அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பா.சு.மணிவண்ணன், திருப்பூர்
ஜி.கே.வாசனின் அரசியல் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

முதலில் நிகழ்காலத்தைப் பற்றிப் பார்ப்போம்!

ஹெச். ஹரிகிருஷ்ணன், செங்கற்பட்டு.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் தேசிய அளவில் கும்பகோணம் நகராட்சிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளதே?


கும்பகோணம் மக்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று தகவல்!

வி.கருணாநிதி, திருமக்கோட்டை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னம், மற்றொரு தொகுதியில் வேறொரு சின்னம் எனப் போட்டியிடப் போகிறதே?

‘ஓர் இடம் என்றால், உங்கள் சின்னம். இன்னோர் இடம் என்றால் எங்கள் சின்னம்’ என்று அறிவாலயத் தில் அலற வைத்துவிட்டார்களே!

கழுகார் பதில்கள்!

@சத்தியமூர்த்தி.
சம்பந்தமில்லாத ஒரு வீட்டில் நுழைந்து பொருள்களை அள்ளிச் செல்வதற்குப் பெயர் திருட்டு என்றால், பிற நாடுகளின் மீது படையெடுத்து நாட்டையே அபகரித்துக்கொண்ட மன்னர்களின் செயல்கள்?

வெளிநாட்டிலிருந்து மற்றொரு நாட்டின்மீது படையெடுத்து, அந்த நாட்டின் சொத்துக்களை அள்ளிச் சென்றாலோ, நாட்டையே அபகரித்தாலோ, அது, ‘அய்யய்யோ  அநியாயம்... கொள்ளை’. இதுவே, வெளிநாட்டின் மீது படையெடுத்துச் சென்று பொருள்களை அள்ளிவந்தால், அது, ‘வெற்றி... வீரபராக்கிரமம்!’ உலக வரலாற்றில் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் ‘தக்காளி சட்னி - ரத்தம்’ நிரம்பி வழியத்தான் செய்கிறது!

@தே.ஞானக்கலைமோகன்குமார், புதுக்கோட்டை.
‘காலையில் பேசிவிட்டு வந்தேனே... நன்றாகத்தானே  இருந்தார். அதற்குள் இறந்துவிட்டாரா?’ என்பது போன்ற உரையாடல்களை நம்நாட்டில் அதிகம் கேட்க முடிகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இப்படித் திடீர் மரணங்கள் இருக்காதுதானே?

திடீர் மரணங்கள் நம் நாட்டைவிட அங்கே அதிகமாக இருப்பதால், ‘இதெல்லாம் சகஜமப்பா’ என்கிற ரீதியில் கடந்துபோய் விடுகிறார்களோ, என்னவோ!  ஏழை நாடுகளைவிட வளர்ந்த நாடுகளில்தான் ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதயநோய் போன்றவை அதிகமாகத் தாக்குகின்றன. ஏழை நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்கா போன்ற வளர்ந்த, பணக்கார நாடுகளில் இந்த நோய்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றன. ‘மிகக்குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் ஓராண்டுக்கு ஒரு லட்சம் பேரில் சுமார் 50 பேர் இதய நோய்களால் மரணிக்கிறார்கள். இதுவே, குறைந்த மற்றும் மித வருவாய் உடைய நாடுகளில் 120 பேர்; மித மற்றும் உயர் வருவாய் உள்ள நாடுகளில் சுமார் 140 பேர்; மிக அதிக வருவாய் உள்ள நாடுகளில் 140 பேருக்கு மேல் என்கிற அளவில் மரணங்கள் நிகழ்கின்றன’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. இந்தியாவும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் வேகவேகமாக இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

மு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல், கர்நாடகம்.

‘சபாநாயகரின் கையை வெட்டுவேன்’ என்று ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான ரத்னசபாபதி கூறுகிறார். பதிலுக்கு, ‘உன் கையை வெட்ட எவ்வளவு நேரமாகும்?’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சீறுகிறார். இருவர்மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ரௌடிகள்போல சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.  இதை வேடிக்கை பார்க்கிறார்கள் அந்தக் கட்சியின் தலைவர்கள். சித்தாந்தமே இல்லாதவர்களிடம் நடவடிக்கையை எதிர்பார்த்தால் எப்படி!  

அனிதா, சேலையூர்.
தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும்; எம்.எல்.ஏ., எம்.பி என்றெல்லாம் ஆகவேண்டும் என்கிற ஆசைகள் கழுகாருக்கு இல்லையா?

தேர்தலில் நின்று கஷ்டப்படாமல், ராஜ்ய சபா சீட் வாங்கி செட்டில் ஆவதுதானே இப்போதைய ஃபேஷன். அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

@.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.
அற்ப காரணங்களுக்கு எல்லாம் பல தடவை தேர்தலைத் தள்ளிவைக்கத் தயங்காத தேர்தல் ஆணையம், மதுரை அழகர் திருவிழா எனும் மாபெரும் நிகழ்வுக்காகத் தள்ளிவைக்க முடியாது எனக் கறார் காட்டுகிறதே?!

