Published:Updated:

"கமல் மீதான விமர்சனம் அரசியல் நாகரிகமாற்றது" - மக்கள் நீதி மய்யம்

"கமல் மீதான விமர்சனம் அரசியல் நாகரிகமாற்றது" - மக்கள் நீதி மய்யம்
"கமல் மீதான விமர்சனம் அரசியல் நாகரிகமாற்றது" - மக்கள் நீதி மய்யம்

தி.மு.க-வுக்கும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் இடையே கடந்த சில நாள்களாக வார்த்தைப் போர், அறிக்கை மோதல்கள் வலுத்து வருகின்றன. இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பிப்ரவரி 8-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட கே.எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய வேண்டும்" என அழைப்பு விடுத்தார். 

இதற்குப் பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன், ``அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். அந்தக் கட்சிகளின் ஊழல் பொதியை நாங்கள் சுமக்க முடியாது" என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து 11.2.2019 அன்று தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. ``திரையில் பல்வேறு வேடங்களைக் காட்டினார் கமல். அதை நடிப்பாற்றல் என்று பாராட்டினோம். இப்போது அரசியல் பிரவேசம் நடத்தி, அதே போல வேடங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் `பத்மஸ்ரீ' பட்டம் பெற்ற போதும், பாராட்டு விழாவுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதியை அழைத்தபோதும் ஊழல் கட்சியாக தி.மு.க. தோன்றவில்லை. ஆனால், தற்போது அவருக்கு தி.மு.க, ஊழல் கட்சியாக காட்சியளிக்கிறது என்றால், அது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்க முடியுமா?" என அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், ``பி.ஜே.பி-யின் அழுத்தத்தின் காரணமாக, கமல் தன்னிலை மறந்து பிதற்றுகிறார். காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார்". என்றும் காட்டமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான மோதல் ஒருபக்கம் உள்ள நிலையில் திருவள்ளூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண விழாவில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். ஸ்டாலினும், கமல்ஹாசனும் அருகருகே அமர்ந்திருந்ததோடு ஒருவருக்கொருவர் எந்தவேறுபாடும் இல்லாமல் அரசியல் மாச்சர்யங்களை மறந்து உரையாடிக் கொண்டனர்.

தி.மு.க. - மக்கள் நீதி மய்யம் இடையேயான மோதலை தமிழக அரசியல் களம், உற்று கவனித்துக்கொண்டிருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸிடம் இதுபற்றிக் கேட்டோம். ``தி.மு.க., அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எங்கள் கட்சித் தலைவர் கமல் இருக்கிறார். எங்களைப்பற்றி விமர்சனம் செய்வதில் தி.மு.க. ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருந்து வருகிறது. கூட்டணி வைக்கப்போவதில்லை எனக் கமல் அறிவித்தவுடன், ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாகவே முரசொலியில் இதுபோன்று கட்டுரை எழுதியுள்ளனர். மேலும், அதில் கூட்டணிக்கு ஏதோ முயற்சி செய்து நாங்கள் தோல்வியடைந்த விரக்தியில் பேசுவதைப் போன்று எழுதியுள்ளனர். முதலில் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே எங்களுடைய கட்சியைப் பற்றி எந்த விமர்சனத்தையும் தி.மு.க. வைக்கவில்லை. இந்த யுக்தியே தி.மு.க-வின் நிலைப்பாட்டை நமக்கு மிகவும் வெளிப்படையாகக் காட்டுகிறது. 

இது ஒருபுறம் என்றால், அரசியல் கட்சித் தலைவர்களைக் கட்டுரை மூலமாகக் கடுமையாக விமர்சிப்பதை தி.மு.க., காலங்காலமாகவே செய்து வந்துள்ளது. ஏற்கெனவே அப்படியான விமர்சனங்களில் இடம்பெற்ற தலைவர்களில் மறைந்த தலைவர்கள் காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலரும் அடங்குவர். அப்படித்தான், கமல் குறித்தும் இப்போது முரசொலியில் எழுதியுள்ளனர். ஆனால், இப்போது எங்கள் தலைவரைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரை அரசியல் ஆரோக்கியமானதாக இல்லை. குறிப்பாக, `நாயின் வாலை நிமிர்த்த இயலுமா?' என்று கேட்பார்கள். அதிசயமாக நிமிர்ந்து நின்ற வாலைப் பார்த்து, எழுத்தாளர் வ.ரா.வைப்போல இதோ ஓர் அதிசய மனிதர் தோன்றியிருக்கிறார் என வியந்தோம். ஆனால், நாய் வாலில் கட்டிய மட்டை விலகியதால் வால் மீண்டும் வளைந்துள்ளது!' என்று எழுதப்பட்டுள்ளது.

ஓர் அரசியல் கட்சியின் தலைவரை இவ்வாறு ஒப்பிட்டு எழுதுவது, எந்த மாதிரியான அரசியல் நாகரிகம் என்று தெரியவில்லை. அதேபோல், ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கமல் அமர்ந்து பேசிக் கொள்வது, நட்பு ரீதியிலானது. அத்தகைய நட்புக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நட்பு ரிதீயாக பேசிக் கொள்கிறார்கள் என்பதால், சம்பந்தப்பட்ட கட்சியினர் செய்யும் தவறுகளை எடுத்துரைக்காமல் இருக்க முடியாது. அந்த அடிப்படையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி, தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு கட்சிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசி வருகிறது" என்றார்.