Published:Updated:

அரசு கஜானாவில் 5,200 கோடி ரூபாய் காலி... அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணிக்கு ஜாலி!

அரசு கஜானாவில் 5,200 கோடி ரூபாய் காலி... அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணிக்கு ஜாலி!
அரசு கஜானாவில் 5,200 கோடி ரூபாய் காலி... அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணிக்கு ஜாலி!

த்தியிலும், மாநிலத்திலும் அரசு அமைத்துள்ள பி.ஜே.பி-யும், அ.தி.மு.க-வும் தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்நிலையில்தான், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிலும், மாநில அரசின் பட்ஜெட்டிலும், தமிழகத்திலுள்ள ஒரு கோடியே 35 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் ரொக்கப்பரிசை வழங்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதைக் கொடுப்பதற்கான வேலையும் வேகமாகவே நடைபெறுகிறது.

ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. பிப்ரவரி முதல் தேதியன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் மொத்தம் 6,000 ரூபாய் ரொக்கமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் இத்திட்டத்தை அறிவித்ததை, `நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி. வெளியிட்ட தேர்தல் அறிக்கை’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்த ரொக்கத்தொகைக்கான பயனாளிகள் பட்டியலை இறுதி செய்யவே, பல மாதங்களாகி விடும் என்று கருதப்பட்டது.

வருங்கால நிதியாண்டிற்கான பட்ஜெட்டில்தான், இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளதால், தேர்தலுக்குப் பின்பே, இந்த நிதி கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் முதற்கட்ட தவணையான 2,000 ரூபாயை, 75 லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எல்லா வேலைகளும் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, இந்த அறிவிப்பு வெளியானது. 

அதே நாளில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறி, தமிழகத்தில் இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான பட்டியல் தயாரிப்புக்கான அரசாணை (எண்:42) தமிழக அரசின் வேளாண்துறை சார்பில், பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து, வரும் மார்ச் 31 வரையிலான முதல் நான்கு மாதங்களுக்கான தவணையை வழங்குவதற்கு, பயனாளிகள் பட்டியல் தயாரிப்பதற்குக் கண்காணிப்புக் குழு அமைப்பதற்கு, இந்த அரசாணை வழி வகுத்துள்ளது. அதாவது, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை, இந்த நிதியாண்டிலேயே தொடங்குவதற்கு, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. 

இரண்டு ஹெக்டேருக்குக் குறைவான விவசாய நிலம் உள்ள குடும்பங்களின் பட்டியலில், 75 லட்சம் விவசாயிகள் இருப்பதாகக் கணக்கிட்டு, அவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்ய, தலா 5 ரூபாய் வீதமாக, மூன்று கோடியே 75 லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்ட வேகத்தில், பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20-ம் தேதிக்குள், இத்திட்டத்தின் முதல் தவணைத் தொகையை வழங்க வேண்டுமென்று, வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு `மிக அவசரச் சுற்றறிக்கை’யை மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கெனவே, சிறு, குறு விவசாயிகளின் பட்டியல் இருப்பதால், அந்த விவசாயிகளிடம் படிவங்களைக் கொடுத்து, தகவல்களைப் பெற்று, `எக்ஸெல்’ படிவத்தில் தட்டச்சு செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான மாதிரிப்படிவமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், 2015–2016-ம் ஆண்டு நடந்த 10-வது வேளாண்மைக் கணக்கெடுப்பின்படி, 3,76,147 சிறு, குறு விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்களால் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் படிவங்களை நிரப்பி வாங்கி, வரும் 20-ம் தேதிக்குள், அவர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்திவிட வேண்டுமென்பதில் தமிழக அரசு அதிதீவிரமாகச் செயல்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

முதல் தவணையான 2,000 ரூபாயை, முதலில் கொடுத்து விட்டு, மீதமுள்ள இரு தவணைத் தொகையான 4,000 ரூபாய் கிடைக்க வேண்டுமெனில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.–பி.ஜே.பி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென்று, திண்ணைப் பிரசாரம் மேற்கொள்வதே, ஆளும்கட்சிகளின் அசத்தல் திட்டமென்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. கடந்த ஜனவரியில், பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய், மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் விவசாயிகளுக்கான (பிஎம்–கிசான்) நிதி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாய் தரப்படவுள்ளது. தற்போது, 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தலா 2,000 ரூபாய் வழங்கப்படுமென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

பொங்கல் பரிசுக்காக 2,500 கோடி ரூபாய், 75 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 1,500 கோடி ரூபாய், 60 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 1,200 கோடி ரூபாய் என மொத்தம் 5,200 கோடி ரூபாய் நிதி, மத்திய-மாநில அரசுகளால் தமிழக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

வழக்கமாக, தேர்தலின்போது ஒவ்வோர் ஓட்டுக்கும் இவ்வளவு என்று, அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்கப்படும்; ஆனால், இப்போது தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்பே தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே, அரசின் கஜானாக்களில் உள்ள பணத்தை `அபிஷியலாக’ லஞ்சமாக வழங்கப்படுகிறது என்று, சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்கியதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அப்போதே அதைக் கடுமையாக விமர்சித்தது. `இந்த நிதியைக் கட்சி நிதியிலிருந்து வழங்கியிருந்தால் கேள்வி கேட்க வாய்ப்பில்லை' என்று கூறிய நீதிபதிகள், `எந்த நோக்கத்துக்காக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது; இந்த நிதியை, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தச் செலவிடலாமே’ என்று கேள்வியெழுப்பி இருந்தது நினைவு கூரத்தக்கது.

