Published:Updated:

`என்னைத் தோற்கடிக்க மெகா கூட்டணியா?’ - திருப்பூரில் தகித்த மோடி

`என்னைத் தோற்கடிக்க மெகா கூட்டணியா?’ - திருப்பூரில் தகித்த மோடி
`என்னைத் தோற்கடிக்க மெகா கூட்டணியா?’ - திருப்பூரில் தகித்த மோடி

ஆந்திர நிகழ்ச்சிகள் முடிந்ததும் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவை வந்த மோடி, அங்கிருந்து  ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தார். திருப்பூர் பெருமாநல்லூரில் அவருக்கு இரண்டு மேடைகள் போடப்பட்டன. பா.ஜ.க தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்காக ஒரு மேடையும், அரசு  நிகழ்ச்சிக்காக மற்றொரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. 

அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த மோடி பின்னர் பிரசார மேடைக்குச் சென்றார். அங்கு பேசிய அவர், ``திருப்பூர் மண்ணுக்குத் தலைவணங்குகிறேன். தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் போன்றோரது தியாகங்களை எண்ணிப் பார்க்கிறேன். தொழிலாளர்கள் நிறைந்த இந்நகரத்தில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள். மீண்டும் மோடி வேண்டும் என்ற வாசகத்தைத் தாங்கிய பனியன்கள் இப்போது வந்துகொண்டு இருக்கின்றன. அதை உற்பத்தி செய்யும் நகரமே திருப்பூர் தான்.

தமிழகத்தை முன்னேற்றும் பல திட்டங்கள் இன்று துவக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக திருச்சி விமான நிலையத்தில் உச்சகட்ட நெருக்கடியின்போது 500 பயணிகள் மட்டுமே வந்து செல்ல முடிந்தது. ஆனால், இன்று நாம் அடிக்கல் நாட்டியுள்ள ஒருங்கிணைந்த கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தால் சுமார் 3,000 பயணிகள் வரை வசதி பெறுவார்கள். நாட்டு மக்களின் வாழ்க்கையைச் சுலபமாக்க பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.


திருப்பூரிலும், சென்னையிலும் இ.எஸ்.ஐ  மருத்துவமனை வரவிருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். சிறு, குறு தொழில்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி திருப்பூர். அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு 60 வயது நிறைவடைந்த உடன் மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த அரசு செயல்படும் முறை என்பது முந்தைய அரசுகளைவிட வித்தியாசமானது. பாதுகாப்பு பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல் இருந்த கடந்தகால காங்கிரஸ் அரசு, புரோக்கர்களை வைத்து ஆட்சி செய்தது. ஆனால் அதே காங்கிரஸ்காரர்கள்தான் நமது ராணுவம், ராணுவப் புரட்சியை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டினார்கள். நம் ராணுவம் ஒருபோதும் அப்படிச் செய்யாது.

இந்தியாவிலேயே ஆயுஷ்மான் பவன் திட்டத்தில் 11 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 18,000 கிராமங்கள் மின்வசதி பெற்றிருக்கின்றன. 1.30 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்துக்கான 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எல்லோரும் முறையாக வரி செலுத்துவதால்தான் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறது. நம்நாட்டின் முன்னேற்றத்தை உலகமே பார்த்துக்கொண்டு இருக்கின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியின்  செயல்பாடுகள்மீது எதிரிகளுக்கு இருந்த வருத்தம் இப்போது விரக்தியாக மாறியிருக்கின்றன.
எதிர்க்கட்சியினர் வினோதமானவர்கள். மோடி அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது எனச் சொல்லும் அவர்கள்  மோடியைத் தோற்கடிக்க எதற்காக மெகா கூட்டணியைத் தேடிச் செல்கிறார்கள்’’ என்றார் காட்டமாக.