Published:Updated:

தொடரும் சர்ச்சை... பிரியங்காவை கார்னர் செய்யும் பா.ஜ.க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொடரும் சர்ச்சை... பிரியங்காவை கார்னர் செய்யும் பா.ஜ.க!
தொடரும் சர்ச்சை... பிரியங்காவை கார்னர் செய்யும் பா.ஜ.க!

பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்திருக்கிறது என்றே சொல்லலாம். 

ன்னை சோனியா காந்திக்காகவும் (காங். முன்னாள் தலைவர்), சகோதரர் ராகுல் காந்திக்காகவும் (காங். தலைவர்) அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் அடிக்கடி பிரசாரம் செய்துவந்த பிரியங்கா காந்தி, இன்று உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராகி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் இந்த நேரத்தில், பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்திருக்கிறது என்றே சொல்லலாம். 

அவருடைய நியமனம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, ``எனது சகோதரி திறமையானவர்; என்னுடன் சேர்ந்து மக்களுக்குச் சேவையாற்ற இருக்கிறார். பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தால் பி.ஜே.பி-யினர் சற்று அச்சமடைந்துள்ளனர்" என்று தெரிவித்திருந்தார். அதேநேரத்தில், பிரியங்கா காந்தியின் வருகையைப் பி.ஜே.பி. கடுமையாக விமர்சித்திருந்தது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ``ராகுல் காந்தியின் தலைமை தோல்வியடைந்துவிட்டதாகக் காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதனால்தான், தனது குடும்பத்திடமிருந்து மேலும், ஒருவரை வரவழைத்துள்ளார். மெகா கூட்டணி கட்சிகள் நிராகரித்துவிட்ட நிலையில், தன்னுடைய குடும்பக் கூட்டணியை ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளார். அனைத்து நியமனங்களும் ஒரே குடும்பத்திலிருந்து வருகிறது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே உள்ள வித்தியாசம். பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை கட்சிதான் குடும்பம்" எனக் கடுமையாகச் சாடியிருந்தார். 

உத்தரப்பிரதேச பி.ஜே.பி. பொறுப்பாளரான ஜே.பி.நட்டாவோ, ``குடும்ப நிறுவனம் நடத்தும் அரசியல் குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பிரியங்காவின் அதிகாரபூர்வ அரசியல் பிரவேசம் ராகுலின் அரசியல் தோல்வியைக் காட்டுகிறது" என்று விமர்சித்திருந்தார். இது ஒருபுறமிருக்க... மறுபுறம், பிரியங்கா காந்தியை பி.ஜே.பி-யினர் தொடர்ந்து விமர்சனம் செய்துவருவது  சர்ச்சையாகியிருக்கிறது. 

பீகாரைச் சேர்ந்த பி.ஜே.பி. அமைச்சர் வினோத் நாராயண் ஜா, ``பிரியங்கா, அழகாக இருந்தாலும் அரசியல் அறிவு இல்லை" என்று விமர்சித்திருந்தார். அதேபோல் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும், பிரியங்கா காந்தியை விமர்சனம் செய்திருந்தார். அவர், ``பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதோரா மீது ஊழல் புகார் இருப்பதால், அவர் குற்றம்செய்தவரின் மனைவியாகப் பார்க்கப்படுவார்" என்று தெரிவித்திருந்தார். இதுதவிர, ``பிரியங்கா காந்திக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற வியாதி இருக்கிறது. அவர், எப்போது மனச் சமநிலையை இழப்பார்; எப்போது, யாரை அடிப்பார் எனத் தெரியாது என்பதால், பொது வாழ்க்கைக்குத் தகுதியில்லாதவர்" என்று பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், ``பிரியங்கா காந்தி, சாக்லெட் முகம் கொண்டவர்" என மத்தியப் பிரதேச பி.ஜே.பி. தலைவர் கைலாஷும் ஏற்கெனவே சொல்லியிருந்தது சர்ச்சையாகியிருந்தது. 

இந்த நிலையில், ``ஜீன்ஸ், டாப் அணிந்துசெல்லும் பிரியங்கா காந்தி, தமது தொகுதிக்கு மட்டும் பொட்டு வைத்து புடவை கட்டிச் செல்கிறார்" என்று பி.ஜே.பி. எம்.பி. ஹரிஷ் திவேதி கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி, பி.ஜே.பி-யினர் தொடர்ந்து பேசும் சர்ச்சை கருத்துகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ``சர்ச்சை பேச்சுகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகிவருகிறது. எனவே, பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று அக்கட்சியினருக்குக் கடந்த ஆண்டு அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பி.ஜே.பி-யினர் அதை விடுவதாக இல்லை. மாறாக, அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றனர் என்கின்றனர், எதிர்க்கட்சியினர். 

`சர்ச்சை'க்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை சர்ச்சையே செய்தியாகிக்கொண்டிருக்கும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு