Published:Updated:

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

Published:Updated:
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முடியாது!

ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது. ஜெயலலிதாவைப் போலவே தனி வேன் மூலம் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து மக்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்தமுறை மைதானங்களில் போடப்படும் பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்கிறார்கள். எட்டுவழிச் சாலைத் திட்டம் தொடங்கி, பொள்ளாச்சி விவகாரம்வரை இப்போது சகலத் திசைகளிலும் எதிர்ப்புகள் நிரம்பிவழிவதால், பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்ட முடியாது என்பதால் இந்தத் திட்டமாம். இதனால், சாலையோரப் பயணப் பிரசாரங்களாகவே நிறையத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக, ஜெயலலிதா பயன்படுத்தியதைப் போன்ற அதே மாடலில், சகல வசதிகளுடன் கூடிய வேன் ஒன்று கோவையில் தயாராகிவருகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

‘உள்ளடி’யால் அ.ம.மு.க-வுக்கு சாதகம்!  

.தி.மு.க-வில் நாமக்கல் வேட்பாளராக பி.ஆர்.சுந்தரம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காளியப்பன் நிறுத்தப்பட்டுள்ளார். இது பி.ஆர்.சுந்தரத்தின் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “கடைசிக்கட்டப் பட்டியலில்கூட சுந்தரம் பெயர் இருந்தது.  இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, காளியப்பனுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிருப்தி நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்” என்று எச்சரிக்கிறார்கள் உள்ளூர் அ.தி.மு.க-வினர். இன்னொரு பக்கம், நாமக்கல் தொகுதியில் தி.மு.க போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில், கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. அந்தக் கட்சியினரும் கூட்டணியில் இருக்கும் திருமாவை எதிர்க்கும் மனநிலையில் இருக்கிறார்களாம். “அ.தி.மு.க., கொ.ம.தே.க ஆகிய இரண்டிலும் ‘உள்ளடி’ வேலைகள் நடப்பது அ.ம.மு.க-வுக்குதான் சாதகம்” என்கிறார்கள் கொங்கு வட்டாரத்தில்!

“கொத்தடிமையா நாங்கள்?” கொதிக்கும் விழுப்புரம் தி.மு.க!

ள்ளக்குறிச்சியில் பொன்முடியின் மகன் கௌதமசிகாமணியை வேட்பாளராக அறிவித்திருப்பதால் கொதித்துக்கிடக்கிறார்கள் உடன்பிறப்புகள். “பொன்முடிதான் கால் நூற்றாண்டாக மாவட்டச் செயலாளராக இருக்கிறார். கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டதும், நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம். ஆனால், இங்கும் அவரின் மகனை நுழைத்து, எங்களைக் கொத்தடிமைகளாக்கிவிட்டார். அவருடன்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

போராடியதைப்போல இன்னும் 25 வருடங்களுக்கு அவரின் மகனுடன் போராட ேவண்டுமா? கௌதமசிகாமணி சென்னை வேளச்சேரிக்குச் சென்று பத்து வருடங்கள் ஆகின்றன. அவருக்கு சென்னையில் சீட் கொடுத்திருக்க வேண்டியதுதானே. எங்கள் வயிற்றில் ஏன் அடிக்க வேண்டும்? கடந்த தேர்தலில் தனது சொந்தப் பணத்தைச் செலவுசெய்து விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர், மாவட்டத் துணைச் செயலாளர் டாக்டர் முத்தையன். இந்தமுறையும் அவருக்குத்தான் சீட் உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், விழுப்புரத்தை வி.சி.க-வுக்கு கொடுத்துவிட்டனர்” என்கிறார்கள் விழுப்புரம் தி.மு.க நிர்வாகிகள்.

வெள்ளைக்கொடி காட்டும் எடப்பாடி!

சீட் கிடைக்காமல் கட்சித் தலைமைமீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளை, தொலைபேசியில் அழைத்துச் சமாதானப்படுத்தி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை அழைத்துக் காரசாரமாகப் பேட்டி கொடுக்கத் தயாரானார். அவரிடம் எடப்பாடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, “தயவுசெய்து இப்போது எந்தப் பேட்டியும் கொடுக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சமாதானம் செய்திருக்கிறார். தற்காலிகமாகச் சமாதானம் ஆகியிருக்கிறார் அவர்!

ஸ்டார் ஓட்டல் ஸ்நாக்ஸ்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கடந்த 15-ம் தேதி அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு ‘லீ ராயல் மெரிடியன்’ ஹோட்டலிலிருந்து வந்திருந்த சமையல் கலைஞர் தலைமையில் ஆடம்பரமான நொறுக்குத் தீனிகள் சுடச்சுடத் தயாரிக்கப்பட்டுப் பரிமாறப்பட்டன. அ.தி.மு.க அலுவலகத்தில் இதற்கு முன்பு நடந்த அனைத்து கட்சிக் கூட்டங்களிலும் சரி... பிற கட்சிகளின் தலைவர்கள் வந்தபோதும் சரி... இதுபோல ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது இல்லை. எடப்பாடியின் ஏற்பாட்டில் அ.தி.மு.க-வில் இதுபோல பல மாற்றங்கள் நடக்கும் என்று கண்சிமிட்டுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்! 

