Published:Updated:

``மொத்தம் எத்தனை அ.தி.மு.க-தான்யா இருக்கு? " - கலாய்த்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை அ.தி.மு.க தான் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் விழாவில் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அ.தி.மு.கவைக் கலாய்த்துள்ளார்.

``மொத்தம் எத்தனை அ.தி.மு.க-தான்யா இருக்கு? " - கலாய்த்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
``மொத்தம் எத்தனை அ.தி.மு.க-தான்யா இருக்கு? " - கலாய்த்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

மிழ்நாட்டில் மொத்தம் எத்தனை அ.தி.மு.க-தான் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விழாவில் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கிண்டலாகக் கலாய்த்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இளைஞர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் மாநிலத் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசியச் செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ``நம்ம குழந்தைங்க எல்லாம் நல்லா இருக்கணும்னா அ.தி.மு.க. ஆட்சியும், பி.ஜே.பி. ஆட்சியும் முதலில் ஒழியணும். அப்போதான் நாட்டு மக்கள் வளர்ச்சியை நோக்கிப் போக முடியும். காங்கிரஸ் ஆட்சியின்போது, கிராமப்புற விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. மோடி ஆட்சியில் அந்தத் திட்டத்தை சரிவர அமல்படுத்துவதில்லை. வேலை செய்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்குப் பல நாள்கள் சம்பளம் வழங்குவதுமில்லை.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, தேர்தலைச் சந்தித்தபோது ஜவுளித் தொழிலுக்கு விதிக்கப்பட்டு இருந்த சென்வாட் வரியை முற்றிலுமாக நீக்குவோம் என்றோம். நாங்கள் வெற்றி பெற்றவுடன், அந்தத் துறைக்கு நான் மத்திய அமைச்சராக இருந்தபோது முழுமையாக நீக்கினோம். அதேபோல் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்வோம் என்ற உத்தரவாதத்தை ராகுல்காந்தி கூறி உள்ளார். இந்தியாவின் இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த இந்திரா காந்தியின் மறு உருவமாக அவரது பேத்தி பிரியங்கா காந்தி உருவெடுத்துள்ளார். அவரது வருகையால் மத்தியில் ஆளும் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது.

தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை அ.தி.மு.க இருக்குதுன்னு தெரியல. சசிகலா தலைமையில் ஒண்ணும், எடப்பாடி பழனிசாமி -பன்னீர்செல்வம் தலைமையில் ஒண்ணும், தீபா தலைமையில் இன்னொன்ணும்னு நிறைய கட்சிகள் சுத்திகிட்டு இருக்கு. ஒட்டுமொத்த ஊரையும் கொள்ளையடிக்கறதுக்குத்தான் இவங்க எல்லாம் தனித்தனியா இருக்காங்க. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு உங்கள் வாக்கினைச் செலுத்த வேண்டும். மத்தியில் பிரதமராக ராகுல் வரவேண்டும். மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். நல்லாட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என்றார்.

குஷ்பு, ``தமிழ்நாட்டில் முன்பக்கம் வர முடியாமல், பின்பக்கம் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது பி.ஜே.பி. ஹிட்லர் போன்றவர்கள் ``தான் மட்டும்தான் இருக்கணும்னு" நினைப்பார்கள். பிரதமர் மோடியும் அந்த நினைப்பில்தான் இருக்காரு. காங்கிரஸ் கட்சிக்குப் பெருகி வரும் ஆதரவைக் கண்டு, பிரதமர் மோடி பயந்து போய் உள்ளார். ‘கோ பேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. மோடியின் கையாட்டி பொம்மையாக இங்குள்ள அ.தி.மு.க. அரசு உள்ளது. மக்கள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் வெளிநாடு சுற்றுவது, பிரபலங்களுடன் போட்டோ எனத் தன்னுடைய இமேஜை பில்டப் செய்வதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறார் மோடி.

ஐந்து ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியைத் தரவில்லை என்கிறார்கள். அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறார்கள்?. தமிழக அரசின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக எப்படி உயர்ந்தது?. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வரலாம். கமல் வருவது அவரது விருப்பம். ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும். ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக அமர வேண்டும்" என்று பேசினார்.