Published:Updated:

``விஜய் மல்லையா தப்பியோடக் காரணம், மோடியின் கடும் நடவடிக்கையே!" - அமித் ஷா 

``விஜய் மல்லையா தப்பியோடக் காரணம், மோடியின் கடும் நடவடிக்கையே!" - அமித் ஷா 
``விஜய் மல்லையா தப்பியோடக் காரணம், மோடியின் கடும் நடவடிக்கையே!" - அமித் ஷா 

``மோடி அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால்தான் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நிதி மோசடியாளர்கள் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார், பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா.

பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தீன தயாள் உபாத்யாயவின் 51-வது நினைவுதினம் நேற்று டெல்லியில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பி.ஜே.பி. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``தேர்தல் செலவுகளுக்காக, நாடு முழுவதுமுள்ள வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்கள் இருவர் இணைந்து ஆயிரம் ரூபாய் பணத்தை நமோ செல்லிடப்பேசி வழியாகக் கட்சிக்கு வழங்க வேண்டும். தேர்தல் நன்கொடை பெறுவதில் நமது கட்சி நேர்மையாக இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறும் நன்கொடையில் இல்லாது, தொண்டர்களின் பங்களிப்பால் பி.ஜே.பி. இயங்குகிறது என்பதைப் பெருமையுடன் அனைவரிடத்திலும் நாம் கூறவேன்டும். 

நாம் செல்லும் பாதையில் நேர்மை இல்லாவிட்டால், நமது லட்சியங்களை நல்வழியில் பெற இயலாது. தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறும் பணத்திலும், கறுப்புப் பணத்திலும் கட்சி இயங்கினால், நமது லட்சியங்களை நாம் நேர்மையான வழியில் அடைய முடியாது. நேர்மையான வழியில் எவ்வாறு பயணிப்பது என்பதற்கு மற்ற கட்சிகளுக்கு பி.ஜே.பி. வழிகாட்டியாக இருக்க வேண்டும். தேர்தல் செலவுகளை எவ்வாறு குறைப்பது மற்றும் அதற்கான நன்கொடையை நேர்மையான வழியில் பெறுவது குறித்து பொது விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை அனைத்துக் கட்சிகளுக்கும் முன்னோடியாக பி.ஜே.பி. தொடங்க வேண்டும். அரசியலில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக, தேர்தல் செலவுகளுக்காக ரொக்கமாக நன்கொடை பெறுவதை இரண்டாயிரம் ரூபாயாகக் குறைத்து பிரதமர் மோடி அறிவித்தார். அவருடைய ஆட்சியில் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மோடி அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால்தான் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நிதி மோசடியாளர்கள் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்" என்றார்.