Published:Updated:

`தி.மு.க பூத் கமிட்டிகளில் அ.தி.மு.க!' - அறிவாலயத்தை மிரள வைத்த அதிர்ச்சிப் புகார்

`தி.மு.க பூத் கமிட்டிகளில் அ.தி.மு.க!' - அறிவாலயத்தை மிரள வைத்த அதிர்ச்சிப் புகார்
`தி.மு.க பூத் கமிட்டிகளில் அ.தி.மு.க!' - அறிவாலயத்தை மிரள வைத்த அதிர்ச்சிப் புகார்

"எங்கள் ஒன்றியத்தில் நடைபெறும் தவறுகளைத் தெரிவித்து ஒரு நல்ல தீர்வு கிடைக்கப்படும் என்ற நம்பிக்கையில் வந்த எங்களை உதாசினப்படுத்தியதால் மனதளவில் வேதனையோடு உள்ளோம்."

தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சிப் புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர் ராமநாதபுரம் மாவட்ட உடன்பிறப்புகள். `ஊராட்சி செயலாளர்களை ஆலோசிக்காமலேயே கிராம சபைக் கூட்டத்தை நடத்திவிட்டார்கள். வாக்குச்சாவடி முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பலரும் அ.தி.மு.க-வினர்' என அறிவாலயத்துக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர் தி.மு.க-வினர்.  

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. `தி.மு.கவோடு அணி சேரக் கூடிய கட்சிகள் எவை?', `அ.தி.மு.க அணியில் அங்கம் வகிக்கப் போகும் கட்சிகள் எவை?' என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியில் வரவில்லை. ஒவ்வொரு கட்சியும் தங்களது நிலைப்பாட்டுக்கு ஏற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. `தேர்தல் தேதி வெளியாவதற்குள் பூத் கமிட்டிகளை பலப்படுத்திவிட வேண்டும்' என்ற நோக்கில் ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பொறுப்பாளர்களை நியமித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பூத் கமிட்டிப் பணிகளை ஆய்வு செய்தனர். `ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 20 முகவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில், ஒருவர் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அந்தந்த பூத்துகளுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 4 பெண்கள் இடம்பெற வேண்டும்' எனக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதை உறுதி செய்யும் வகையில் அறிவாலயத்தால் நியமிக்கப்பட்ட 80 தொகுதி பொறுப்பாளர்களும் ஆய்வு செய்து தலைமைக்கு அறிக்கை அளித்தனர். 

``அறிவாலயத்துக்கு அளிக்கப்பட்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் பலவும் தவறானவை" என ஆதங்கத்தோடு பேசினார் தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர். ``அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிப் பணிகள் நிறைவறைந்துவிட்டதாகத் தலைமைக்குத் தெரிவித்துள்ளனர். பல மாவட்டங்களில் பூத் கமிட்டியைச் சரியாக அமைக்கவில்லை. வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே ஆட்களை நியமித்துள்ளனர். பல தொகுதிகளில் பெயரளவுக்குக்கூட இளைஞர்களை நியமிக்கவில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பூத் கமிட்டிகளில் உள்ளனர். ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மாவட்டச் செயலாளர் கொடுத்த பட்டியலை அப்படியே தலைமைக் கழகத்தில் சமர்ப்பித்துவிட்டனர். இதுபோன்று அலட்சியமாக இருந்ததால்தான், ஆர்.கே.நகரில் பூத் கமிட்டி வாக்குகளே வந்து சேரவில்லை என ஆதங்கப்பட்டார் ஸ்டாலின். பூத் கமிட்டியில் ஏராளமான குறைபாடுகள் அரங்கேறியுள்ளன" என்றவர், ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியத்திலிருந்து அறிவாலயத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை நம்மிடம் கொடுத்தார். 

