அரசியல்
Published:Updated:

வாரிசுகளால் வாய்ப்பு இழந்த சீனியர்கள்!

வாரிசுகளால் வாய்ப்பு இழந்த சீனியர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாரிசுகளால் வாய்ப்பு இழந்த சீனியர்கள்!

வாரிசுகளால் வாய்ப்பு இழந்த சீனியர்கள்!

ஸ்டாலின் தலைவரானதும், தங்கள் மகன்களுக்கு மல்லுக்கட்டி சீட்டு வாங்கியிருக்கிறார்கள் சீனியர் உடன்பிறப்புகள் சிலர். தர்மயுத்தத்துக்கு ஆதரவளித்த சீனியர்களைக் கழற்றிவிட்டு, தங்கள் மகன்களை எம்.பி வேட்பாளர்களாகக் களமிறக்கி விட்டிருக்கிறார்கள், அ.தி.மு.க தலைவர்கள். கனிமொழி, அன்புமணி, தமிழச்சி, சுதீஷ் போன்ற சீனியர் வாரிசுகளை விட்டுவிடுவோம். வயதிலும் குறைந்த, அரசியலில் அனுபவம் இல்லாத ஜூனியர் வாரிசுகளை எம்.பி ஆக்கும் முயற்சியால், சீனியர்கள் பலரும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பரிதாபக் கதை இது...

தி.மு.க கூடாரம்

கதிரால் உதிர்ந்தவர்கள்!

வேலூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கதிர் ஆனந்த்துக்கு வயது 44. இவர் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன். இதுவரை நேரடி அரசியலில் தலைகாட்டியதில்லை. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகே, கதிர் ஆனந்த் முதல்முறையாக நேரடி அரசியலில் நுழைந்திருக்கிறார். இந்த முறை எப்படியும் தன் மகனுக்கு சீட் வாங்க வேண்டும் என்பதற்காகவே, முஸ்லிம் லீக் கட்சியையும் மடைமாற்றி, ராமநாதபுரத்துக்கு அனுப்பிவைத்தார் துரைமுருகன்.

தி.மு.க தலைமைமீது துரைமுருகன் காட்டிய விசுவாசத்துக்கும், கட்சிக்காக உழைத்த உழைப்புக்கும், அவருக்குப் பொதுச்செயலாளர் பொறுப்பைக்கூடத் தரலாம் என்று சொல்லும் உடன்பிறப்புகள், அவரின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக நேரடியாகத் தேர்தலில் இறக்கிவிட்டதைத்தான் எதிர்க்கிறார்கள். மத்திய மாவட்டச் செயலாளராக உள்ள அணைக்கட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், முன்னாள் எம்.பி முகமதுசகி எனப் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், தலைமையின் முடிவால், இப்போதைக்கு அமைதியாகிவிட்டனர். எனினும் அதிருப்தி தொடர்கிறது. துரைமுருகனின் நீண்டகால நண்பரும், தி.மு.க-வில் 50 ஆண்டு களுக்கும் மேல் பல்வேறு பொறுப்புகளை வகித்த குடியாத்தத்தைச் சேர்ந்த சீவூர் துரைசாமி,  திடீரென பா.ம.க-வில் இணைந்ததற்கும் இதுதான் காரணம் என்கிறார்கள்.

வாரிசுகளால் வாய்ப்பு இழந்த சீனியர்கள்!

மணியால் வாய்ப்பு இழந்த மணிகள்!

