Published:Updated:

பி.ஜே.பி-யை உண்மையில் எதிர்க்கிறாரா துணை சபாநாயகர் தம்பிதுரை..?

பிஜேபியின் செயல்பாடுகள் மீது தம்பிதுரை எழுப்பும் கேள்விகள் அரசியல் மேடைகளில் அல்ல என்பது நாம் கவனிக்க வேண்டியது. ஒரு கட்சியின், ஒரு மாநிலத்தின் பிரதிநிதியாக மக்களவையில் அவர் பேசுகிறார். அப்படியிருக்க அ.தி.மு.க தலைமையின் கண்ணசைவு இல்லாமல் அவர் இப்படிப் பேசியிருக்க வாய்ப்பு குறைவே.

பி.ஜே.பி-யை உண்மையில் எதிர்க்கிறாரா துணை சபாநாயகர் தம்பிதுரை..?
பி.ஜே.பி-யை உண்மையில் எதிர்க்கிறாரா துணை சபாநாயகர் தம்பிதுரை..?

.தி.மு.க எம்.பி-யும், மக்களவை துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை, கடந்த சில மாதங்களாகவே மத்திய பி.ஜே.பி. அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். பி.ஜே.பி. ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சி ஒன்றும் இல்லை. ஆனாலும், தம்பிதுரை சார்ந்த அ.தி.மு.க-வில் இருந்தோ, அமைச்சர்களோ, முதல்வரோ எதற்காகவும் பி.ஜே.பி-யை எந்தவொரு விமர்சனமும் செய்வதில்லை. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பி.ஜே.பி-க்கு எதிரான தம்பிதுரையின் செயல்பாடு கவனிக்கத்தக்கது. அதிலும் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, பி.ஜே.பி-யை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் தம்பிதுரை. 
``இயற்கைப் பேரிடர்களின்போது, தமிழகத்திற்குப் போதிய நிவாரணத்தை பி.ஜே.பி. அரசு அளிக்கவில்லை. தமிழகத்திற்கு நிவாரணமாக ரூ.12,000 கோடி மத்திய அரசு கொடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்தத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை" என்று குறைகூறினார். ``மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை முழுக்கமுழுக்க நாடகம். இது, பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கைபோல இருக்கிறது" என்றார். ஜி.எஸ்.டி, தூய்மை இந்தியா என பி.ஜே.பி. அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய தம்பிதுரை, ``மக்களுக்கு இந்தத் திட்டங்களினால் என்ன பயன்?" எனக் கடுமையான தொனியில் விமர்சித்தார். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்ற இடப்பகிர்வு கணக்குகள் ஒருபுறம் நடைபெறுவதாகக் கூறப்படும் இந்தச் சமயத்தில் பி.ஜே.பி. அரசின் மீதான தம்பிதுரையின் விமர்சனம், அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ``பொருளாதாரத்தை வைத்து இடஒதுக்கீடு வழங்குவது சரியான அணுகுமுறை அல்ல. சாதி ஒழியும்போதுதான், இடஒதுக்கீடும் ஒழியும். சரி, பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்துதான் இடஒதுக்கீடு கொடுப்பார்கள் எனில், மோடி வாக்குறுதியளித்த 15 லட்சம் ரூபாயைக் கொடுத்திருந்தால், பொருளாதாரத்தில் எல்லோரும் தன்னிறைவு பெற்று இடஒதுக்கீடு தேவையே இருந்திருக்காது" என்றார்.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பி.ஜே.பி. அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டைத் தெரிவித்து வருகின்றன. ஆனால், ரஃபேல் விவகாரம் பற்றி அ.தி.மு.க-வைச் சேர்ந்த யாரும் கருத்துக் கூற விரும்பாத நிலையில், கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது பேசிய தம்பிதுரை ``மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசு, அதை ஏன் ரஃபேல் ஒப்பந்தத்தில் கடைப்பிடிக்கவில்லை? ஏன் இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கவில்லை?" எனக் கேள்வியெழுப்பி அதிர்ச்சியைக் கூட்டினார். அப்போது, தம்பிதுரையின் பேச்சைப் பெரிதும் பாராட்டி மேசையைத் தட்டினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இதனால், `தம்பிதுரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவர்' என்கிற முடிவுக்கு நாம் வந்துவிட இயலாது. காரணம், இந்தக் கூட்டத்தொடரில், ``மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும், இப்போதை பி.ஜே.பி. கூட்டணி அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை" என்று குறிப்பிட்டு அதிர வைத்தார். 

பி.ஜே.பி. அரசின் செயல்பாடுகள் குறித்து தம்பிதுரை எழுப்பும் கேள்விகள், அரசியல் மேடைகளில் அல்ல என்பது நாம் கவனிக்க வேண்டியது. ஒரு கட்சியின், ஒரு மாநிலத்தின் பிரதிநிதியாக மக்களவையில் அவர் பேசுகிறார். அப்படியிருக்க, அ.தி.மு.க. தலைமையின் கண்ணசைவு இல்லாமல் அவர் இப்படிப் பேசியிருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஒருவகையில் பி.ஜே.பி. மீது அ.தி.மு.க-வுக்கு எழுந்துள்ள அதிருப்தியாகக்கூட நாம் இதைப் பார்க்கலாம். 

தம்பிதுரையின் மக்களவை பேச்சைத் தொடர்ந்து, தமிழக சட்டசபையில் பேசிய மாநில அமைச்சர் டி. ஜெயக்குமார், ``தம்பிதுரை பேசியதில் தவறொன்றுமில்லை" எனக் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தம்பிதுரையின் நிலைப்பாடு குறித்து இன்னும் தெளிவாக நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி. கூட்டணி என்பது உறுதியாகி விட்டால் ``தம்பிதுரையின் அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கும்?" என்பதை தமிழகத்தில் அரசியலை உன்னிப்பாகக் கவனித்துகொண்டிருக்கும் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.