Published:Updated:

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?
பிரீமியம் ஸ்டோரி
கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

தேர்தல் 2019 - இந்த வாரம்: வி.சி.க - கம்யூனிஸ்ட்

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

தேர்தல் 2019 - இந்த வாரம்: வி.சி.க - கம்யூனிஸ்ட்

Published:Updated:
கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?
பிரீமியம் ஸ்டோரி
கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

‘அடங்க மறு... அத்து மீறு...’ என ஆக்ரோஷமாக முழங்கிக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நீண்டகாலம் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. தலித் சமூகத்தினருக்கு எண்ணற்ற தலைவர்கள் இருந்தாலும் திருமாவளவன் பின்னால் பெரிய இளைஞர் பட்டாளம் இருந்தது. காரணம் அவருடைய பேச்சுகள். அவர் பேசிய கூட்டங்களுக்குக் கணிசமாக மக்கள் திரண்டார்கள்.

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

‘தேர்தல் பாதை திருடர் பாதை’ என மேடைகளில் கர்ஜித்துக்கொண்டிருந்த திருமாவளவனைத் தேர்தல் அரசியல் பாதைக்கு மடைமாற்றியவர் மூப்பனார்.  அரசு ஊழியராக இருந்துகொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்த திருமாவளவன் முதன்முறையாகத் தேர்தல் பாதைக்குத் திரும்பியது 1999 நாடாளுமன்றத் தேர்தலில்தான். ‘‘மதவாதத்தையும் (தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி) ஊழலையும் (அ.தி.மு.க கூட்டணி) எதிர்ப்போம்’’ என மூன்றாவது அணி அமைத்துக் களம் புகுந்தார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார். அந்த அணியில் வி.சி.க இடம்பெற்றது. 5 தொகுதிகளை மூப்பனார் கொடுத்தபோதும் 3 இடங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது வி.சி.க. முழுநேர அரசியல்வாதியாக மாறினார் திருமாவளவன். தேர்தலில் சிறுத்தைகள் வெற்றிபெறவில்லை. மூப்பனார் கூட்டணியில் இன்னொரு தலித் கட்சியான புதிய தமிழகத்துக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது சிறுத்தைகள் வாங்கிய வாக்குகள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தன. சிதம்பரம் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்ட திருமாவளவன், 2.25 லட்சம் வாக்குகளை வாங்கி இரண்டாவது இடம் பிடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

அடுத்து வந்த 2001 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்தது வி.சி.க. எட்டுத் தொகுதிகளில் போட்டியிட்டு, மங்களூர்த் தொகுதியில் மட்டுமே வென்றது. முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைந்த திருமாவளவனால், சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. காரணம், உதயசூரியன் சின்னத்தில் வென்றதால் தி.மு.க உறுப்பினராகத்தான் தொடர முடிந்தது. ‘`தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அரசியல் மதிப்பைத் தர தி.மு.க மறுக்கிறது’’ என்று குற்றஞ்சாட்டிய திருமாவளவன், எம்.எல்.ஏ பதவியை உதறிவிட்டு, கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியில் இணைய நினைத்தார் திருமாவளவன். ‘`மதவாத அணி, மதச்சார்பற்ற அணி என்பதெல்லாம் கிடையாது. கூட்டணியில் சேருமாறு அ.தி.மு.க-வோ, பி.ஜே.பி-யோ அழைத்தால், அதைப் புறந்தள்ள மாட்டோம்’’ எனக் கூட்டணிக்கு நூல் விட்டார் திருமாவளவன். கூட்டணியில் சேர்க்காததால் மூன்றாவது அணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது வி.சி.க. திருமாவளவன், கிருஷ்ணசாமி, மக்கள் தமிழ் தேசம் கண்ணப்பன் ஆகியோர் கூட்டணி அமைத்தார்கள். சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன், தோற்றாலும் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற பி.ஜே.பி வேட்பாளரைவிடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றார். 

