அரசியல்
Published:Updated:

தேர்தல் ஆணையம் சொல்வது சரியா? - ராமநாதபுரம் வில்லங்கம்!

தேர்தல் ஆணையம் சொல்வது சரியா? - ராமநாதபுரம் வில்லங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் ஆணையம் சொல்வது சரியா? - ராமநாதபுரம் வில்லங்கம்!

தேர்தல் ஆணையம் சொல்வது சரியா? - ராமநாதபுரம் வில்லங்கம்!

மிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால், வழக்குகளைக் காரணம்காட்டி 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியிலும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகள், ‘சட்டசபைத் இடைத்தேர்தலுக்கு ஒரு நியாயம்; ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேறு நியாயமா?’ என்று கொந்தளிக்கின்றன. 

தேர்தல் ஆணையம் சொல்வது சரியா? - ராமநாதபுரம் வில்லங்கம்!

திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்த முடியாததற்கு, அந்தத் தொகுதிகளில் தேர்தல் மனு வழக்குகள் நிலுவையில் இருப்பதுதான் காரணம் என்று தேர்தல் ஆணையர் சத்தியப்ரதா சாஹு சொல்லியிருந்தார். ஆனால், ‘21 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று தி.மு.க அனைத்திலும் வெற்றிபெற்றால், ஆட்சியே மாறக்கூடும். இதன் காரணமாகத்தான், தேர்தல் ஆணையம் அடிப்படையற்ற காரணத்தைக் கூறுகிறது’ என்று குற்றம்சாட்டுகிறது தி.மு.க. அதேசமயம், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில், அ.தி.மு.க-வின் அன்வர் ராஜா வெற்றிபெற்றார். இந்தத் தேர்தல் வெற்றியில் முறைகேடு இருப்பதாக தி.மு.க-வின் முகமது ஜலீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

தேர்தல் ஆணையம் சொல்வது சரியா? - ராமநாதபுரம் வில்லங்கம்!

இதுகுறித்து, மனுதாரர் முகமது ஜலீல் தரப்பு வழக்கறிஞர் அழகு ராமன், “வெற்றிபெற்ற அன்வர் ராஜாவுக்கு எதிராகத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது, தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தது, மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசம்... ஆகியவற்றை முன்வைத்து, முகமது ஜலீல் உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அன்வர் ராஜா தரப்பு இந்த வழக்கை நடத்த இடைக்காலத் தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தில் அவர்களுக்கு இடைக்காலத் தடை கிடைத்தது. இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தடையை அன்வர் ராஜா தரப்பினர் நீட்டித்து வந்தனர். இதனால், இந்த வழக்கு முடிவுபெறாமல், இன்னும் நிலுவையில்தான் உள்ளது. ஆனால், அங்கு தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை” என்றார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பற்றி சட்டரீதியான விளக்கம் அளித்த முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், ‘‘தேர்தல் வெற்றி குறித்து வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தக் கூடாது என்று எந்த விதிமுறையும் சட்டமும் இல்லை. தேர்தலை நடத்த நேரடி நீதிமன்றத் தடை இருந்தால் மட்டுமே, அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்திவைக்க இயலும். இந்தியா முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் கணக்கெடுத்தால் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதை அறியலாம். இந்நிலையில், தேர்தல் ஆணையம் மூன்று சட்டசபை தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தலை நிறுத்தியிருப்பது, அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை, ஆணையத்தின் நடுநிலைமையைச் சந்தேகிக்கும்படி இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

- ஜெனிஃபர்.ம.ஆ