Published:Updated:

`ஹெல்மெட் வாங்க பணம் இல்லைனா, 'பைக்' எப்படி வாங்குனீங்க?' - பொதுமக்களை கேள்வி கேட்ட கிரண்பேடி

`ஹெல்மெட் வாங்க பணம் இல்லைனா, 'பைக்' எப்படி வாங்குனீங்க?' - பொதுமக்களை கேள்வி கேட்ட கிரண்பேடி
`ஹெல்மெட் வாங்க பணம் இல்லைனா, 'பைக்' எப்படி வாங்குனீங்க?' - பொதுமக்களை கேள்வி கேட்ட கிரண்பேடி

”ஹெல்மெட் வாங்க பணம் இல்லைனா, 'பைக்' எப்படி வாங்கினீங்க?” என்று பொதுமக்களிடம் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

புதுச்சேரியில், 'இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவேண்டியது கட்டாயம்' எனக் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தச் சட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார் முதல்வர் நாராயணசாமி. இரண்டு வாரங்களுக்கு முன், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதைப் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் கடந்த 11-ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் லைசென்ஸும் பறிமுதல்செய்யப்படும் என்றும் டி.ஜி.பி சுந்தரி நந்தா உத்தரவு பிறப்பித்தார்.

அதற்கு முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்டாயம் ஹெல்மெட் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே சமயம், ஸ்பாட் ஃபைன் விதிக்கும்போது பொதுமக்களின் நேரம் விரயமாகும் என்பதால், ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன எண்களைக் குறித்துவைத்து, நீதிமன்றம் மூலம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் கிரண் பேடி தெரிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 20,000 பேர்களின் வாகன எண்கள் குறிக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்துக் காவல் துறை ஈடுபட்டிருக்கிறது.

கிரண் பேடியின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், ”எங்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்கு அரசிடம் பணம் இல்லை என்று எப்படிச் சொன்னீர்களோ, அதேபோல ஹெல்மெட் வாங்குவதற்கும் எங்களிடம் பணம் இல்லை” என சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ள கிரண் பேடி, “கடந்த இரண்டு தினங்களில் ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறியதாக, சுமார் 30,000 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்காக, புதுச்சேரியில் நடமாடும் நீதிமன்றம் கொண்டுவர மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டத்தையும் விதிமுறைகளையும் பாதுகாக்கவேண்டியவர்களே அதை எதிர்ப்பது ஏன்? முதலமைச்சரா... துணைநிலை ஆளுநரா? என்பது இந்த விவகாரத்தில் முக்கியம் இல்லை. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் முக்கியம். கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பாகும். ஹெல்மெட் வாங்க பணமில்லை என்று கூறுபவர்களுக்கு... வாகனம் வாங்கவும் பெட்ரோல் நிரப்பவும் மட்டும் எப்படி பணம் வந்தது?” என்று கேள்வி எழுப்பினார்.