Published:Updated:

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்! - திருப்பூரில் வைகோ கைது

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்! - திருப்பூரில் வைகோ கைது
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்! - திருப்பூரில் வைகோ கைது

பிரதமர் மோடி  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக்கொடி ஏந்தியும்,மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் இன்று காலை முதல் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


 

அண்ணா, பெரியார், திருப்பூர் குமரன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ,

`` ஏன் நாங்கள் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுகிறோம், காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதி கொடுத்தவர் மோடி. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.  கஜா புயலின்போது இறந்த 89 பேருக்கு அனுதாப வார்த்தை கூட சொல்ல முடியாமல் இருந்த மனிதநேயமற்ற நபர் மோடி. 25,000 கோடி நிதியுதவி கேட்டும் அதில் 5 சதவிகிதம் கூட தராமல் தமிழகத்தை வஞ்சித்தவர். நீட் தேர்வின் மூலம் நம் பிள்ளைகளை படிக்க முடியாமல் செய்ததும் மோடி தான்.

முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த பின்னும் கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதி கோரியதற்கு ஆய்வறிக்கை அனுப்புமாறு கூறி தமிழர்களுக்குத் துரோகம் செய்தது இந்த மத்திய அரசு. இதனால் 19 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும். விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுக்கு விற்கும் சூழல் வரும். ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கும் கார்ப்பரேட்டுக்கும் பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இதற்கு நம் மாநில அரசு கூட துணை போவது நம் விவசாயிகளுக்கு செய்யும் பச்சை துரோகம்.

நியூட்ரினோ திட்டத்தால் இடுக்கி அணையும் முல்லைப் பெரியாறு அணையும் உடைய வாய்ப்புள்ளது. இதையெல்லாம் கேள்வி கேட்பதால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில் இதுவரை 100 வண்டிகளை உடைத்துள்ளனர். வைகோவை ஒரு கை பார்ப்போம்னு போஸ்டர் வேற ஒட்டியிருக்காங்க. நான் இப்போது வரை பாதுகாப்பு வசதி ஏதும் இல்லாமல் தான் காரில் பயணம் செல்கிறேன். முடிந்தால் தொடட்டும். இந்துத்துவா சக்திகளுக்கு இந்தத் துணிச்சலைக் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி அரசு தான்.

பெரியார் சிலையை உடைப்பேன் செருப்பால் அடிப்பேன் என்று சொல்பவர்கள் திருட்டுத்தனமாக அதைச் செய்யாமல் இந்த தேதியில் தான் செய்வேன் என்று சொல்லட்டும் பார்க்கலாம். வருபவர் திரும்பிச் செல்ல முடியாது. அந்த இடத்தில் என் கட்சி இருக்கும் அல்லது நான் இருப்பேன். இந்தப் போராட்டம் திராவிட இயக்கத்தின் லட்சியங்களை, அண்ணாவின் கனவுகளை, பெரியாரின் சுயமரியாதையை காக்கின்ற போராட்டம்" என்றார்.

அவர் பேசிக்கொண்டிருக்கையில் பா.ஜ.க மகளிரணியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண் 'பாரத் மாதா கி ஜே' என்று முழக்கமிட்டார். ஆத்திரமடைந்த ம.தி.மு.க தொண்டர்கள் அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை அவர்களை கலைத்து விட்டனர்.

போலீஸார் வைகோ பேச்சின் இடையில் அனைவரையும் கைது செய்ய முயன்றபோது ம.தி.மு.க தொண்டர் படையைச் சேர்ந்த திலகர் மின்சார கம்பம் மேலே ஏறி கூட்டத்தைக் கலைத்தால் குதித்து விடுவதாக ஆர்ப்பாட்டம் செய்தார். பின் போலீஸார் கைது நடவடிக்கையை கைவிட்டனர். வைகோ அந்த இளைஞரை கீழே இறங்கச் சொல்லி தன் வேனில் அமரவைத்துக் கொண்டார்.

போராட்டத்தின் முடிவில் மோடிக்கு எதிரான கோஷமிட்டு கறுப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். பின் அனைவரையும் போலீஸார் கைது செய்து மண்டபங்களில் அடைத்தனர்.


 


 

கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் ஆர்ப்பாட்டத்தை முடிக்காமல் தொடர்ந்துகொண்டே இருந்ததால் வைகோவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

அதேபோன்று மோடி திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தினர். திருப்பூர் டவுன்ஹால் முன் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் மோடி எதிர்ப்பு வாசகங்களை கையில் ஏந்தியும் முழக்கமிட்டனர். போராட்டக்காரர்கள் கறுப்பு பலூன் பறக்கவிட்டும் பா.ஜ.க கொடியை எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அனுமதிக்கப்பட்ட இடம் விடுத்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. அதனால் போலீஸார் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அடுத்த கட்டுரைக்கு