இடையில் பா.ம.க-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே வட மாவட்டங்களில் இருந்த உரசல்களைப் போக்கும் வகையில், பழ.நெடுமாறன், சேதுராமன் ஆகியோர் முயற்சியில் ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ உருவாக்கப்பட்டது. கொஞ்ச நாளிலேயே ராமதாஸும் திருமாவளவனும் எலியும் பூனையுமாக மாறினார்கள்.

அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தது விடுதலைச் சிறுத்தைகள். தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுவையில் 2 இடங்களிலும் போட்டியிட்டது. செல்வப்பெருந்தகையும், ரவிக்குமாரும் சட்டசபைக்குள் நுழைந்தார்கள். சில மாதங்களிலேயே அ.தி.மு.க கூட்டணி முறிந்தது. திருமாவளவன், அறிவாலயத்தில் தஞ்சம் புகுந்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டார். 

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

உள்ளாட்சித் தேர்தலில் ஆரம்பித்த கூட்டணி, 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கியது தி.மு.க. ஈழத்தில் போர் இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தபோது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தி.மு.க., காங்கிரஸ், சிறுத்தைகள் ஓரணியில் நின்று தேர்தலை எதிர்கொண்டன. சிறுத்தைகளுக்கு இந்தத் தேர்தல் சவாலாக அமைந்தது. அப்போது இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ், மறைமுகமாக இலங்கை அரசுக்குப் போர் உதவிகளைச் செய்வதாகப் புகார் எழுந்த நிலையில், சிறுத்தைகளால் அழுத்தமான குரலைப் பதிவு செய்ய முடியாமல்போனது. ‘`சர்க்கஸ் கூண்டில் அடைபட்ட புலி திருமாவளவன்’’ என தா.பாண்டியன் விமர்சித்தார். ‘`வீரச் சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் புலிகள்’’ என்றார் திருமாவளவன்.

இத்தனை பிரச்னைகளுக்கிடையே தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிதான் அதிக இடங்களைக் கைப்பற்றியது. திருமாவளவன் நாடாளுமன்றத்துக்குப் போனார். வெற்றிக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியும் வந்து சேர்ந்தது. தீராத பழியைச் சுமந்தார் திருமாவளவன். அடுத்து வந்த 2011 சட்டசபைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் தொடர்ந்தனர் சிறுத்தைகள். போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து வந்த 2014 எம்.பி. தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இரண்டு இடங்களைக் கேட்டனர் சிறுத்தைகள். ஆனால், ‘ஒன்றுதான்’ என்றது தி.மு.க. வி.சி.க முறுக்கிக் கொண்டு நின்றது. கடைசியில் வீரமணி தலையிட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டிலும் தோல்வியைத் தழுவவே, மக்கள் நலக்கூட்டியக்கத்தில் இணைந்தது வி.சி.க.

2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள்நலக்கூட்டணியில் போட்டியிட்டு ஒன்றில்கூட ஜெயிக்கவில்லை. போயஸ் தோட்டம், கோபாலபுரம், விருகம்பாக்கம் என மாறி மாறி அரசியல் பயணத்தை நடத்திக் கொண்டிருந்த வி.சி.க-வுக்கு இது முக்கியமான தேர்தல். தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோற்ற வி.சி.க இந்தத் தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டிய சூழல். மோதிரம் சின்னம் பறிபோன நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் சிறுத்தைகளுக்கு சவாலாக இருக்கப்போகிறது.

மக்கள்நலக்கூட்டணியில் ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகளுடன் இருந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்போது தி.மு.க கூட்டணியில்.

தத்துவார்த்தமாகப் பேசக்கூடிய கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதோடு  கூட்டணி நிலைப்பாடு தமிழகத்தில் தேர்தலுக்குத் தேர்தல் நிறம் மாறும். முதல் பொதுத்தேர்தல் தொடங்கி இப்போது நடைபெறும் 17-வது பொதுத்தேர்தல் வரையில் இது தொடர்கிறது.

1999 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த சி.பி.ஐ., சி.பி.எம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க கூட்டணி தோற்றபோதும் சி.பி.எம் மட்டும் ஒரு தொகுதியில் வென்றது. 

2001 சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் தொடர்ந்தனர் இடதுசாரிகள். சி.பி.எம் 6 இடங்களிலும் சி.பி.ஐ 5 இடங்களிலும் ஜெயித்தன. அதன்பிறகு நடைபெற்ற 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போயஸ் கார்டனில் இருந்து அறிவாலயத்துக்கு மாறினார்கள். அங்கே இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா இரண்டு சீட்டுகள் தரப்பட்டன. நான்கு தொகுதிகளிலும் வென்றனர். தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’யில் இடதுசாரிகள் அங்கம் வகித்தனர். 2006 சட்டசபைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் தொடர்ந்தனர். 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட சி.பி.எம் - 9 இடங்களிலும், 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட சி.பி.ஐ 6 இடங்களிலும் ஜெயித்தன.

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்காவுடனான மன்மோகன் சிங்கின் அணு ஒப்பந்தத்தை எதிர்த்து இடதுசாரிகள் ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’யிலிருந்து விலகினார்கள். போயஸ் கார்டனுக்கு ஷிப்ட் ஆனார்கள். ஈழப் போர் இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தபோதுதான் 2009 பொதுத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சி.பி.எம் கட்சிக்குத் தனி ஈழம் அமைவதில் உடன்பாடு இல்லை. ‘`தனித் தமிழ் ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா சொன்னபோது ‘`ஜெயலலிதாவின் கருத்து தவறல்ல’’ எனப் பொழிப்புரை எழுதினார் டி.கே.ரங்கராஜன்.  கருணாநிதியோ, ‘`கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போடுகிறார்கள்’’ என்றார்.

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

‘`தேர்தலுக்குப்பின் ஆட்சி அமைக்க இடதுசாரிகள் எங்களை ஆதரிப்பார்கள்’’ என்று ராகுல் காந்தி சொன்னபோது, ‘`காங்கிரஸ் கட்சியின் தோல்வி பயத்தை மட்டுமல்ல, தேர்தலுக்குப்பின் மற்ற அரசியல் கட்சிகளின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் காங்கிரஸின் ஆணவப் போக்கையும் ராகுல் காந்தியின் கருத்து பிரதிபலிக்கிறது’’ என்றார் டி.ராஜா. அவர்தான் இப்போது ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

‘`பி.ஜே.பி., காங்கிரஸுக்கு மாற்றாக அ.தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட மக்கள் செல்வாக்கு உள்ள மாநிலக் கட்சிகள் இணைந்து, 3-வது அணியை உருவாக்கியிருக்கிறோம். இந்த மாற்று அணி தேர்தலுக்குப்பின் மத்தியில் ஆட்சி அமைக்கும்’’ எனச் சொன்னார் டி.கே.ரங்கராஜன். ‘`23 இடங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., எப்படி ஆட்சி அமைக்கும்?’’ என ப.சிதம்பரம் கேட்டபோது, அதற்கான பதிலை ஜெயலலிதா தரவில்லை. இடதுசாரிகள்தாம் கொடுத்தார்கள். ‘`மத்தியில் அமையவுள்ள மாற்று ஆட்சியில் அ.தி.மு.க-வுக்கும் முக்கியப் பங்குண்டு’ என ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுத்தனர். அந்தத் தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 3 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி தோல்வி அடைந்தது. தலா 1 இடத்தில் மட்டுமே ஜெயித்தனர் இடதுசாரிகள்.

அடுத்து வந்த 2011 சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தனர். 12 தொகுதிகளில் போட்டியிட்ட சி.பி.எம் 10 இடங்களிலும், 10 தொகுதிகளில் போட்டியிட்ட சி.பி.ஐ 8 இடங்களிலும் வென்றன. அதன்பின் வந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கடைசி நேரத்தில் இடதுசாரிகள் கழற்றிவிடப்பட்டனர்.