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

‘அம்மா’ சிற்பத்தை அகற்றிய அரசு

முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான விஜயகுமார் ஏற்பாட்டின் பேரில் நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பம் வைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நாகர்கோவில் தி.மு.க நகரச் செயலாளர் வழக்கறிஞர் மகேஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். ‘பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்றால், தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளை அகற்றக் கோரியிருக்க வேண்டும். ஒரு சிலை மட்டும் இடையூறாக இருப்பதாகக் கூறுவது சரியல்ல’ என்று நீதிமன்றம் கருத்துக் கூறியது. இதையடுத்து, இரும்புக் கூரை அமைக்கப்பட்டு மணல் சிற்பம் பராமரிக்கப்பட்டது. இந்தநிலையில் நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறையைக் காரணம் காட்டி, கடந்த 12-ம் தேதி ஜெயலலிதா மணல் சிற்பத்தை அதிகாரிகள் அப்புறப்படுத்திவிட்டார்கள். தமிழக அரசு கூறியதால்தான் மணல் சிற்பத்தை அகற்றியதாக அதிகாரிகள் சொன்னதால் கொதித்துப்போயுள்ளார் விஜயகுமார். “அம்மா அரசு என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள், அம்மா சிலையை அகற்றியிருக்கிறார்கள். தேர்தல் விதிமுறை மீறல் என்று எங்களிடம் சொல்லியிருந்தால் சிலையை மூடிவைத்திருப்போம்” என்று சூடானார்.

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்


கேப்டனுக்காக சிறப்பு பூஜைகள்!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முழுமையாகக் குணமடைவதற்காக பிரேமலதாவும், மகன் விஜய பிரபாகரனும் கோயில்களில் வழிபாடுகள் செய்துவருகிறார்கள். பிரேமலதா தனது குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய நிலையில், மகன் விஜய பிரபாகரன் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள முண்டக கன்னியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். அந்தக் கோயிலில் வழிபட்டால் அனைத்து உடல்நலப் பிரச்னைகளிலும் இருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு வந்த பிரபாகரனிடம் பேசிய கோயிலின் பூசாரி, ‘‘இந்த அம்மன் சக்தி வாய்ந்தது. அதனால் உங்க அப்பாவை முழுமையாகக் குணப்படுத்திப் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட முடியும். அதன் பிறகு அவருடன் சேர்ந்து வாருங்கள்’’ என்று வாழ்த்தினாராம். 

ராத்திரி நேரத்து பூஜையில்!  

ரக்கோணம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக ஜெகத் ரட்சகன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, அந்தத் தொகுதியில் வெற்றிபெற்று மத்திய இணை அமைச்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். எனினும், எதிர்த் தரப்பில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பி.ஜே.பி என வலுவான கூட்டணி இருப்பதால், சற்றுக் கவலையில் இருக்கிறாராம் ஜெகத். எனவே, வெற்றிபெறுவதற்காக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் ஜெகத், சிறப்பு பூஜை செய்ததாகத் தகவல் கசிந்திருக்கிறது. ‘‘சோளிங்கர் கோயில் ஜெகத்ரட்சகனுக்கு சென்டிமென்ட். அவருக்கு மனதளவில் குழப்பங்கள், தொழில்ரீதியிலானப் பிரச்னைகள் ஏற்படும்போது, இங்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்துவார். பகலில் வந்தால் விமர்சனம் கிளம்பும் என்பதால், இரவில் பூஜை செய்திருக்கிறார்’’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

காவல்துறைக்கு அசைன்மென்ட்!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு புதிய அசைன்மென்ட் கொடுத்திருக்கிறதாம் அ.தி.மு.க அரசு. தமிழகம் முழுவதும் எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத அமைப்புகளின் பட்டியலையும், அதன் நிர்வாகிகளின் முழு விவரங்களையும் உடனடியாகத் தயாரித்துத் தருமாறு கேட்டிருக்கிறார்களாம். அதன் மூலம் அந்தந்த அமைப்புகளை நேரடியாக அணுகி, அவர்களைத் தேர்தலில் தங்களுக்கான வாக்காளர்களாக இழுப்பதற்கான வேலைகளைச் செய்துவருகிறது அ.தி.மு.க அரசு. பட்டியல் கிடைத்தவுடன், அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அ.தி.மு.க-வில் தனியாக ஒரு குழுவை அமைத்திருக்கிறார்களாம்!

தேர்தல் நிதி டார்கெட்!

