நீக்கப்பட்ட நாளன்று பெரிய கும்பலுடன் போய் அவர் வீட்டு வாசலில் நின்று தகராறு செய்தாராம். எதிர்த்துப் பேச முடியாமல்

மிஸ்டர் கழுகு: திவாகரனைச் சுற்றி...

விக்கித்துப்போனாராம் திவாகரன். இவரைப்போலவே, கோயமுத்தூரில் அ.தி.மு.க-வின் வட்டச்செயலாளர் ஒருவர், ராவணனின் ஆதிக்கத்தை எதிர்த்து, சில மாதங்களுக்கு முன் அவரை நேருக்கு நேராகத் திட்டினாராம். உடனே, போலீஸ் வந்து அந்தக் கட்சிப் பிரமுகர் மீது பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியதாம். அந்தப் பிரமுகர் இப்போது வெளியே வந்துவிட்டாராம்.

'ராவணன் பற்றி நான் அன்று சொன்னது இன்று நடந்துவிட்டது. வரட்டும்... என் கையால் நையப்புடைத்தால்தான் என் மனது ஆறுதல் அடையும்' என்று சொல்லி வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்களாம் பலர். இப்படி ஊருக்கு ஊர் கட்சி ரீதியாகவும், அரசாங்க வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கை பார்க்க ரெடியாகக் காத்திருக்கிறார்களாம்.''

''அப்படியா?''

''கடந்த வாரம் ஸ்ரீதர் வாண்டையாரின் அக்கா இறந்துபோனார். அந்தத் துக்க நிகழ்ச்சிக்கு எம்.நடராஜன், அவரது சகோதரர்கள் எம்.ராமச்சந்திரன், பழனிவேல் மூவரும் போயிருக்கிறார்கள். வழக்கமாக இவர்களிடம் வலிய வந்து பேசும் பிரமுகர்கள் பலரும்  முகங்களை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்களாம்.''  

''ஓ! முக்குலத்தோர் சமூக மக்கள் என்ன நினைக்கிறார்களாம்?''

''இந்தக் கவலை ஆட்சி மேலிடத்துக்கும் இருந்தது. மத்தியில் தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சசிகலாவின் உள்வட்ட உறவினர்கள் தவிர, ஏனைய மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூகப் பிரமுகர்களிடம் ஒரு சர்வே நடத்தி முடித்து விட்டார்கள். 'சசிகலாவால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை சரிதான். நாங்கள் எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டப்போவது இல்லை’ என்றார்களாம் சத்தியம் பண்ணாத குறையாக!''

''ராவணன் என்ன ஆனார்?''

''அடக்க ஒடுக்கமாக இருக்கிறார். அவரால் திருப்பூரில் ஓரங்கட்டப்பட்ட சிவசாமி எம்.பி-க்கு இப்போது ஏறுமுகம். பண விவகாரத்தில் ராவணனுக்கு சரியான ஒத்துழைப்பு தராததே சிவசாமி டம்மி ஆக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். ராவணனின் வீட்டில் அன்-அஃபிஷியலாக நடந்த ரெய்டில் சில விவகாரங்கள் சிக்கி உள்ளனவாம். சென்னை அண்ணா நகரில் அபார்ட்மென்ட் ஒன்று கைமாறியிருக்கிறதா? அதற்கு பணம் வந்த ரிஷிமூலம் என்ன? விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் பவனி வந்தது எப்படி? முறைப்படி அனுமதி வாங்கி அந்தக் கார் வந்ததா? என்று தீவிர விசாரணை நடக்கிறது.''

''களை எடுப்பு முடிந்து விட்டதா?''

மிஸ்டர் கழுகு: திவாகரனைச் சுற்றி...

''அ.தி.மு.க-வில் சசிகலா ஆதரவாளர்கள் குறித்த ரகசியக் கண்காணிப்பு இப்போதும் தொடர்கிறது. அதனால், கட்சியில் களையெடுப்புப் படலம் முடிந்துவிடவில்லை. இதில், இப்போது சிக்கி இருப்பவர், நெல்லை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த பி.ஜி.ராஜேந்திரன். எம்.நடராஜனுடன் நெருக்கமாக இருந்ததால், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டதாக ஒரு பேச்சு இருந்தது. இந்த நிலையில், முதலில் இவரால் மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போதே இவரது பொறுப்பு காலியாகிவிடும் என்கிற பேச்சு பலமாக அடிபட்டது.

ஆனால், அப்போது தப்பிய இவர் இப்போது சிக்கிக்கொண்டார் என்கிறார்கள். கட்சியில் இருந்து விலக்கப்பட்ட நபர்களுடன் தொடர்ந்து அவர் தொடர்பில் இருப்பதாக நம்பகமான வட்டாரத்தில் இருந்து தகவல். அவரைக் கட்சியில் இருந்து தூக்கிவிட முடிவு செய்யப்பட்டு, பிறகு எம்.எல்.ஏ-வாக இருப்பதால், கடைசி நேரத்தில் தப்பித்தார் என்று கிசுகிசுக்கிறார்கள். ஆனால், அவர் வகித்து வந்த நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ-வான முருகையா பாண்டியன் வசம் சென்றுவிட்டது.''

