அரசியல்
Published:Updated:

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

“பொள்ளாச்சி குற்றவாளிகள் தப்பமுடியாது” கல்லூரி மாணவிக்கு பன்னீர் வாக்குறுதி!

னது குலசாமி கோயிலான ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகாதோப்பில் பாலமேடு மஞ்சமலை அய்யனார் கோயிலில் மார்ச் 20-ம் தேதி காலை தன் மகன் ரவீந்திரநாத் குமாருடன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் துணைமுதல்வர் பன்னீர்செல்வம். கோயிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்ட பன்னீர்,

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

அங்கிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ மாணிக்கம், சிட்டிங் எம்.பி கோபாலகிருஷ்ணன் மற்றும் கட்சியினரிடம் ‘எனக்கு எப்படி வேலை பார்ப்பீர்களோ... அதேபோல வேலை பார்த்து, என் மகனை வெற்றி பெற வையுங்கள்’ என்று தனக்கே உரிய பணிவுடன் கேட்டுக்கொண்டார். பின்பு அங்கிருந்து நடந்தபடியே அப்பகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்தார். ஓர் இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவந்ததைக் குறிப்பிட்டு, ஜல்லிக்கட்டு காளைகளுடன் வரவேற்பு கொடுத்தார்கள் கட்சியினர். தொடர்ந்து அலங்காநல்லூர் கேட்டுக்கடை அருகே நின்று  கொண்டிருந்த கல்லூரி மாணவிகளிடம் ஓட்டுக் கேட்டு வணங்கிய பன்னீர்செல்வத்திடம் ஒரு கல்லூரி மாணவி, “பொள்ளாச்சி சம்பவத்தில் ஏன் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேட்டார். அவரிடம் ஓ.பி.எஸ்., “குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. இப்படி கேள்வி கேட்கும் துணிச்சலைப் பாராட்டுகிறேன்” என்று பதில் அளித்துவிட்டுப் பிரசாரத்தைத் தொடர்ந்தார்!

“லோகி ஒரு வெகுளி!”

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

20-ம் தேதி நடந்த வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் ஆண்டிபட்டி சட்டசபைத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜனும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், “18 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போவது ஆண்டிபட்டியில் நிற்கும் லோகிராஜன்தான்” என்றார். ஆனால், பன்னீர் சொல்வதைக் கவனிக்காமல், அனைவருக்கும் வணக்கம் வைத்துக்கொண்டே இருந்தார் லோகிராஜன். “இங்கே பாருங்கள்… நான் சொல்வதைக்கூடக் கவனிக்காமல் எப்படி வணக்கம் வைத்துக்கொண்டே இருக்கிறார்... லோகி ஒரு வெகுளி!” என்றார். இதைக்கேட்டு பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள், “வெகுளியா... விவகாரம் பிடித்தவரா என்று போகப்போகத்தானே தெரியும்... வெளுத்தது எல்லாம் பால் என்று பன்னீர் அல்லவா வெகுளியாக இருக்கிறார்” என்றார்கள் நக்கலாக!

நெல்லையில் தி.மு.க-வுக்கு தொல்லை!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் 23 வருடங்களுக்குப் பிறகு தி.மு.க களம் இறங்கியிருக்கிறது. இந்தத் தொகுதியில் இதுவரை நடந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே ஐந்து முறை வெற்றிபெற்றிருக்கிறது. எனவே, இந்தமுறையும் தங்களுக்குத்தான் தொகுதி ஒதுக்கப்படும் என்று காங்கிரஸார் நம்பியிருந்த நிலையில், தி.மு.க எடுத்துக் கொண்டது கதர்ச்சட்டைகாரர்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து, அவர்கள் இதைக் கண்டித்துக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் அலுவலகத்தில் வாயில் கறுப்புத் துணியைக் கட்டியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.  இதனால், தி.மு.க சார்பில் போட்டியிடும் ஞானதிரவியத்துக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் கை கொடுப்பார்களா... காலை வாரிவிடுவார்களா... என்கிற கேள்வி எழுந்துள்ளது.

“ஸ்டாலின் முதல்வர்...” கடுப்பான மயூரா ஜெயக்குமார்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

கோவை தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், தி.மு.க முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பலரும், ‘மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம்’ என்று பேச... ஒருகட்டத்தில் டென்ஷன் ஆன மயூரா ஜெயக்குமார், ‘‘அனைத்து இடங்களிலும் நம் கூட்டணி வெற்றி பெற்று, ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்பதையும் நாம் உறுதியேற்க வேண்டும்” என்றார் கோபமாக!

“செல்லூர் ராஜூ நல்லவரா... கெட்டவரா?”

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

துரை நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் ராஜ் சத்யன் அறிமுகக் கூட்டம் செல்லூர் ராஜு தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மைக் பிடித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஜனவரிக்கு முன்புவரை ஊடகங்கள் தி.மு.க., வெற்றிபெறும் என்றன. பொங்கலுக்குப் பிறகு அ.தி.மு.க தான் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கின்றனர். பொங்கலுக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டு கொடுத்தோம். (சொல்லும்போதே  சிரிக்கிறார்) கூடுதலாக வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள அனைவருக்கு 2000 ரூபாய் வழங்கினோம். இதனால் வெற்றி உறுதியாகியுள்ளது” என்றார். “தேர்தல் பார்வையாளர்களும், எதிர்க்கட்சி ஊடகத்தினரும் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருக்கும்போது, அமைச்சர் இப்படி எல்லாத்தையும் போட்டு உடைக்கிறாரே, இவர் நல்லவரா... கெட்டவரா...” என்று புலம்பினார்கள் தொண்டர்கள்!