தேர்தல் செலவுகளைச் சமாளிக்க மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு ஆளும்கட்சி வசூல் டார்கெட் நிர்ணயம் செய்துள்ளதாம். தமிழகம் முழுவதும் 123 நகராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு ஆளும் தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவு ஒன்று வந்துள்ளதாம். அந்த உத்தரவின்படி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகராட்சி அதிகாரிகள் நிதி திரட்டி அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கும்படி கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ‘நகராட்சியின் தரத்துக்கேற்ப ஐந்து லட்சம் ரூபாய் முதல் ஐம்பது லட்சம் ரூபாய்வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிகளுக்கு தலா ஆறு லட்சம் ரூபாயும், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சிகளுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாயும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்கிறார்கள். நேர்மையான அதிகாரிகள் விழிபிதுங்குகிறார்கள்!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

தினகரன் அணியை உடைக்கும் எடப்பாடி!

கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர்கள் நலச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான கே.எஸ்.ராஜ் கவுண்டர் கடந்த 2018, மே மாதம் ஈரோட்டில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தி, டி.டி.வி தினகரகனுடன் தன்னை இணைத்துக்கொண்டார். அந்த மாநாட்டிலேயே ‘புதிய திராவிட கழகம்’ என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தவர், ‘‘உயிருள்ளவரை டி.டி.வி-க்கு நிரந்தர ஆதரவு. டி.டி.வி முதல்வராக உயிரையும் கொடுப்பேன்’’ என அதிரடியாக அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தினகரனும், ‘வருகின்ற தேர்தலில் ராஜ்கவுண்டர் கேட்கின்ற தொகுதி கொடுக்கப்படும். அ.ம.மு.க-வினர் அவரை வெற்றிபெறச் செய்து அமைச்சராக்கிக் காட்டுவோம்’ என வேட்டுவக் கவுண்டர்கள் சமூகத்தினரை குஷிப்படுத்தினார்.

சமீபத்தில்கூட டி.டி.வி தினகரனின் ஈரோடு சுற்றுப்பயணத்தின்போது, திரும்பிய இடங்களில் எல்லாம் தினகரனை வரவேற்று போஸ்டர் அடித்து ராஜ்கவுண்டர் அதகளப்படுத்தினார். ஆனால், திடீர் திருப்பமாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ராஜ்கவுண்டர், ‘‘வருகின்ற தேர்தலில் வேட்டுவக் கவுண்டர்கள் சமுதாயமும், எங்களுடைய புதிய திராவிட கழகமும் உங்களுக்குத் துணை நிற்கும்’ என்று பல்டி அடித்துவிட்டார். “தினகரனுக்கு எங்கெல்லாம் ஆதரவு இருக்கிறதோ அங்கெல்லாம் தனது ஆள்களைப் பேசச்செய்து அணியை உடைப்பதில் மும்முரமாக இருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

குக்கர் கொடுத்த அ.ம.மு.க!

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் தஞ்சாவூர் தொகுதியில் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்று தினகரன் நினைக்கிறார். எனவே, இங்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிருந்தே, அ.ம.மு.க-வினர் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, ஒரு பகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர், வேட்டி சட்டை கொடுத்து முடித்துவிட்டனர். இந்தத் தகவல் வெளியே தெரிந்ததும், பிற கட்சியினர் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்! 

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

பல்ஸ் பார்க்கும் எ.வ.வேலு!

தி.மு.க-வில் வாரிசுகள் பலரும் தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றனர். ஆனால், ‘என் மகனுக்கு சீட் வேண்டாம் தலைவரே’ என்று ஸ்டாலினிடம் எ.வ.வேலு  கூறிவிட்டார். காரணம் என்ன என்று விசாரித்தோம். “கருணாநிதி, ஜெயலலிதா என இரு முக்கியத் தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இது. மக்களின் பல்ஸ் எப்படி இருக்கு என்று உளவுத்துறையால்கூடக் கணிக்க முடியவில்லை. எனவே, நிச்சயமான வெற்றி என்று தெரிந்தால் மட்டுமே திருவண்ணாமலையில் தன் மகன் கம்பனை நிறுத்துவது என்று எ.வ.வேலு நினைத்தார். மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று இப்போதைக்கு பல்ஸ் பார்த்துவிட்டு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கம்பனைக் களமிறக்கலாம் என்று எ.வ.வேலு முடிவு எடுத்திருக்கிறார்” என்கிறார்கள் தி.மு.க-வினர்.

- பி.ஆண்டனிராஜ், இரா.மோகன், ஜெ.முருகன், கே.குணசீலன், கா.முரளி, தி.ஜெயப்பிரகாஷ், ஆர்.சிந்து, நவீன் இளங்கோவன், ஆர்.ரகுபதி, கோ.லோகேஸ்வரன்

படங்கள்: சு.குமரேசன், எல்.ராஜேந்திரன், ரமேஷ் கந்தசாமி, ரா.ராம்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism