அரசியல்
Published:Updated:

மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?

மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?

மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?

‘மதுரையில் தி.மு.க போட்டியிட வேண்டுமென்று தலைவர் ஸ்டாலினே விரும்புகிறார்’ என்று தி.மு.க-வினர் சொல்லிவந்த நிலையில், மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் வேட்பாளராக எழுத்தாளர் சு.வெங்கடேசன் நிறுத்தப் பட்டுள்ளார். கட்சியில் பல தடைகளையும் தாண்டித்தான் இவர் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்கிறது சி.பி.எம் வட்டாரம்.

மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?

மதுரை தொகுதியைத் தருவதாக தி.மு.க தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதும், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நீண்டநேரம் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சி வட்டாரத்தில் பேசியபோது, “முன்னாள் எம்.எல்.ஏ-வான நன்மாறன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சுகந்தி, பொன்னுத்தாய், வழக்கறிஞர் நிர்மலாராணி உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கட்சியின் பல்வேறு துணை அமைப்புகள் எழுத்தாளர் சு.வெங்கடேசனை நிறுத்தலாம் என்று ஆலோசனையைத் தெரிவித்தன. சமகாலத்தில் மதுரையை மையமாக வைத்து நடந்த அரசியல் மற்றும் பண்பாட்டுப் பிரச்னைகளில் சு.வெங்கடேசன் பங்களிப்பு முக்கியமானது. மதுரை மக்களுக்கு நன்கு அறிமுகமான முகமாகவும் இருக்கிறார். எனவே, அவரையே நிறுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது” என்றனர்.

ஆரம்பக் காலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், த.மு.எ.க.ச அமைப்புகளில் பணியாற்றிய சு.வெங்கடேசன், கவிதை மற்றும் சிறுகதை எழுதுவதில் ஆர்வம் காட்டிவந்தார். த.மு.எ.க.ச-வின் கலை இரவு மேடைகளில் கவிஞராக அறியப்பட்டவர், மக்களைக் கவரக்கூடிய மேடைப்பேச்சாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘செம்மலர்’ இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். மதுரை வரலாற்றை மையமாக வைத்து இவர் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. சகாயம் மதுரை கலெக்டராக இருந்தபோது, ‘மாமதுரை போற்றுதும்’ என்ற கலை விழாவை நடத்தியதில் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றிவரும் இவர், 2011-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கீழடி அகழாய்வை மத்திய அரசு மூடிமறைக்க நினைத்தபோது, கீழடியில் தமிழர்களின் தடங்கள் குறித்து விரிவாக எழுதினார். அதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே, இப்போதும் கீழடியில் ஆய்வுகள் தொடர்கின்றன.

மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?

மதுரை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாள் சென்னையிலிருந்து மதுரை வந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்துப்பெற்றார், சு.வெங்கடேசன். அதேசமயம் தி.மு.க நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை பார்ப்பதில்தான், இவரது வெற்றி அடங்கியுள்ளது. தொழிலாளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு இருக்கிறது. எனினும், ஓட்டுக்குப் பணம் என்ற இப்போதைய சூழலில், பெரிய கட்சிகளுடன் இவரால் போட்டிபோட முடியுமா என்ற கேள்வியைப் பலரும் எழுப்புகிறார்கள். ஆனாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.மோகன் ஏற்கெனவே இரண்டு முறை எம்.பி-யாக வெற்றிபெற்ற தொகுதி என்பதால், கட்சியினர் உற்சாகமாகக் களமிறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதே நேரம், இவருக்கு சீட் வழங்கப்பட்டதில், கட்சிக்குள் சிலருக்கு வருத்தம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?

ஆளும் கட்சியின் அதிகார பலத்தை மீறி எப்படி வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளர் சு.வெங்கடேசனிடம் கேட்டோம். ‘‘நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களுக்காகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியன். என்மீது நம்பிக்கை வைத்துத்தான் கட்சி என்னைத் தேர்வுசெய்துள்ளது. அனைத்து மக்களாலும் அறியப்பட்டவன். மதுரையின் அடிப்படை பிரச்னைகள் முதல் அனைத்துப் பிரச்னைகளைப் பற்றியும் தெரிந்தவன். எங்களிடம் திட்டங்களும் தீர்வுகளும் உள்ளன. மக்கள் ஆதரவளித்தால், அனைத்தையும் கொண்டுவர முடியும். பாரம்பர்யமிக்க தமிழ் பண்பாட்டின் தலைநகரமாக விளங்கும் மதுரை, மற்ற நகரங்களைப்போல தொழில்துறையில், கல்வியில் முன்னேறவில்லை. ஏழைகள் அதிகம் நிறைந்த நகரமாக உள்ளது. இங்கு எது தேவை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள். மதுரை, இடதுசாரி இயக்கங்கள் அடித்தளமிட்ட மண். தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மிகுதியாக இருக்கும் தொகுதியும்கூட. இந்த ஆட்சிமீது வெறுப்பில் இருக்கும் மக்கள், கண்டிப்பாக எங்கள் கூட்டணிக்கு வெற்றியைத் தருவார்கள். மதுரை மக்கள் என்னைத் தேர்வுசெய்தால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலாக என் குரல் ஒலிக்கும். கீழடியையும், மீனாட்சியம்மன் கோயிலையும் உலகப் பாரம்பர்யச் சின்னங்களாக மாற்ற வலியுறுத்துவேன்’’ என்றார்.

- செ.சல்மான்,
படங்கள்: வி.சதீஷ்குமார்