அ.ம.மு.க-வுக்கு வடை கொடுத்த அ.தி.மு.க!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

திருச்சியில் அ.ம.மு.க வேட்பாளரான சாருபாலா தொண்டைமான், மார்ச் 19-ம் தேதி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே வழிவிடு முருகன் கோயிலில் பிரசாரத்தைத் தொடங்கினார். அங்கிருந்த டீக்கடை ஒன்றில் நுழைந்தவர், தன்னுடன் வந்தவர் களுக்கு, “சூடா வடை கொடுங்க...” என்றார். சாப்பிட்டு முடித்து, சாருபாலா தரப்பினர் வடைக்குப் பணம் கொடுக்கப் போகும்போது, கல்லாவில் இருந்தவர், “முதலாளி பணம் வாங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்கம்மா” என்றார். தொடர்ந்து அங்கிருந்த தொண்டர்கள், “இந்தக் கடை அ.தி.மு.க பகுதிச் செயலாளரின் கடை. கட்சி பிரிந்தாலும், பழைய பாசத்தோடதான் இருக்காங்க...” என்று முணுமுணுத்தார்கள்!

பழைய சாதம்... ரசம் சாதம்... சாம்பார் சாதம்... இது பெரம்பலூர் அ.ம.மு.க டிரண்ட்!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகர் களமிறக்கப்பட்டுள்ளார். கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய ராஜசேகர், “அ.தி.மு.க-வினர் பழைய சாதம் சாப்பிட்டால், நாம் ரசம் சாதம் சாப்பிடுவோம். அவர்கள் சாம்பார் சாதம் சாப்பிட்டால், நாம் நெய் சாதம் சாப்பிடுவோம். அவர்களைவிட நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அவர்கள் என்ன செய்தாலும் அதைவிட அதிகமாகச் செய்வோம்” என்று பேசியவர், பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் தனியாகப் பேசும்போது, “அ.தி.மு.க-வினர் கொடுப்பதைவிட வாக்காளர்களுக்கு நாம் அதிகம் கொடுக்க வேண்டும். அதைத்தான் அப்படி சொன்னேன். பெரம்பலூர் தொகுதியில் 262 பூத்துகள் இருக்கின்றன. ஒவ்வொரு பூத்திலும் நியமிக்கப்பட்டுள்ள 33 பேரும் தலா 10 ஓட்டுகளைச் சேர்த்தால், பூத்துக்கு 330 ஓட்டுகள் வீதம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடலாம். இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்... மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாராம். 

தென்காசி... சபாஷ் சரியான போட்டி!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி தொகுதியைப் போலவே நீண்டகாலத்துக்குப் பின்பு (28 வருடங்கள்) தென்காசியில் களமிறங்கியிருக்கிறது தி.மு.க. 39 வருடங்களாக காங்கிரஸ் வசமிருந்த இந்தத் தொகுதியை 1998-ல் அ.தி.மு.க கைப்பற்றியது. அதன் பின்னர் இருமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. கடந்த 2014 தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வசந்தி முருகேசன் வென்றார். இந்தமுறை அ.தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி களமிறங்குகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தனுஷ் குமார் வேறுயாரும் அல்ல... புதிய தமிழகம் கட்சியை கிருஷ்ணசாமி ஆரம்பித்தபோது அக்கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான தனுஷ்கோடியின் மகன்தான் இந்த தனுஷ் குமார். அதனால் அவர் கிருஷ்ணசாமிக்குக் கடும் போட்டியாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

24 X 7 - உதயநிதி உத்தரவு!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

.தி.மு.க-வில் தனது மகனுக்காக பன்னீர்செல்வம் களமிறங்கியிருக்கிறார் என்றால்... தி.மு.க-வில் தந்தை ஸ்டாலினுக்காக அவரது மகன் உதயநிதி களமிறங்கியிருக்கிறார். ஐந்தைந்து மாவட்டங்களாகத் தனது மன்ற நிர்வாகிகளை, கான்ஃபரன்ஸ் காலில் கனெக்ட் செய்து, “நீங்கள் முதல்கட்டமாக உங்கள் தொகுதியின் தி.மு.க வேட்பாளரைச் சந்தித்து, மன்றத்தினரின் ஆதரவைத் தெரிவியுங்கள். மேலும், ‘எப்போது கூப்பிட்டாலும் வந்து வேலை செய்கிறோம்’ என்று உறுதிகொடுங்கள். நான்கு மாவட்டங்கள் இணைந்து, ஒரு இடைத்தேர்தல் தொகுதியில் வேலை பார்க்கவேண்டும். என்ன வேலை செய்துள்ளீர்கள் என்று எனக்கு வாரம் தவறாமல் அப்டேட் செய்ய வேண்டும்” என்று கட்டளையிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளிடம், “தாத்தாவின் தொகுதி இது. இதில் கொஞ்சம்கூட அவர் கௌரவம் குறையாதபடி, பூண்டி கலைவாணன் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்’’ என்று கூற... நான்கு மாவட்ட மன்றத்தினரும், பம்பரமாகத் தொகுதிக்குள் வட்டமிட்டுவருகின்றனர்.

- பி.ஆண்டனிராஜ், செ.சல்மான், சி.ய.ஆனந்தகுமார், எம்.திலீபன், எம்.கணேஷ், இரா.குருபிரசாத், சே.த.இளங்கோவன், அருண் சின்னதுரை

படங்கள்:  தி.விஜய், என்.ஜி.மணிகண்டன், எல்.ராஜேந்திரன், வீ.சக்தி அருணகிரி, தே.தீட்ஷித், ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்