Published:Updated:

திருமாவளவனைச் சீண்டுகிறாரா துரைமுருகன்?  - திருக்குறள் உதாரணத்தைச் சுட்டிக் காட்டிய வன்னியரசு

உண்மையில், தி.மு.க தரப்பில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா.. இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், தி.மு.க தரப்பில் பேசுவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கும் வேலையைச் சிலர் சரியாகச் செய்கின்றனர்.

திருமாவளவனைச் சீண்டுகிறாரா துரைமுருகன்?  - திருக்குறள் உதாரணத்தைச் சுட்டிக் காட்டிய வன்னியரசு
திருமாவளவனைச் சீண்டுகிறாரா துரைமுருகன்?  - திருக்குறள் உதாரணத்தைச் சுட்டிக் காட்டிய வன்னியரசு

தி.மு.க கூட்டணிக்குள் நடந்து வரும் குழப்பங்களை திருக்குறள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. ` கூட்டணியில் இருந்து திருமாவளவனை வெளியேற்றிவிட வேண்டும் என துரைமுருகன் விரும்புகிறார். அவருக்காகத்தான் இந்தக் குறள் விளக்கம்' என்கின்றனர் சிறுத்தைகள் வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி விரைவில் வெளியாக இருக்கிறது. தி.மு.க அணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க ஆகிய கட்சிகள் அணி சேர்ந்துள்ளன. அ.தி.மு.க தரப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ` எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும்?' என அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு துரைமுருகன் அளித்த பேட்டி, வி.சி.க வட்டாரத்தைக் கொந்தளிக்க வைக்கிறது.

இதுதொடர்பாக, இன்று பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. அவர் தன்னுடைய பதிவில், ` தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று கூட்டு சேர்ந்து களமாடும்போது உடன் இருப்பவர்களையும் மதிக்காமல், தங்களுடைய வலிமை என்னவென்றும் தெரியாமல், தாங்கள் எதிரணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் என்று ஆணவத்தோடு செயல்படுபவர்கள் தாங்களாவே வீழ்ந்து விடுவார்கள்' என 474-வது திருக்குறளின் பொருள் பற்றி எழுதியிருக்கிறார். ` அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்' என்ற அந்தக் குறளுக்கு தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி எழுதிய உரையையும் குறிப்பிட்டிருக்கிறார். 

` திருக்குறளைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன்?' என்ற கேள்வியை வன்னிரசுவிடம் கேட்டோம். `` காலத்துக்கும் பொருந்தக் கூடிய குறளாகத்தான் இதைப் பார்க்கிறேன். தற்போதைய சூழலை 2,000 வருடங்களுக்கு முன்பே கணித்திருக்கிறார் திருவள்ளுவர். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிட்டேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்றார் அமைதியாக.

அதேசமயம், `` தி.மு.க கூட்டணிக்குள் நடக்கும் யுத்தங்களை நேரிடையாக சுட்டிக் காட்டுவதற்காகவே, இப்படியொரு பதிவு வெளியிடப்பட்டது" என விளக்கிய வி.சி.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` இந்தக் கூட்டணிக்குள் இருந்து வி.சி.க-வை வெளியேற்றிவிட வேண்டும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டவர்கள் விரும்புகின்றனர். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ` நாங்கள் இன்னும் தாலி கட்டவில்லை' என்கிறார். இதைச் சொல்வதில்கூட, தாலி உதாரணத்தைக் காட்டும் அளவுக்குத்தான் அவர் சிந்திக்கிறார். `தி.மு.க தரப்போடு நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்' என ஒரு கட்சியின் நிர்வாகி சொல்கிறார். தி.மு.க-விடம் பேர வலிமையைக் கூட்டக் கூடிய முயற்சியில் அந்தக் கட்சி இறங்கியுள்ளது. 

உண்மையில், தி.மு.க தரப்பில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா.. இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், தி.மு.க தரப்பில் பேசுவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கும் வேலையைச் சிலர் சரியாகச் செய்கின்றனர். இதன்மூலம் விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கோபத்தைக் உண்டாக்கி, கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் எனவும் கணக்குப் போடுகின்றனர். ` நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான அணி ஒன்றை அமைத்து, அதன்மூலம் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும்' என நாங்கள் விரும்புகிறோம். இதில், `பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு என்ன மாதிரியான யுக்திகளைக் கையாள வேண்டும்' என்றுதான் ஆலோசனை செய்து வருகிறோம். இதற்கு மாறாக, துரைமுருகன் பேட்டி கொடுத்திருக்கிறார். எனவேதான், திருக்குறள் உதாரணத்தை முன்வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது" என்றவர், 

`` தி.மு.க கூட்டணிக்குள் திருமாவளவன் இருப்பதையே ஸ்டாலின் விரும்புகிறார். நாங்கள் கேட்கும் ஓரிரு இடங்களைக் கொடுப்பதிலும் அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. அதேவேளையில், கூட்டணிக்குள் குழப்பதை உருவாக்க நினைப்பவர்கள், ஐந்தாறு இடங்களைக் கேட்பார்கள். இந்த அளவீட்டைத்தான் தி.மு.க நிர்வாகிகள் கவனிக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் களத்தில் நிற்கும்போது, அவருக்குத் திருமாவளவன் போட்டியாக நிற்கப் போவது இல்லை. எங்களுக்கு அந்தப் பதவி மீது எந்த ஆசையும் இல்லை. ஆனால், முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் நிற்பவர்களுக்கு ஸ்டாலின் ஒரு போட்டியாளராகத் தெரிகிறார். இந்த அணிக்குள் குழப்பத்தை உருவாக்குபவர்களைப் பற்றியும் ஸ்டாலின் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். இதுதொடர்பாக, சபரீசனிடமும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றவர்கள், ` திருமாவளவன் கூட்டணிக்குள் இருக்க வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்தக் கருத்தில் துரைமுருகனுக்கு உடன்பாடில்லை. இதுதான் தற்போதைய நிலை. இந்தத் திருக்குறள் பதிவு கூட துரைமுருகனுக்கானதுதான்" என்றார் அழுத்தமாக.