Published:Updated:

தருமபுரியா.. ஆரணியா..? - அன்புமணி ராமதாஸ் வியூகம் என்ன?

தருமபுரியா.. ஆரணியா..? - அன்புமணி ராமதாஸ் வியூகம் என்ன?
தருமபுரியா.. ஆரணியா..? - அன்புமணி ராமதாஸ் வியூகம் என்ன?

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி அல்லது ஆரணியில் போட்டியிட இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை திமுக தலைமையிலான கூட்டணி மட்டுமே உறுதியாகியிருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் இது. இதனால் யார் யார்  எந்தெந்தக் கூட்டணியில் இடம்பிடிப்பார்கள் என்பது இதுவரை உறுதியாகமல் இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வும் தமிழத்தில் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

தமிழகத்தில் நான்குமுனை போட்டி உருவாகும் என்றிருக்கும் இந்த சூழ்நிலையில், பா.ம.க எந்தக் கூட்டணியில் இடம்பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக  மற்றும் அதிமுக-வோடு இனி கூட்டணி கிடையாது என்று பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தது பாமக. அப்போது எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. கிட்டத்தட்ட 2.56 வெற்றி சதவிகிதத்தை கைப்பற்றி இருந்தது. பதினாறாவது மக்களவைத் தேர்தலில் பாமக-வின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது எந்த கூட்டணியையும் முடிவு செய்யாத பா.ம.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிகிறது. ஐந்து தொகுதிகளைக் கேட்க முடிவெடுத்திருக்கிறது பா.ம.க தலைமை. இதில் தருமபுரி அல்லது ஆரணியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவிருப்பதாக தெரியவந்துள்ளது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில்தான் கடந்தமுறையும் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் பா.ம.க நான்கு முறை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இருப்பதாக அன்புமணி மீண்டும் தருமபுரியைத் தேர்ந்தெடுக்கிறார்.

ஆனால், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக-வின் முதல்வர் வேட்பாளராகக் களமிறிங்கிய அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் தொகுதியில் இரண்டாவது இடத்தையே பிடித்தார். அதே தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரத்தில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடலாமா என்று அன்புமணி தலைமையோடு பேசி வருகிறார். தருமபுரியா அல்லது ஆரணியா என்பது கூட்டணி முடிவானதும் உறுதியாகிவிடும். மேலும், கூட்டணி குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள் பாமக-வினர்.