பொங்கலின் போது, 1000 ரூபாய் கொடுத்ததே, இப்படி விமர்சனத்துக்குள்ளான நிலையில், தேர்தல் மிகவும் நெருங்கி விட்ட சூழலில், மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து தலா 2,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்திருப்பதை, நீதிமன்றம் எப்படிப் பார்க்கிறது என்ற எதிர்பார்ப்பு, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், பொது நல மனுத் தாக்கல் செய்வதற்கு, சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் முயற்சி செய்து வருகிறார்.

கே.கே.ரமேஷ் கூறுகையில், ``இது, வாக்காளர்களுக்கு அரசால் வழங்கப்படும் மறைமுக லஞ்சம் என்பதே எங்களது குற்றச்சாட்டு. ஏற்கெனவே, கடுமையான கடன் சுமையில் இருக்கும் தமிழக அரசு, இந்த நிதியை வழங்குவது, தேர்தலில் வாக்குகளைக் கவரும் உள்நோக்கத்தில்தான். இதுதொடர்பாக, நான் தாக்கல் செய்த மனுவை, `இது அரசின் கொள்கை முடிவு’ என்று கூறி, நிராகரித்து விட்டனர். ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சில உத்தரவுகளை ஆதாரமாகக் கொண்டு, மீண்டும் மனுத் தாக்கல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்’’ என்றார்.

பல்வேறு பொது நல மனுக்களைத் தாக்கல் செய்துள்ள கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் கூறுகையில், ``சட்டரீதியாக இதைத் தடுத்து நிறுத்த முடியாது. அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட வாய்ப்பில்லை. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில், `இலவசத் திட்டங்கள், கடன் தள்ளுபடி’ என்று வாக்குறுதி அளிப்பதே, கடந்த 2016-ல், உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளானது. நிறைவேற்ற வாய்ப்பே இல்லாத பல திட்டங்களை, தேர்தல் வாக்குறுதியில் கொடுப்பதே தவறு; அதையே தடுத்து நிறுத்த வேண்டுமென்றுதான், தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இப்போது பணம் கொடுப்பது, வாக்காளர்களை ஈர்ப்பதற்கான ஒரு யுக்தி என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், சட்டரீதியாக இதைத் தவறு என்று சொல்ல முடியாது!’’ என்றார். தேர்தலையொட்டியே, இந்த ரொக்கத் தொகைகள் தரப்படுகின்றன என்பதால், ஆண்டுதோறும் இந்தப் பொங்கல் பரிசு, தொழிலாளர்களுக்கான சிறப்பு நிதி வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே அதிகாரிகள் அடித்துச் சொல்கின்றனர். ஆக, மொத்தத்தில், தமிழகத்தில் அ.தி.மு.க.–பி.ஜே.பி. கூட்டணிக்கு வாக்குகளை அள்ளுவதற்காக, மத்திய-மாநில அரசுகளின் கஜானாக்களிலிருந்து 5,200 கோடி ரூபாய் வாரி வழங்கப்பட்டுள்ளது. 

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்திருக்கிறார்கள். இவர்கள் கேட்ட வரம் கிடைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு வரும் மே மாதம் வரை காத்திருந்தே ஆக வேண்டும்.

ஜெராக்ஸ் வச்சே அடிச்சிட்டாங்க!

`வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்' என்ற பட்டியலே தவறானது; கார் வைத்துள்ள பலரும், இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதலில் இந்தப் பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டியது அவசியமாகும். பட்டியலில் இருக்கும் பலரும், அரசு தரும் ரொக்கப் பரிசுகளை வாங்குவதில்லை என்பதே நிஜம். 

கடந்த மாதத்தில், பொங்கல் பரிசாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 1000 ரூபாய் கொடுத்ததிலேயே, பல லட்சம் பேருக்குச் செல்ல வேண்டிய தொகை, முறையாகச் சேரவில்லை. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, பலரிடம் ஆதார் ஜெராக்ஸ்களை வாங்கி வைத்துள்ள ரேஷன் கடைக்காரர்கள், கட்சிக்காரர்கள் பலரும் சேர்ந்து பணத்தை அடித்து விட்டனர். அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து, பணத்தைக் கேட்டு வாங்கியவர்கள் மிகச்சிலரே. இதை உணவு வழங்கல் துறையிலுள்ள நேர்மையான அதிகாரிகள் பலரே ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், இந்த முறை விவசாயிகள், தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.