Published:Updated:

ராமலிங்கம் கொலைப் பின்னணியில் இருப்பவர் யார்?- சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்!

ராமலிங்கம் கொலைப் பின்னணியில் இருப்பவர் யார்?- சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்!
ராமலிங்கம் கொலைப் பின்னணியில் இருப்பவர் யார்?- சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்!

"ராமலிங்கம் படுகொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு அதை உட்படுத்த வேண்டும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி, வாக்குச்சாவடிகள் பணிக்குழுவின் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலாேசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

திருபுவனம் அருகே நடந்த பாமக பிரமுகர் கொலையானது மதக்கலவரத்தை தூண்டுவது மாதிரியான செயல்பாடு இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீங்க?

``மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் நடக்கிற எந்த வன்முறையை விடுதலை சிறுத்தைகள் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறது. அங்கே நடந்த கொலை மதமாற்றத்தை தடுப்பதற்காக அவர் முயற்சித்தார் என்றும் அவ்வாறு மதமாற்றம் முயற்சித்தவர்களின் நெற்றியிலே திருநீறு பூசினார் என்றும் அந்த ஆத்திரத்தில்தான் அவர் கொல்லப்பட்டார் என்றும் சமூகவளைத்தலங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன. அதேவேளையில் அதே சமூகவளைத்தலங்களில் அவருடைய தனிப்பட்ட விரோதத்தால்தான் இது நிகழ்ந்தது என்றும் மதமாற்றம் என்பது சிலர் திட்டமிட்டு பரப்புகிற வதந்தி. அப்படி ஒரு சம்பவம் அங்கு நிகழவே இல்லை என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. எனவே, ராமலிங்கம் படுகொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு அதை உட்படுத்த வேண்டும். இந்தப் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இது மதத்தின் பெயரால் தூண்டப்பட்டிருக்குமேயானால் அல்லது மதத்தின் பெயரால் இங்கே வன்முறையை தூண்டுவதற்கு யாரேனும் சதி செய்து இந்த தகவல்களை வதந்தியாக பரப்புவார்களேயானால், அவ்வாறு வதந்தை பரப்புவோர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இன்றைய கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதா?

``இன்றைய கூட்டம் தேர்தல் பணிகளை எவ்வாறு தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்களுடன் கலந்தாலோசிக்க இருக்கிறோம். கூட்டணி குறித்து, தொகுதிப்பங்கீடு குறித்து முடிவெடுக்கக்கூடிய ஒரு கூட்டம் அல்ல இன்றையக் கூட்டம். நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் 90 பேர் பங்கேற்கிறார்கள். எல்லாத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி, வாக்குச்சாவடிகள் பணிக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்கிற பணிகளை ஏற்கெனவே ஒப்படைத்திருக்கிறோம் என்றாலும் இதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும், விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்கான ஒரு கலந்தாய்வுக் கூட்டம்.''

தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எந்தளவுக்கு இருக்கிறது?

``நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்போடு எல்லோரும் காத்திருக்கிறோம். இந்த அறிவிப்பு வந்த பிறகு திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையில் திமுகவின் பேச்சுவார்த்தை குழுவோடு பேச்சுவார்த்தை தொடங்கும். அந்த எதிர்ப்பார்ப்போடு கூட்டணி கட்சிகள் இருக்கிறோம்.''

நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதா?

``நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன். சிதம்பரம் தொகுதியில் 1999ல் இருந்து நான் போட்டியிட்டு வருகிறேன். எனது சொந்தத் தொகுதி. அங்குதான் எனக்கு வாக்கு இருக்கிறது. ஆகவே அந்த தொகுதியில் போட்டியிடுவது எனது விருப்பம் என்கிற அடிப்படையில் நான் ஏற்கெனவே கருத்து தெரிவித்து இருக்கிறேன். மறுபடியும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்போது எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப்போகிறோம் என்கிற பட்டியலைத் தருவோம். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். சுமுகமான தீர்வை காண்போம்.''

ச்

பாமக- பாஜக அல்லாத கூட்டணியில் இருப்போம் என்கிறீர்கள். திமுக கூட்டணிக்கு பாமக வரும் என்ற முகாந்திரம் இருக்கிறதா?

ஊடகத் தளங்கள், சமூகவளைத்தலங்களில் மட்டுமே இவ்வாறான தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. இது திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு இந்த விவாதத்தை சிலர் திணிக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தலைமையில் இன்னும் கூட்டணி அமையவில்லை. பாஜக தலைமையில் கூட்டணி அமையவில்லை. டி.டி.வி.தினகரன் தலைமையில் அணி அமையும் என்று சொல்கிறார்கள். அப்படி எந்தவொரு தோற்றமும் இன்னும் உருவாகவில்லை.

ஒருபுறம் கமல்ஹாசன் தனியே ஒரு அணியை கட்டுவார், அவர் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியை உருவாக்குவார் என்கிற தகவலை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் தமிழ்நாட்டில் இதுவரையில் திமுக தலைமையில்தான் ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. கூட்டணிக்கான உருவம், வடிவம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே இன்னும் எந்த ஒருங்கிணைவும் ஏற்படவில்லை. இந்த நிலையால், இந்த காரணத்தால், திமுக கூட்டணியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், அதை பலவீனப்படுத்த வேண்டும், திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று கருதும் இவர்கள் திட்டமிட்டு சில வதந்திகளை பரப்புகிறார்கள். அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்களின் கனவுகள் நிறைவேறாது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக கூட்டணி இணைக்காக இருக்கிறது. பேச்சுவார்த்தையிலும் நாங்கள் சுமுகமாக தீர்வு காண்போம். கட்டாயமான நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

மதசார்பற்ற கமல்ஹாசன் எங்கள் அணியில் இணைந்தால் எங்கள் அணி இன்னும் வலுசேரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீங்க?

ஒரு நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். திமுக- அதிமுக இரண்டுக்கும் எதிராக கமல்ஹாசன் பேசிவரும் நிலையில் அதை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு யுத்தியாக நான் பார்க்கிறேன்.