கள்ளக்குறிச்சி தொகுதியில், தி.மு.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதமசிகாமணி. இவருக்கும் வயது 44 தான். கட்சிக்குள் கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால், கண்டிப்பாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று நம்பியே, பலரும் இந்தத் தொகுதிக்காகப் பணம் கட்டினர். ஆனால், தலைமையின் முடிவு, பலரது கனவுகளுக்கு முடிவுகட்டிவிட்டது. அவர்களில் முக்கியமானவர், அண்ணா காலத்து உடன்பிறப்பான தியாகதுருகம் பொன்ராமகிருஷ்ணனின் மகன் மணிமாறன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் காமராஜை எதிர்த்துப் போட்டியிட்டு 3,09,876 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தவர், இவர். அந்தத் தேர்தலில் பல கோடிகளை இழந்ததால், இந்தமுறை தனக்கு சீட் நிச்சயம் என்று கடைசிவரை நம்பிக்கொண்டிருந்தார். அதேபோல 2009 தேர்தலில் இதே தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆதிசங்கரும் சீனியர் என்ற முறையில் சீட் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார். வீரபாண்டி ஆறுமுகம் காலத்திலிருந்து ஆத்தூர் நகரச் செயலாளராக இருக்கும் பாலசுப்பிரமணியம், கடைசி நிமிடம் வரை காய் நகர்த்தினார். இருவரது வாய்ப்புகளையும் கவ்விக்கொண்டு போய்விட்டார் கெளதமசிகாமணி. உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கப்போகிறது என்று தெரியவில்லை.

 அ.தி.மு.க கூடாரம்

சத்தியமாய் சத்யனுக்கு கஷ்டம்தான்!

பெரும் போராட்டம் நடத்தி, தன் மகன் ராஜ்சத்யனுக்கு மதுரை ‘சீட்’டைக் கைப்பற்றியுள்ளார் புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா. அ.தி.மு.க–வின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச்செயலாளராகவும், விளையாட்டு ஆணைய உறுப்பினராகவும் இருக்கும் ராஜ்சத்யனுக்கு வயது 36 மட்டுமே. இவர் வயதுக்கு நிகரான அனுபவத்தில் கட்சியில் உழைத்துள்ள பலரும், இவரால் வாய்ப்பு இழந்துள்ளனர். இதில் முக்கியமானவர், சிட்டிங் எம்.பி கோபாலகிருஷ்ணன். ஓ.பி.எஸ் ஆதரவாளரான இவர், வெற்றிபெற்ற பின் தொகுதிப்பக்கமே தலைகாட்டாததால் பொதுமக்களைவிட கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்திக்கு ஆளாகியிருந்தார். இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காததில், கட்சிக்காரர் களுக்கு சந்தோஷம்தான்.

ஆனால், தகுதியான வேறு பலரும் கட்சியில் உள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ–வான தமிழரசன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர். ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். மற்றொருவர் கிரம்மர் சுரேஷ். இளைஞரணி மாநில இணைச் செயலாளராக இருக்கும் இவருக்கு செல்லூர் ராஜு சிபாரிசு செய்தார். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தனக்குக் கிடைக்கும் என்று நம்பியிருந்தார். கடைசி நேரக் கலகத்தில் இவர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டது. இவர்கள் விட முக்கியமான நபர் ராஜகண்ணப்பன். முதன்முதலில் அமைந்த ஜெயலலிதா ஆட்சியில் பவர்ஃபுல்லான அமைச்சராக வலம்வந்தவர். யாதவ சமுதாய மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர். தி.மு.க., தனிக்கட்சி, மீண்டும் அ.தி.மு.க என்று பயணித்து, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தென் மாவட்டத்தில் பணியாற்றிவந்தார். ராமநாதபுரம், சிவகங்கை அல்லது மதுரை தொகுதியைக் கேட்டிருந்தார். ஆனால், பன்னீரால் ஒன்றும் செய்ய முடியாமல்போக, தி.மு.க–வில் ஐக்கியமாகி, கட்சியைக் கழுவிக்கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார். பல சீனியர்களின் கனவைக் கலைத்துள்ள ராஜ்சத்யனுக்கு, கட்சிக்குள் எதிர்ப்புக் கடுமையாக இருப்பதால், அவர்கள் தேர்தல் பணி செய்வது கஷ்டமே.

தீயா வேலை செய்யுறாரு குமாரு!

