Published:Updated:

ஒன்றிய செயலாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க.வினர் போயஸ்கார்டன் முற்றுகை!

ஒன்றிய செயலாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க.வினர் போயஸ்கார்டன் முற்றுகை!
ஒன்றிய செயலாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க.வினர் போயஸ்கார்டன் முற்றுகை!

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றிய செயலாளரை மாற்றக்கோரி, அ.தி.மு.க.வினர் போயஸ் கார்டனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருப்பவர் மோகன். இவருக்கு எதிராக அ.தி.மு.க. தொகுதி செயலாளர் கனகதுரை தலைமையில் ஒரு எதிர்கோஷ்டி செயல்பட்டு வருகிறது. நீண்ட நாட்கலாக மோகனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை இருந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கையை கூறுவதற்காக கனகதுரை தலைமையில் 78 கிளைச் செயலாளர்கள், 2 பஸ், ஒரு வேனில் வத்தலகுண்டில் இருந்து கிளம்பி சென்னை வந்தனர். அதற்குள் மோகன் தரப்பினர், கனகதுரை கோஷ்டி மாவட்ட செயலாளரை கண்டித்து, முதல்வர் வரும் வழியில் கருப்புக்கொடி காட்ட இருக்கிறார்கள் என சென்னைக்கு தகவல் கொடுத்து விட்டனர்.

##~~##
உடனே உஷாரான உளவுத்துறை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கூடுவாஞ்சேரி அருகே தொகுதி செயலாளர் கனகதுரை மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனத்தை மறித்த காவல் துறையினர் அவர்களை திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அவர்களை அங்கிருந்து அகற்றி, அருகிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.
பின்பு, 'இத்தனை பேர் மொத்தமாக சென்று பார்க்க முடியாது. ஐந்து பேர் மட்டும் வாருங்கள்' என ஐந்து நபர்களை மட்டும் காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் மண்டபத்தில் இருந்தவர்களை தொடர்பு கொண்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 'எல்லோரும் சென்னைக்கு வாங்க. நாம் பேசிக்கொள்ளலாம்' என கூறியிருக்கிறார். ஆனால், 'உங்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் அம்மாவை சந்திக்க வந்திருக்கிறோம்' என கூறி விஸ்வநாதனை சந்திக்க மறுத்து விட்டனர்.
பிறகு அவர்கள் மண்டபத்திலிருந்து விடுபட்டதும் அனைவரும் போயஸ் கார்டனை நோக்கி சென்றுள்ளனர். தற்போது போயஸ்கார்டன் அருகே ஒன்றிய செயலாளரை மாற்றுங்கள் என்ற பேனரை பிடித்தபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-ஆர்.குமரேசன்