Published:Updated:

“கொங்கு மண்டலத்தில் நாங்களும் ஸ்டிராங்கா இருக்கோம்!” - வானதி சீனிவாசன் அதிரடி...

நவீன் இளங்கோவன்
“கொங்கு மண்டலத்தில் நாங்களும் ஸ்டிராங்கா இருக்கோம்!” - வானதி சீனிவாசன் அதிரடி...
“கொங்கு மண்டலத்தில் நாங்களும் ஸ்டிராங்கா இருக்கோம்!” - வானதி சீனிவாசன் அதிரடி...

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கூட்டணிப் பங்கீடுகள் மற்றும் தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகின்றன. பா.ஜ.க தரப்பிலோ பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை வைத்து தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தித் தேர்தல் பிரசாரத்தையே ஆரம்பிக்க இருக்கின்றனர்.

வருகின்ற 10-ம் தேதி திருப்பூரில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் துவக்கி வைக்க இருக்கிறார். அதேபோல, வருகின்ற 14-ம் தேதி ஈரோட்டை அடுத்த சித்தோடு பகுதியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா கலந்துகொள்கிறார். இந்த இரண்டு பொதுக்கூட்டங்களுக்காக பா.ஜ.க தரப்பில் பிரமாண்டமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூரில் பொதுக்கூட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஈரோட்டிற்கு வந்த தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், அமித் ஷா கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளையும் பார்வையிட்டு, நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

பா.ஜ.க நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசனிடம், ‘தி.மு.க., அ.தி.மு.க வலுவாக இருக்கக்கூடிய கொங்கு மண்டலத்தில் மோடி பிரசாரம் எந்த அளவிற்குப் பயனளிக்கும்!’ என்ற தொனியில் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்ப, “கொங்கு மண்டலத்தில் தி.மு.க, அ.தி.மு.க மட்டுமல்ல நாங்களும் தான் வலுவாக இருக்கிறோம். இதற்கு முன்பாக கோயம்புத்தூர், நீலகிரி தொகுதி எம்.பிக்களாக பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் சி.பி.இராதாகிருஷ்ணன் கோயம்புத்தூரில் வாய்ப்பை இழந்தார். பொள்ளாச்சி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட கொங்கு ஈஸ்வரன், தி.மு.கவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தார். கொங்கு மண்டலப் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய நாடாளுமன்றத் தொகுதிகள் அத்தனையிலும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த நடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்ட போதும் கொங்கு மண்டலத்தில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது” என்று கொங்கு மண்டலத்தில் பா.ஜ.கவின் வலுவை வார்த்தைகளால் அடுக்கினார்.

தொடர்ந்து பேசியவர், “கொங்கு மண்டத்தில் உள்ள தொகுதிகளில் எங்களுக்கு ஏற்கனவே வலுவான ஆதரவு இருக்கிறது. இப்போது அந்த தொகுதிகளை, பா.ஜ.கவிற்கு வெற்றித் தொகுதிகளாக மாற்றுவதற்காக எங்கள் பிரதமர் திருப்பூருக்கு வருகிறார். கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது. அடுத்த முறை அமைக்கக்கூடிய மத்திய அரசாங்கத்தில் இந்த பகுதியைச் சேர்ந்த எம்.பிக்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கப் போகிறார்கள்” என்றார்

இந்துமத திருமணம் குறித்த ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு, தி.மு.க நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “இன்றைய தேதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் கிண்டல் செய்து, கேலி செய்து பேசக்கூடிய தி.மு.கவின் அணுகுமுறை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் முன்னிலையில் பெரிய எதிர்ப்பினை உருவாக்கியிருக்கிறது. ஸ்டாலின் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க பழைய வழிமுறைகளில் போய் ஆதரவு திரட்ட நினைத்தால் ஏமாந்து போய்விடும். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட கிராம சபைகளை எல்லாம், இப்ப ஆட்சிக்கு வரமுடியுமா என்கின்ற ஆசையோடு ஸ்டாலின் எட்டிப் பார்க்கிறார். ஒருபோதும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை” என்று கூறினார்,