''தினகரனைப் பற்றி செய்தியே இல்லையே?''

''கடந்த 5-ம் தேதி வேலூர் தங்கக் கோயிலில் சக்தி அம்மாவின் 36-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது வந்து சென்றவர்களில் தினகரனும் ஒருவர். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கினாராம். 'தினகரனுக்கும் தங்கக் கோயிலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா..?’ என விசாரிக்கும்படி இப்போது உத்தரவாம்.''

''இப்போதாவது தமிழகத்து நீரா ராடியாக்கள் ரகசியத்தைச் சொல்லக் கூடாதா?''

''டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து கடைகளுக்கு மதுபான சப்ளை செய்யும் உரிமைகளைப் பெற்றுள்ள லாரி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. ஒன்பது அமைச்சர்களுக்கு ராஜகுருவாக விளங்கி வருகிறாராம் லட்சுமி கடாட்சமான இன்னொருவர்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் இவரது பாக்கெட்டில் என்கிறார்கள். பிசினஸ் டீலிங் என்றால், இரு தரப்பினரையும் சந்திக்க வைப்பதுதான் இவரது பணி. கடந்த ஆறு மாதங்களில் இவர் பயன்படுத்திய பல்வேறு செல்போன் எண்களுடன் தொடர்புவைத்திருந்த கட்சிப் பிரபலங்களின் பட்டியல், டீலிங் விவரங்களை போலீஸ் பட்டியல் போட்டுள்ளது. இந்த இரண்டு நபர்களுக்கும் விரைவில் கட்டிங் போட இருப்பதாகத் தகவல். மீண்டும் சந்திப்போம்!'' - மின்னலாய்ப் பறந்தார் கழுகார்!

 தத்தளித்த ஜெ. ஹெலிகாப்டர்!

கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகப் பார்க்க, முதல்வர் ஜெயலலிதா கடந்த 4-ம் தேதி கிளம்பினார். நேப்பியர் பாலம் அருகே உள்ள கடற்படை ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்தவர் ஏறி அமர்ந்ததும், ஹெலிகாப்டர் மேலே கிளம்பி இருக்கிறது. பத்து அடி மட்டுமே பறந்த நிலையில், திடீரென காற்றின் வேகம் அதிகரிக்கவே, ஹெலிகாப்டர் திடீரென சைடு வாங்கியதாம். மேலேயும் எழும்பாமல், கீழேயும் இறங்காமல் ஒரு பக்கமாகவே சில நொடிகள் தத்தளித்ததைப் பார்த்த போலீஸ் அதிகாரிகள் பதறி இருக்கிறார்கள். நல்லவேளையாக, பைலட் சுதாரித்து சர்ரென்று வானில் உயரத் தூக்கி விட்டாராம். அதைப் பார்த்த பிறகுதான், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்.

 ''இது பொங்கல் நேரத்து வெற்றி!''

விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டதாகச் சொல்லி, தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்த 30-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டது. கடைகளைத் திறக்கக்கோரி தி.நகர் வியாபாரிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. உயர் நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றபோது, 'சி.எம்.டி.ஏ-வின் கண்காணிப்பு குழுதான் கடைகளைத் திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்று சொல்லப்பட்டது. இதனால், ரங்கநாதன் தெரு வியாபாரிகள் ரொம்பவே நொந்துபோனார்கள்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடிய தி.நகர் வியாபாரிகள், 'திடீரென்று கடைகள் மூடப்பட்டதால், எங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம். வருகிற பொங்கல் பண்டிகை காலத்தை முன்னிட்டாவது கடைகளைத் திறக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று முறையிட்டார்கள். அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆறு வார காலத்துக்குக் கடைகளை திறந்துகொள்ள இடைக்கால அனுமதியை வழங்கி இருக்கிறது. 'இது எங்களுடைய முதல் வெற்றி. இனி, நிரந்தரமாக கடைகளைத் திறப்பதற்கான அனுமதியையும் நிச்சயம் வாங்கி விடுவோம்’ என்று உற்சாகமாக இருக்கிறார்கள் தி.நகர் வியாபாரிகள். 

ஸ்டாலின் இன்டர்வியூ!

கார்ப்பரேட் கம்பெனி இன்டர்வியூ ஸ்டைலில் இளைஞர் அணியின் கீழ்மட்டப் பொறுப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். சென்னை அன்பகத்தில் அண்மையில் 170 பதவி​களுக்​கான வாக்-இன் இன்டர்வியூ நடத்தினார் ஸ்டாலின். காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்புகளில் இப்போது உள்ள சீனியர்களை நீக்கிவிட்டு, 30 வயதுள்ள இளைஞர்களை அந்தப் பதவிகளில் நியமிக்க இருக்கிறார்களாம். 500-க்கும் அதிகமானவர்கள் இன்டர்வியூக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம்  ஸ்டாலினே கேள்வி கேட்டார். இளைஞர் அணி முக்கியப் பொறுப்பாளர்கள், அவர்களின் பயோடேட்டா மற்றும் சான்றிதழ்களைச் சரிபார்த்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் விரைவில் வெளிவரும் என அறிவித்தாராம் ஸ்டாலின். இதே ஸ்டைலில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறார் ஸ்டாலின்!