அரசியல்
Published:Updated:

“பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டளை!”

“பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டளை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டளை!”

ஜி.ராமகிருஷ்ணன் அதிரடி

“பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டளை!”

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த இரு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்த கையோடு, தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாகக் களமிறங்கியிருக்கும் இந்தக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஜி.ராமகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“பிரதமர் மோடியை எதிர்ப்பது மட்டும்தான் உங்கள் அரசியலா?”

“மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சியில், இந்திய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 சதவிகிதம் பேர் 25 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். அவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று மாநில அமைச்சர்களே தரவுகளுடன் சொல்கிறார்கள். கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகமாகியுள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என மக்களுக்கு எதிரான பல திட்டங்களைச் செயல்படுத்தினார்கள். இதன் மூலம் ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளையும் பறித்துவிட்டனர். எனவேதான், மத்தியில் பி.ஜே.பி ஆட்சியை அகற்ற வேண்டுமென்று வியூகம் அமைத்துக் களமிறங்கியுள்ளோம். பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டளை.”

“பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டளை!”

“சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் அதுபோன்ற முயற்சி இல்லை?”

“எதேச்சதிகாரத்துடன் செயல்படும் பி.ஜே.பி-யையும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்பது இன்றையச் சூழலில் மிக முக்கியமானது என்று எங்கள் கட்சி முடிவெடுத்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு, பி.ஜே.பி அணியைத் தோற்கடிப்பதும், அதற்காக மற்ற அத்தனை கட்சிகளும் ஒன்றுபட வேண்டியதும் காலத்தின் கட்டாயம். அதனால், மூன்றாவது அணிக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.” 

“பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்திவரும் உங்கள் கட்சி, பெண் வேட்பாளர்களை ஏன் அறிவிக்கவில்லை?”

“ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே இந்த முறை வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி பெண் வேட்பாளர்கள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் துளியளவும் கருத்து மாற்றம் இல்லை. பெண்களுக்கான அரசியல் இடஒதுக்கீடு என்பது சட்டமாக்கப்பட வேண்டும்.” 

“அ.தி.மு.க., தி.மு.க ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளில் ஏழு தமிழர் விடுதலை குறித்துத் தொடர்ந்து இடம்பெறுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் இரு கட்சிகளும் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை. இவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா?”

“அரசு முடிவுசெய்துகொள்ளலாம் என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இதில் என்ன அரசியல் ஆதாயம் இருந்துவிடப்போகிறது. அனைத்துக் கட்சிகளுமே ஏழு பேர் விடுதலைக்கு ஆதரவாக உள்ளன. இதில் இப்போது முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் தமிழக கவர்னர். இதில் அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்று கவர்னரிடம்தான் கேட்க வேண்டும்.”

“பி.என்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது குறித்து உங்கள் கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாகச் சொல்லப்படுகிறதே?”

“நிச்சயமாக இல்லை. சம்பந்தப்பட்ட மாவட்டக் குழுக்களிலும், மாநிலக் குழுவிலும் பேசி முழு மனதுடன்தான் இருவரும் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டனர். கோவையைச் சேர்ந்த பி.என்.நடராஜன், தன் இளமைக் காலத்திலிருந்தே கட்சியில் பல்வேறு பொறுப்பு களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். இதற்கு முன்பாக கோவை தொகுதியில் எம்.பி-யாகவும் செயல்பட்டவர். சு.வெங்கடேசனைப் பொறுத்தவரையில், எழுத்தாளர் என்கிற அடையாளத்தையும் தாண்டி மக்களிடையே பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெற்றுவருகிறார்.”

“முன்பு எம்.பி–யாக இருந்த காலத்தில், ‘கோவையின் வளர்ச்சிக்கு பி.என்.நடராஜன் தடையாக இருந்தார்’ என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறதே, உண்மை என்ன?”

“தவறான குற்றச்சாட்டு. கோவையில் சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து பாடுபட்டுவருபவர் நடராஜன். அவர் எம்.பி-யாக இருந்த காலத்தில் கோவை பகுதியின் வளர்ச்சிக்காகவும், அந்தப் பகுதி மக்களின் நலனுக்காகவும் நிறையப் பணிகளைச் செய்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி என்றைக்குமே மக்களின் வளர்ச்சிக்காகக் குரல் கொடுக்குமே தவிர, தடையாக இருக்காது.”

“சுதந்திரப் போராட்டக் காலத்தில் தோன்றியது, கம்யூனிஸ்ட் கட்சி. அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் உருவான பி.ஜே.பி-யைக் காட்டிலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கிறதே?”

“குறுகிய நோக்கத்துடன், மதத்தையோ சாதியையோ பயன்படுத்தி சில சக்திகள் வளரலாம். ஆனால், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன்மையானது. அதைத் தேர்தல் அரசியலாக்குவதில் நாங்கள் சற்றுப் பின்தங்கியிருந்தாலும், அதற்கான செயலாக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம். நிச்சயம், மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்போம்.”

- ஐஷ்வர்யா
படம்: ப.பிரியங்கா