அழகர் கோயில் திருவிழா மட்டுமல்ல, குமுளி, கண்ணகி கோயில் திருவிழா, சித்ரா பவுர்ணமி, திருவண்ணாமலை கிரிவலம் என்று இன்னும் பல்வேறு திருவிழாக்களும் அன்றைய தினத்தில் இருக்கின்றன. அதற்கு முதல் நாள் மகாவீர் ஜெயந்தி, அடுத்த நாள் புனிதவெள்ளி என்று இன்னும் பல நிகழ்வுகளும் இருக்கின்றன. இவை எல்லாம் தொடர் விடுமுறைகளையும் சேர்த்தே கொண்டுவருவதால், வாக்குப்பதிவு சதவிகிதம் நிச்சயமாகக் குறையும். ஆனாலும்கூட ஆணையம் அசராமல் இருப்பதைப் பார்த்தால், திட்டமிட்டேதான் தேர்தல் தேதியை அறிவித்தார்களோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை.

@இளங்கோ.ஆர்.
டி.எஸ்.பி-யாக இருந்த பாண்டியராஜன், பெண்ணின் கன்னத்தில் அறைந்த பிறகு எஸ்.பி ஆகப் பதவி உயர்வு பெற்றார். தற்போது, ‘நான்கு வீடியோக்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஆளுங்கட்சி யினருக்கு இதில் தொடர்பே இல்லை’ என்றெல்லாம் பொள்ளாச்சியில் ‘பிரமாத’மாகப் பணியாற்றுகிறார். அடுத்த பதவி உயர்வு?


நேரடியாக டி.ஜி.பி ஆக்கினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். ஏற்கெனவே, சுருளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் காதலியின் முன்பாகவே காதலனைக் கொன்றுவிட்டு, காதலியின் கை மற்றும் கால்களை வெட்டிவிட்டு, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்ற பஞ்சமாபாதகர் ஒருவர் தப்பிக்கவிடப்பட்டார். அப்போது அங்கே போலீஸ் அதிகாரத்தில் இருந்தது இதே பாண்டியராஜன்தான்! இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகுதான், அந்தக் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது.

@கே.கலைமணி

பொள்ளாச்சி பிரச்னை, தமிழகத்தைக் கடந்தும் பத்திகிட்டு எரியுது. ஆனா, தமிழ்நாட்டை ஆள நினைக்கிற ரஜினி மூச்சுகூட விடலையே?


‘பொள்ளாச்சி பிரச்னை’ங்கிறத, ‘போலீஸுக்குப் பிரச்னை’னு சொல்லிப் பாருங்களேன்!

@நாகை பாபு, நாகப்பட்டினம் மாவட்டம்.

பொள்ளாச்சி விவகாரத்தைச் சிலர் வியாபாரம் ஆக்குகிறார்களே?


வியாபாரமோ... அரசியல் லாபமோ.. எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். மீடியாக்களில் வெளிச்சம் போடாதிருந்தாலோ... வீதியில் இறங்கி யாராவது போராடாமல் இருந்திருந்தாலோ... இது, பொள்ளாச்சியிலேயே புதைகுழிக்குப் போயிருக்கும்.

கழுகார் பதில்கள்!

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.
ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த் போன்றோர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டனரே... தோல்வி பயமா?


கூட்டணியில் பலரும் வாரிசுகளை நிறுத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி நினைத்திருந்தால் தன் மகனை சேலத்தில் நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. இதைக்கூடக் தோல்விபயம் என்று சொல்லிவிடுவீர்களோ!

கழுகார் பதில்கள்!

@பி.எஸ்.எ. ஜெய்லானி, கடையநல்லூர்.
எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் கருணாநிதி, வேட்பாளர் பட்டியலை அண்ணா சமாதியில் வைத்து ஆசி வாங்கியதுண்டா?


ம், அந்தக் கட்சியில் பகுத்தறிவு பொங்கி வழிவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, மு.க.ஸ்டாலினுக்கு! கருணாநிதி மறைந்த 10-வது நாள், 30-வது நாள் 100-வது நாள் என்று சினிமா பட ரேஞ்சுக்குத் துக்கநிகழ்வுகளைக் கடைப்பிடித்தனர். எந்த முயற்சியாக இருந்தாலும் கருணாநிதியின் சமாதியில் இருந்து ஆரம்பிப்பதையும் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். பெரியாரின் வாரிசுகள், ‘பரிணாம வீழ்ச்சி’ அடைந்துகொண்டுள்ளனர்.

கழுகார் பதில்கள்!

எம்.டி.சந்திரசேகரன், சென்னை-92
‘ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க பா.ம.க ஆதரவு அளிக்கும்’ என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?


தமிழகச் சட்டமன்றத்தில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ‘ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்’ என்று முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து, ‘சொத்துக்குவிப்பு வழக்குக் குற்றவாளிக்குப் பாரத ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்வதா... அதுவும் தமிழக சட்டமன்றத்திலேயேவா...’ என்றெல்லாம் அன்புமணி ராமதாஸ் கொதித்தார். இதை எல்லாம் டாக்டர் ராமதாஸ் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவருக்கும் 79 வயது ஆகிறதல்லவா!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!