அ.தி.மு.க கூட்டணியில் இடதுசாரிகள் அங்கம் வகித்த நிலையில் 40 தொகுதிகளுக்கும் அதிரடியாக வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. ‘`கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக் கொள்வார்கள்’’ எனச் சொன்னார் ஜெயலலிதா. அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை.

தலா 3 தொகுதிகளைக் கேட்டனர் இடதுசாரிகள். அ.தி.மு.க தலைமையோ தலா 1 என்றது. தொகுதிப்பங்கீடு தொடர்பாகப் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடைசி நேரம் வரையில் கம்யூனிஸ்டுகளை டென்ஷனில் வைத்துவிட்டு, முகத்தில் கரியைப் பூசினார் ஜெயலலிதா. வேறு வழியில்லாமல் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி, தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தன  இடதுசாரிகள். கடைசி நேரம் வரையில் காத்திருக்க வைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சிக்கவில்லை காம்ரேடுகள்.

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

2009 நாடாளுமன்றத் தேர்தலில் ‘`ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள்தாம் கம்யூனிஸ்ட்கள். கொள்கைக்காக அதை விட்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தால் நடப்பதே வேறு’’ எனத் தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார் நல்லகண்ணு. கொள்கைகள் அல்ல, தன்மானமே 2014 தேர்தலில் கைவிடப்பட்டது. அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டம் காட்டுபவர்கள், போயஸ் கார்டனில் புஸ்வாணமானார்கள். ‘`பேச்சுவார்த்தைகளில் அ.தி.மு.க-வின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை. சந்தோஷமாகச் சேர்ந்தோம். சந்தோஷமாகப் பிரிவோம்’’ எனக் கடிதோச்சி மெள்ள எறிந்தார்கள். ‘`கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்காததன் காரணத்தை அ.தி.மு.க தலைமை அறிவிக்காவிட்டாலும் போகப்போகப் புரியும்’’ என்றார் ஜி.ராமகிருஷ்ணன். ‘`தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை, மாற்றத்திற்கான மக்கள் அலையே வீசுகிறது’’ என்று சொன்ன, சி.பி.ஐ., சி.பி.எம் கட்சிகள் தலா 9 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டுத் தோற்றனர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்துடன், பி.ஜே.பி., பா.ம.க கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டது. அதற்கு எதிர்வினையாற்றினார் தா.பாண்டியன். ‘`விஜயகாந்துடன் கூட்டணி அமைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். முன்கூட்டியே ஏமாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை’’ என்றார். அடுத்து வந்த 2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்ற இடதுசாரிகள்,

தே.மு.தி.க கூட்டணியில் இணைந்தனர். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றனர். தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி இணைப்பு விழாவில் பேசிய முத்தரசன், ‘‘விஜயகாந்த் தர்மர். துரியோதனின் தொடையை உரித்து ரத்தத்தைக் குடித்துக் கொன்ற பீமனைப்போல் திருமாவளவன் இருக்கிறார். வைகோதான் அர்ச்சுனன். ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாக நினைத்துக் கொள்ளுங்கள். என்னை சகாதேவனாகக் கருதிக்கொள்ளுங்கள். போர்க்களம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், இறுதியில் வெல்வது பாண்டவர்கள்தாம்’’ என்றார்.

ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தமிழக சட்டமன்றத்துக்குள் கம்யூனிஸ்டுகள் தவறாமல் நுழைந்துகொண்டிருந்தனர். விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்த ராசி, சட்டமன்றத்துக்குள்ளும் நுழைய முடியவில்லை. இந்தத் தேர்தலில் அறிவாலயம் போயிருக்கிறார்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி,  ஓவியம்: பிரேம் டாவின்ஸி