அந்தக் கடிதம் தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ளவை பின்வருமாறு: 

`ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைக் கலந்து ஆலோசிக்காமல் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை வாக்குச்சாவடிக் குழுவில் உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, பலரும் பூத் கமிட்டியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒன்றியப் பொறுப்பாளர் சக்தியிடம் கேட்டபோது, `நான் தலைவரின் நேரடிப் பார்வையில் நியமனம் செய்யப்பட்டவன். என்னை எதிர்த்தவர்கள் யாரும் கட்சியில் நீடிக்க முடியாது' எனப் பேசுகிறார். இங்குள்ள சில நிர்வாகிகள் அழகிரி பக்கமும் விசுவாசத்தைக் காட்டுகின்றனர். இதுதொடர்பாக பூத் கமிட்டி ஆய்வுக் குழுவினரிடம் முறையிட்டும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக கழகத் தலைவர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் பலமுறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம். இதை நேரில் எடுத்துச் சொல்வதற்காகக் கடந்த ஜனவரி 21-ம் தேதி நயினார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றியக் கழக நிர்வாகிகள், 35 ஊராட்சி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 40 பேர் சென்னை வந்தோம். 

அங்கு தலைவர் இல்லை என்ற தகவல் கிடைத்தது. அடுத்ததாக முதன்மைச் செயலாளரை சந்திக்கலாம் என அவரையும் அணுகினோம். எங்களை சந்திக்க முடியாது என அவர் கூறிவிட்டார். நாங்கள் நீண்ட தூரத்திலிருந்து வருகிறோம். விவசாயப் பணிகளை விட்டுவிட்டு வந்துள்ளோம். மீண்டும் சென்னை வருவது என்பது சிரமமான காரியம் என மன்றாடிக் கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இதனால் மிகவும் மனச்சோர்வோடு ஊர் திரும்பினோம். எங்கள் ஒன்றியத்தில் நடைபெறும் தவறுகளைத் தெரிவித்து ஒரு நல்ல தீர்வு கிடைக்கப்படும் என்ற நம்பிக்கையில் வந்த எங்களை உதாசினப்படுத்தியதால் மனதளவில் வேதனையோடு உள்ளோம். விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் எங்களது பரமக்குடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதைத் தங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளனர். இந்தக் கடிதத்துடன் நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள தேத்தங்கால் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நபரை தி.மு.க முகவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தையும் இணைத்துள்ளனர். 

பூத் கமிட்டி குளறுபடி குறித்து நம்மிடம் பேசிய அறிவாலய நிர்வாகி ஒருவர், ``ஊராட்சி செயலாளர்களை விட்டுவிட்டு ஸ்டாலினை அழைத்து ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்திவிட்டார்கள். கட்சியின் ஆணிவேராக ஊராட்சி செயலாளர்கள்தான் இருக்கின்றனர். பல பூத் கமிட்டிகளில் ஊராட்சி செயலாளர்களையே போடவில்லை. அவர்களை ஒரு பொருட்டாக மாவட்டச் செயலாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. வாக்குச்சாவடிகளில் யாரைப் போட வேண்டும் என ஊராட்சி செயலாளர்களிடம் இருந்துதான் பெயர்ப் பட்டியலை வாங்க வேண்டும். இங்கு அப்படி ஒரு நடைமுறையே பின்பற்றப்படவில்லை" என்றார் குமுறலோடு. 

அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "தி.மு.க-வைப் பொறுத்தவரை 2019 மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது. இதில் வென்றால் தமிழக அரசியல் மட்டுமல்ல, இந்திய அரசியலையும் நாம் தீர்மானிக்கலாம். தோற்றால் நமது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே, வாக்குச்சாவடி கமிட்டிகளை பலப்படுத்தி வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்" என்று அழுத்தமாக கூறியிருக்கிறார். 

``வாக்குச்சாவடி குளறுபடிகளைக் களைந்தால் மட்டுமே தலைமை நினைப்பது சாத்தியமாகும்" என்கின்றனர் உடன்பிறப்புகள். 

அடுத்த கட்டுரைக்கு