வேட்பாளர் நேர்காணல் முடித்து வெளியே வந்தபோது, ‘‘18 வயதிலிருந்து கட்சிப்பணியில் இருக்கிறேன்” என்று  சொன்ன பன்னீர்செல்வத் தின் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு இப்போது வயது 39. அப்போது முதல் இப்போதுவரை, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத் தகுதியான நபர், தான் மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் விதத்தில் பேசிவருகிறார் இவர். அதை, கட்சி சீனியர்கள் யாரும் ஏற்கவில்லை. நாற்பது வருடங்களாய்க் கட்சிக்கு உழைத்தவர்கள் இருக்கிறோம் என்று குமுறுகிறார்கள் அவர்கள். கட்சியின் சீனியர்களில் ஒருவரும், தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளருமான சையதுகான், கடைசிவரை எம்.பி சீட் தனக்குதான் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், ரவீந்திரநாத் குமார் தலைகாட்ட ஆரம்பித்ததும், அந்த ஆசையை விட்டுவிட்டார் சையதுகான். முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.டி.சிவகுமாரும், தேனி எம்.பி-யான பார்த்திபனும் எம்.பி சீட்டுக்கு முயற்சி செய்து தோல்வியடைந்தனர். கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையனும் தன் மகன் பால மணிமார்பனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று ‘மூவ்’ செய்தார். அனைவரின் முயற்சிகளும் தோற்று, தன் மகனுக்கு ‘சீட்’ வாங்கும் முயற்சியில் ஜெயித்துவிட்டார் ஓ.பி.எஸ். தேர்தல் பணிகளில் கட்சியினரின் ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியே!

வாரிசுகளால் வாய்ப்பு இழந்த சீனியர்கள்!

அப்போ அம்மா... இப்போ சும்மா!

தென்சென்னை தொகுதியில் 2014-ம் ஆண்டு, அ.தி.மு.க வேட்பாளராக ஜெயவர்த்தன் நிறுத்தப்பட்டபோது, அவருக்கு வயது 27. ஜெயலலிதாவிடம் போராடி, சீட் வாங்கினார், அப்பா ஜெயக்குமார். அப்போது ஜெயலலிதாவே நேரடியாக அறிவித்த வேட்பாளர் என்பதால், யாரும் எதிர்க்காமல் வேலைபார்த்தனர். இப்போதாவது வேறு சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று பலரும் போர்க்கொடி துாக்கினர். ஆனால், இப்போது ‘என் மகனுக்கு சீட் இல்லையெனில்...’ என்று ‘சும்மா’ ஒரு மிரட்டலிலேயே மீண்டும் சீட் வாங்கிவிட்டார் ஜெயக்குமார் என்று குமுறுகிறார்கள், ரத்தத்தின் ரத்தங்கள்.

“அப்பா அமைச்சர், மகனுக்கு மீண்டும் எம்.பி சீட் வாய்ப்பா?” என்ற குமுறல், தென்சென்னை முழுவதும் எதிரொலிக்கிறது. புறக்கணிக்கப்பட்ட அல்லது எதிர்பார்த்து ஏமாந்த சீனியர்களில் முக்கியமானவர், அ.தி.மு.க–வில் மூன்று முறை எம்.பி–யாக இருந்த மைத்ரேயன். முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கும் தென்சென்னைமீது கண் இருந்தது. இவர்களைத் தாண்டி ஆதிராஜாராம், கே.பி.கந்தன் போன்ற அ.தி.மு.க சீனியர்கள் பலரும் பணம் கட்டிக் காத்திருந்தனர். தனது அதிகாரம் மற்றும் பிடிவாதம் இரண்டையும் அ.தி.மு.க தலைமையிடம் காட்டி மகனுக்கு சீட்டை பறித்துச்சென்றுவிட்டார் ஜெயக்குமார் என்று புலம்புவது அ.தி.மு.க சீனியர்கள் மட்டுமல்ல, கூட்டணி வைப்பதற்கு முன்பே இந்தத் தொகுதியைத் தங்கள் தொகுதியாகவே நினைத்து வந்த பி.ஜே.பி–காரர்களும்தான்!

-செ.சல்மான், அ.சையது அபுதாஹிர்,  ஜெ.முருகன், எம்.கணேஷ், கோ.லோகேஸ்வரன்