Published:Updated:

வெற்று அறிவிப்பு கருணாநிதிக்கு கை வந்த கலை: ஜெயலலிதா சாடல்

வெற்று அறிவிப்பு கருணாநிதிக்கு கை வந்த கலை: ஜெயலலிதா சாடல்
வெற்று அறிவிப்பு கருணாநிதிக்கு கை வந்த கலை: ஜெயலலிதா சாடல்
வெற்று அறிவிப்பு கருணாநிதிக்கு கை வந்த கலை: ஜெயலலிதா சாடல்

சென்னை: "வெறும் அறிவிப்பு என்பது கருணாநிதிக்கு தான் கை வந்த கலை" என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

பொது மக்களிடமிருந்து வரப் பெறும் கோரிக்கைகள், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை வகுத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் நான் நாள்தோறும் புதிய அறிவிப்புகளைத் தொகுத்து, அறிக்கை வெளியிட்டு வருகிறேன். இதற்கு பொதுமக்கள் இடமிருந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் இடமிருந்தும் மிகுந்த வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது. இதனைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இவற்றை அறிக்கைகள் வாயிலாகவும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும் விமர்சித்து வருகின்றார்.

சட்டமன்ற விதி 110-இன் கீழ் நான் வெளியிடும் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் வருமா?  அல்லது இதற்கென தனியாக நிதி ஒதுக்கப்படுமா? என்று கேட்டுவிட்டு, ஏகடியமாக "வெறும் அறிவிப்பு" என்பதின் கீழ் வருமா? முதலமைச்சரை இந்த அறிவிப்புக்காக பேரவையில் பாராட்டுகிறார்களே அவர்களுக்குத் தான் வெளிச்சம் என்று கருணாநிதி  தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், கோடிக்கணக்கான  ரூபாய்க்கான அறிவிப்புகள் அன்றாடம் முதலமைச்சரால் செய்யப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான அறிவிப்புக்களை  எல்லாம் நிதிநிலை அறிக்கையிலேயே ஏன் செய்யவில்லை? துறைக்கான அமைச்சர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்த போது இந்த அறிவிப்புகளை எல்லாம் அமைச்சர்கள் ஏன் செய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐந்து முறை முதலமைச்சராகவும், நான்கு முறை நிதி அமைச்சராவும் பதவி வகித்த கருணாநிதி, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் தெரியாமலேயே அத்தனை ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாரா? நிதி ஒதுக்கம் பற்றி அறியாமலேயே கோப்புகளில் கையெழுத்து இட்டாரா? அல்லது தற்போது வேண்டுமென்றே இவ்வாறு கேட்கிறாரா? என்பது தெரியவில்லை. ஒவ்வொரு நிதியாண்டிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் போது, தொடர் திட்டங்களுக்குத் தேவையான நிதி, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். இதே போன்று, பகுதி 2 திட்டங்களின் கீழ், புதிதாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வரவு செலவு திட்டத்தில் உள்ள அறிவிப்புகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

##~~##
செலவு ஏற்படக் கூடும் என்று அனுமானிக்கக் கூடிய இனங்களுக்கு அடையாள ஒதுக்கீடாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு, திட்ட நிதி தேவை முழுமையாக வரையறுக்கப்படாத நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கம் செய்ய இயலாது. எனவே தான், நிதி ஒதுக்கம் இல்லாத புதிய திட்டங்களுக்கு தனியே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அவை "புதுப் பணிகளாகவும்", "புது துணைப் பணிகளாகவும்" கருதப்பட்டு திருத்திய மதிப்பீட்டில் தேவையான நிதி  முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படும். அவசரமாக அப்புதிய திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டிய நிலையில் எதிர்பாரா செலவு நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டு செலவு செய்யப்படும்.
பின்னர், இதற்கான நிதி, முதல் துணை மதிப்பீடு மற்றும் இறுதி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு சட்டப் பேரவையின் அனுமதி பெறப்படும் என்பதை பேரவைக்கு வராமல் வெளியே இருக்கும் உறுப்பினர் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் அறிவிக்கும் அறிவிப்புகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எந்த விதமான சந்தேகமும் கருணாநிதிக்கு எழ வேண்டியதில்லை என்பதால் தான், ஏற்கெனவே கடந்த இரண்டாண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். வெறும் அறிவிப்பு என்பது கருணாநிதிக்கு தான் கை வந்த கலை.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.